என் மலர்
விளையாட்டு
- டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
- இகா ஸ்வியாடேக், பிளிஸ்கோவா கால் இறுதிக்கு முன்னேற்றினர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ்டியாபோவை எதிர் கொண்டார்.
இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். டியாபோ கால்இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ருப்லெவை சந்திக்கிறார்.
9-வது வரிசையில் உள்ள அவர் 6-4 , 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சின்னா (இத்தாலி) வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து ) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜிலி நீமெயரை சந்தித்தார். இகா 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஸ்வியாடெக் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர் கொள்கிறார். பெகுலா 4-வது சுற்றில் 6-3, 6-2 என்ற கணக்கில் 21-வது வரிசை யில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவை (குரேஷியா) தோற்கடித்தார்.

பிளிஸ்கோவா - இகா ஸ்வியாடேக்
மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் டேனிலி கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
இன்னொரு போட்டியில் 22-வது வரிசையில் உள்ள கரோலின் பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-7, (5-7), 6-2 என்ற கணக்கில் அசரென்சாவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.
கால் இறுதி ஆட்டத்தில் ஷபலென்கா-பிளிஸ்கோவா மோதுகின்றனர்.
- டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.
- இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் டாசில் வெற்றி பெறும் அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் பெரேட்டினி வெற்றி பெற்றார்.
- போகினோவை வீழ்த்திய பெரேட்டினி காலிறுதிக்குள் நுழைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயினின் அலெஜாண்டிரியோ டேவிடோவிச் போகினோ ஆகியோர் மோதினர்.
முதல் செட்டில் தோல்வி அடைந்த பெரேட்டினி அடுத்த 2 செட்களை தனதாக்கினார். நான்காவது செட்டை மீண்டும் போகினோ கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பெரேட்டினி வென்றார்.
இறுதியில், 3-6, 7-6, 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போகினோவை வென்ற பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினார்.
- சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் காலிஸ்தான் என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது.
- எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது.
அங்கு நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவற விடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முக்கிய போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து சமூக ஊடகத்தில் சிலர் கடுமையாக அவரை தாக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது. எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த தவறான தகவலானது சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சூழ்நிலைக்கும் வழிவகுப்பதுடன் சிங்கின் குடும்பத்தினர் மீதும் பாதிப்பு ஏற்பட கூடும் என மத்திய அரசு நம்புகிறது என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்க்கிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தில் உள்ளார்.
- டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மார்ட்டின் கப்தில் 2-வது இடத்தில் உள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கினர். 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் அரை சதம் மற்றும் அதிக ரன்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றனர்.
இந்திய வீரர்களையடுத்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்து வீரர் கப்தில் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
டி20 போட்டியில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில், விராட் கோலி (32), ரோகித் சர்மா (31), பாபர் அசாம் (27) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா (3548) ரன்களுடன் முதல் இடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே கப்தில் (3497), விராட் கோலி (3462) ரன்கள் எடுத்துள்ளனர்.
- அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
- நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது.
மும்பை:
ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 60 (44) ரன்கள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை... அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-
யாரும் வேண்டுமென்றே கேட்சை விடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது.
அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- கன்னியாகுமரியை சேர்ந்த அவர் சேபர் தனிபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
- இதனால் பெபிட் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
சென்னை:
23 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை குவைத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் கடந்த 2 தினங்களாக பாட்டி யாலா, புனே, குஜராத்தில் நடந்தது.
தமிழக வீரர் பி.பெபிட் இந்த தேர்வு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிய போட்டிக்கு தேர்வு பெற்றார். கன்னியாகுமரியை சேர்ந்த அவர் சேபர் தனிபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதனால் பெபிட் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
- கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா) 4-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஷாங்சூயை எதிர்கொண்டார். இதில் கவூப் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
கோகோ கவூப் கால் இறுதி ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கார்சியா 4-வது சுற்றில் 6-4 , 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை (அமெரிக்கா) வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் அஜ்லா டோமலிஜலோவிச் (ஆஸ்திரேலியா) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் லுட்மிலா சம்சோனாவை (ரஷிய) வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 23-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் ரஷியாவை சேர்ந்த கரென் கச்சனோவை எதிர்கொள்கிறார்.
கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.
5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்ற கணக்கில் மவுட்டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- பாகிஸ்தானிடம் மோதும் ஆட்டம் எப்போதுமே அதிகமான நெருக்கடி கொண்டதாகும்.
- பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான், நவாஸ் சிறப்பாக ஆடினார்கள்.
துபாய்:
பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
பாகிஸ்தானிடம் மோதும் ஆட்டம் எப்போதுமே அதிகமான நெருக்கடி கொண்டதாகும். பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான், நவாஸ் சிறப்பாக ஆடினார்கள். அவர்களது பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தது.
விராட் கோலியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. அவரது ஆட்டத்தால்தான் 181 ரன்னை எடுக்க முடிந்தது. மிடில் ஓவரில் விக்கெட் சரிந்தது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, "ரிஸ்வான்-நவாஸ் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் திருப்பு முனை. சுழற் பந்தை எதிர்கொள்வதில் நவாஸ் கெட்டிக்காரர் என்பதால் முன்னதாக அவரை களம் இறக்கினோம்" என்றார்.
- எனது போன் நம்பர் பலரிடம் இருக்கிறது.
- டோனியுடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன் எடுத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது.
போட்டியின் முடிவில் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், எம்எஸ் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்தார். நிறைய பேரிடம் எனது எண் உள்ளது, ஆனால் யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. அவருடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுடன் போட்டி கூடுதல் நெருக்கடியாகும். இதனால் இந்த ஆட்டத்தில் யாருக்கும் தவறு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்றைய போட்டியின் போது அர்ஷ்தீப் கேட்சை தவற விட்ட போது ரோகித் சர்மா கோபத்துடன் எரிச்சல் அடைந்தார்.
- ரிஷப் பண்ட் அந்த மாதிரியான ஷாட்டை ஆட வேண்டியதன் அவசியம் குறித்து வாதிட்டார்.
துபாய்:
ஆசிய கோப்பையில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
துபாயில் நடந்த 'சூப்பர் 4' சுற்று ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி 44 பந்தில் 60 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 16 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), லோகேஷ் ராகுல் 20 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷதாப் கான் 2 விக்கெட்டும், நசிம் ஷா முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரஜப், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் 182 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது நவாஸ் 20 பந்தில் 42 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிஷ்னோய், ஹர்திக் பாண்ட்யா, யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மீது கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். அவர் 12 பந்தில் 14 ரன் (2 பவுண்டரி) எடுத்தார். அவர் தேவையில்லாமல் மோசமான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார்.
ரிவர்ஸ் சுவிப் ஆடி ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ஆடுகளத்தில் இருந்து வந்த அவர் மீது ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். வீரர்கள் அறைக்கு வந்த அவரிடம் இந்த மாதிரியான ஷாட்டை விளையாடியது ஏன்? என்று கேட்டு ரிஷப் பண்டிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதற்கு ரிஷப் பண்ட் அந்த மாதிரியான ஷாட்டை ஆட வேண்டியதன் அவசியம் குறித்து வாதிட்டார். இருவரும் விவாதம் செய்யும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
All The Best @RishabhPant17 🥺🥺#RohitSharma #RishabPant #INDvsPAK pic.twitter.com/LwDu5sqInF
— 𝓒𝓱𝓲𝓴𝓾 (@Chiku2324) September 4, 2022
11 பேர் கொண்ட அணியில் ரிஷப்பண்ட் இடம் ஏற்கனவே கேள்வியாகி வருகிறது. அந்த இடத்துக்கான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இதே போல நேற்றைய போட்டியின் போது அர்ஷ்தீப் கேட்சை தவற விட்ட போது ரோகித் சர்மா கோபத்துடன் எரிச்சல் அடைந்தார்.
'சூப்பர் 4' சுற்றில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை எதிர் கொள்கிறது. இறுதி போட்டிக்கு நுழைய வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.
- 4 புள்ளியுடன் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி கால்இறுதிக்கு வந்து விடும்.
- ‘சி’ பிரிவில் ஏற்கனவே ஐதராபாத் அணி (9 புள்ளி) கால்இறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும்.
இம்பால்:
20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, கவுகாத்தி, இம்பால் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இம்பாலில் 'சி' பிரிவில் இன்று (மாலை 6 மணி) நடக்கும் கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி., உள்ளூர் அணியான நெரோகா எப்.சி.யுடன் மோதுகிறது.
'சி' பிரிவில் ஏற்கனவே ஐதராபாத் அணி (9 புள்ளி) கால்இறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். 4 புள்ளியுடன் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி கால்இறுதிக்கு வந்து விடும். 'டிரா' செய்தாலும் போதுமானது தான்.
ஏனெனில், 'டிரா'வில் முடியும் பட்சத்தில் சென்னை, ஆர்மி ரெட், நெரோகா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது கோல் வித்தியாசம் பார்க்கப்படும். அந்த வகையில் சென்னை அணியின் கையே வலுவாக ஓங்கி நிற்கிறது.
சென்னை அணியின் பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறும் போது, 'இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். அதற்கு ஏற்ப தயாராகி இருக்கிறோம். வீரர்கள், அணிக்காக சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்' என்றார்.






