என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், அரையிறுதி ஆட்டத்தில் கார்சியாவை சந்தித்தார்.
    • இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அமெரிக்க ஓபனில் இறுதிக்கு நுழைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், பிரான்சின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார்.

    இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டியாபோ, ரஷியாவின் ரூப்லெவ் உடன் மோதினார்.
    • இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இதில், ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் கச்சனோவ், 7-5, 4-6, 7-5, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் கிர்கியோசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் உடன் மோதினார். இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவ்வை வீழ்த்தி வெற்று பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதியில், ஸ்பெயினின் அல்காரஸ் கார்பியா, இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் கார்பியா 6-3, 6-7, 6-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார்.

    மேலும் ஒரு காலிறுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இதில் பெரெட்டினியை 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வென்று ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நேற்று கோலி 61 பந்தில் 122 ரன்கள் குவித்தார்.
    • விராட் கோலி இதுவரை 71 சதங்கள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார்.

    விராட் கோலி இதுவரை 96 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 32 அரைசதம் உள்பட 3,584 ரன்கள் எடுத்துள்ளார்.

    முதலிடத்தில் ரோகித் சர்மா (3,620), மூன்றாவது இடத்தில் கப்தில் (3,497) ஆகியோர் உள்ளனர்.

    • இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
    • ராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆட்டம் மீண்டும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை.
    • சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடர் பைனல் போட்டி நடந்தது.

    சூரிச்:

    சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 111 ரன்களை மட்டுமே எடுத்தது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். இதனால் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்ராகிம் சட்ரன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர்.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சூப்பர்-4 சுற்றில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட முற்பட்டு 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி சதம் கடந்தார். 53 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்க்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆவேஷ் கான் இன்னும் பூரணமாக குணமடையவில்லை.
    • இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். இந்திய அணியில் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆவேஷ் கான் இன்னும் பூரணமாக குணமடையவில்லை. அதனால் அவரை ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

    இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறுகையில், 'நாங்கள் முதலில் பேட்டிங் செய்து, மீண்டும் எங்களுக்கான சவால் இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம். ரோஹித் இங்குள்ள கடினமான சூழ்நிலைகள் மற்றும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க விரும்புகிறார். உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தயாரிப்புகளை ஒவ்வொருவரும் இறுதி செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் வலுவான அணியாக வளர்வோம்' என்றார்.

    • பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார்.
    • கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவை எதிர் கொண்டார்.

    இதில் இகா 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.

    பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அவரது முதல் அரையிறுதி கனவு கலைந்தது.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.

    இதில் ஷபலென்கா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) , இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 9-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா)-பிரான்செஸ் டியாபோ (அமெரிக்கா) மோதினார்கள்.

    இதில் டியாபோ 7-6 (7-3), 7-6, (7-0), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 22-வது வரிசையில் உள்ள அவர் 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரபெல் நடாலை வீழ்த்தி இருந்தார். தற்போது ருப்லெவை தோற்கடித்து உள்ளார்.

    டியாபோ முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது. ரூப்லெவின் முதல் அரை இறுதி கனவு தகர்ந்தது. அவர் 6-வது தடவையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.

    டியாபோ அரை இறுதியில் அல்காரஸ் (ஸ்பெயின்) அல்லது சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.

    • தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
    • இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், ஆங்காங் முதல் சுற்றில் வெளியேறின.

    'சூப்பர் 4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோற்றது.

    நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. 2 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் 11-ந்தேதி நடை பெறும் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

    இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இதே நிலை தான். இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    'சூப்பர் 4' ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய மூன்று 20 ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    • ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது.
    • எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும்.

    ஷார்ஜா:

    ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் வெளி யேறியது.

    இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியும், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமதுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதி கொண்டனர்.

    19-வது ஓவரில் ஆசிப் அலி அவரது பந்தில் 'சிக்சர்' அடித்தார். இதனால் அவர் பரீத் அகமதுவை சீண்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஆசிப் அலி அவுட் ஆனதால் அவரை பரீத் அகமது சீண்டினார். விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் பரீத் அகமது ஆவேசமாக கத்தினார்.

    அப்போது அவருக்கும், ஆசிப் அலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடிப்பது போன்ற நிலை உருவானது. பிரீத் அகமதுவை தனது பேட்டால் ஓங்கி அடிக்கும் வகையில் ஆசிப் அலி மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள், சக வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆசிப் அலிக்கு எஞ்சிய ஆசிய கோப்பை போட்டியில் தடை விதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைமை நிர்வாகி ஷபிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது. எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும். பந்து வீச்சாளருக்கு விக்கெட் கைப்பற்றியதை கொண்டாட உரிமை உண்டு. உடல் ரீதியான செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார். 

    • மோதலில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ஷார்ஜாவில் நடந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கினர்.

    இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் மைதானத்துக்கு வெளியே சாலையில் மோதிக் கொண்டனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ×