என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறியது.
    • வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. 2-வது போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

    நேற்று நடந்த 3-வது 'லீக்' ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறியது. வங்காளதேசம்-இலங்கை அணிகள் நாளை மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 'பி' பிரிவில் இருந்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது அணியாக இருக்கும்.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணி கள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் செயல்பாடு அந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது.

    பலவீனமான ஆங்காங்குக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று 'சூப்பர் 4' சுற்றுக்கு செல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ள இந்திய கோப்டன்களில் வீராட் கோலி சாதனையை முறியடிப்பார்.

    வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி 'டை' ஆனது. ரோகித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளார். 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது.

    ஆங்காங்கை வீழ்த்தினால் ரோகித் சர்மா 31 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். கோலி 3-வது இடத்துக்கு பின் தங்குவார்.

    டோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது தலைமையில் 28 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவில்லை. ஒரு போட்டி 'டை' ஆனது.

    ஆனால் வெற்றி சதவீதத்தை பொறுத்த வரை ரோகித் சர்மா தான் முன்னிலையில் இருக்கிறார். அவர் 83.33 சதவீதத்துடன் உள்ளார். டோனியின் வெற்றி சதவீதம் 59.28 ஆகவும், வீராட் கோலிக்கு 64.58 ஆகவும் இருக்கிறது

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதன் 4வது லீக் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் இன்று மோதுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

    முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 127 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

    • மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆப்கானிஸ்தானின் அதிரடி பந்துவீச்சில், வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். 53 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்காளதேச அணி அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. ஆறுதல் அளித்த மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முஜிப்பூர் ரஹ்மான்

    முஜிப்பூர் ரஹ்மான்

    மறுமுனையில் மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. தொடர்ந்து ஆடிய மொசாடெக், 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி  7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

    • முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார்.
    • இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார். இதனால் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர், இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.


    இன்று நடைபெறவுள்ள பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகளான அஷ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் ஆகியோர் கொரிய ஜோடியான பேக் ஹா நா மற்றும் லீ யூ லிம் உடன் மோத உள்ளனர். 

    • ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது.
    • இந்தியா-ஆங்காங் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பையை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.

    இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும்.

    தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஷார்ஜாவில் இன்று நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்துக்கும் அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. வங்காளதேசம் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    துபாயில் நாளை நடைபெறும் 4-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணிகள் மோதுகின்றன.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. இதனால் பலவீனமான ஆங்காங்கை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தார். ஜடேஜா பேட்டிங்கிலும், புவனேஸ்வர் குமார் பந்து வீச்சிலும் சாதித்தனர்.

    முதல் போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் ரோசித்சர்மா வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப்பண்ட், தீபக் ஹூடா, அஸ்வின், பிஷ்னோய் ஆகியோருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

    இந்தியா-ஆங்காங் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் போட்டியில் 2 முறை விளையாடி உள்ளன. இந்த 2 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி விஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • மிட்செல் மார்ஷ்-க்கு பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.

    ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத்தில் மிட்செல் மார்ஷ் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து வரும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது. இந்த வெற்றிக்கு 30 வயதான அவர் முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த ஆண்டு அவருக்காக பெரிய திட்டங்கள் உள்ளன. எனவே அவரை சரி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி புதன்கிழமை நாளை நடைபெறவுள்ளது.

    • 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
    • அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் விராட் கோலியின் இடம் கேள்வி குறியாகவே இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்.

    ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 35 ரன் எடுத்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது அவரது ஆட்டம் முன்புபோல் அதிரடியாக இல்லை. இதனால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

    தனது பேட்டிங்கை சீர் செய்ய அவர் ஏதாவது ஒரு வகையான போட்டியில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளது. 20 ஓவர் அதிரடியான ஆட்டம் என்பதால் அதில் இருந்து விலகலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலியை 20 ஓவரில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் அவரது இடமும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

    • ஷாஹீன் ஷா அப்ரிடியை மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகினார். அவருக்கு வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அவர் அமீரகத்தில் தங்கள் அணியிருடன் தங்கி காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், அவரை லண்டனுக்கு அனுப்பி உயர் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நஜீபுல்லா சூம்ரோ கூறும்போது, ஷாஹீன் அப்ரிடிக்கு தடையற்ற, அர்ப்பணிப்புள்ள முழங்கால் நிபுணர் பராமரிப்பு தேவைப்படுகிறது.

    உலகின் சிறந்த விளையாட்டு மருத்துவ வசதிகளை லண்டன் வழங்குகிறது. வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஷாஹீன் முழு உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல் சுற்றில் ஜார்ஜியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
    • 1959 ஆண்டு சீன வீரர் மெய் ஃபூ சி, விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

    நியூயார்க்:

    நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 31வது நிலை வீரரான ஜார்ஜியாவைச் சேர்ந்த நிகோலோஸ் பசிலாஷ்விலியை, சீன வீரர் வூ யிபிங் எதிர்கொண்டார்.

    22 வயதான வூ, முதல் சுற்றில் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 1959 ஆண்டு விம்பிள்டன் போட்டியில் சீன வீரர் மெய் ஃபூ சி, ஒரு போட்டியில் வென்றிருந்தார்.

    அதன் பின்னர் சீன வீரர்கள் யாரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சீன வீரர வூ யிபிங் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
    • பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் சாத்துமாநகர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மொத்தம் 46 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.

    இதில் மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

    வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் ஏ.தங்கம், சென்னை வாழ் நாடார் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மணலி பாலா,மணலி சேக்காடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் பாண்டியன், ஆலோசகர் மாடசாமி கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆசிரியர் சுஜாதா வரவேற்றார். முடிவில் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் அரிஹரன் நன்றி கூறினார்.

    ×