search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஹர்திக் பாண்ட்யா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்- பாபர் அசாம்
    X

    ஹர்திக் பாண்ட்யா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்- பாபர் அசாம்

    • எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது.
    • கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம்.

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ரன்னும் ( 4 பவுண்டரி , 1 சிக்சர்) , இப்திகார் அகமது 28 ரன்னும் (2 பவுண்டரி ,1 சிக்சர்) எடுத்தனர்.

    புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 26 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 3 விக்கெட்டும் , அர்ஷ்தீப் சிங்குக்கு 2 விக்கெட்டும் , அவேஷ்கானுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் ஆடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து ஹர்திக் பாண்ட்யா அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜடேஜா 29 பந்தில் 35 ரன்னும் ( 2 பவுண்டரி , 2 சிக்சர் ) , விராட் கோலி 35 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். முகமது நவாஸ் 3 விக்கெட்டும் , நஷீம் ஷா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தானை இந்தியா பழிதீர்த்து கொண்டது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    148 ரன் இலக்கை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பணிகளை கொடுத்திருந்தேன். அதனை அவர்கள் சரியாக செய்தனர்.

    கடந்த ஒரு ஆண்டாக வேகப்பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். சில சமயங்களில் நாங்கள் சவாலுக்கு உள்ளானோம். ஆனால் அந்த சவால்கள் எங்களை முன்னோக்கி கொண்டு செல்லும்.

    ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியும் அவருக்கு நன்றாக அமைந்தது. அவரது பேட்டிங் திறமை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். அணிக்கு திரும்பியதில் இருந்து அவர் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆல்ரவுண்டு பணியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 'அவர் கூறும் போது, நிலமையை மதிப்பிட்டு நமது திறமையை வெளிப்படுத்துவது முக்கியமானது.

    என்னை விட பந்து வீச்சாளர் கூடுதலான நெருக்கடியில் இருப்பதாக நான் உணர்ந்தேன். கடைசி ஓவரில் எனக்கு ஒரு சிக்சர் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டேன்' என்றார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும் போது, 'எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். வேகப்பந்து வீரர்கள் நன்றாக செயல்பட்டனர்.

    கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்' என்றார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×