என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பட்லர் - அலெக்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர். 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும். 

    • விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதம் அடித்துள்ளார்.
    • அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

    அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும் விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து குப்தில், பாபர் ஆசம் உள்ளனர். 

    • தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார்.

    டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவுர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ரன்களை இந்திய அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் ரசிகையான நடாஷா இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார்.
    • 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர்.

    20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 153 என்ற இலக்கை துரத்தியதில் அவர்கள் 7 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

    இந்த போட்டியில் பெரிதும் வைரலானது பாகிஸ்தான் ரசிகை ஒருவர். பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் ரசிகையான நடாஷா பாகிஸ்தானுடன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார். பாபர் ஆசம் தலைமையிலான அணி ரோகித் சர்மா தலைமையிலான அணியை வெற்றி பெறும் என கூறினார். நம்பிக்கையுடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும். நாம் அவர்களை வீழ்த்த வேண்டும்.

    பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையே முன்னாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் எதிர்நோக்கி உள்ளனர். அதுமட்டுமன்றி பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மாத்யூ ஹைடன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சளரான சோயப் அக்தரும் இந்தியவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். எனவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

    • இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது.
    • நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.

    டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் சாம்பியனுக்கு போட்டியிடும்.

    நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 153 இலக்கை 19.1 ஓவரில் எட்டியது.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த வெண்டும் என கோடான கோடி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில், நேற்றைய போட்டிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ''நீங்கள் சிறந்த முறையில் தோல்வியில் இருந்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளீர்கள். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுன் என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற போட்டிகளில் நாம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய திட்டம் என்ன?'' என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் ''இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது. எந்த அணி வருவது என்பது விஷயம் அல்ல. நாங்கள் எங்களுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த தொடரில் நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.

    இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டால், நீங்கள் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டம். இதுபோன்ற ஆட்டத்தைத்தான் நாங்கள் 3-4 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதை அப்படியோ தொடர் பார்ப்போம்'' என்றார்.

    • முதல் கட்டத்தில் 84 தொகுதியின் வேட்பாளர்களும், 2-வது கட்டத்தில் 76 தொகுதி வேட்பாளர்கள் விவரத்தையும் பாஜக வெளியிட்டுள்ளது.
    • 160 வேட்பாளர்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    இந்தநிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மொத்தம் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    முதல் கட்டத்தில் 84 தொகுதியின் வேட்பாளர்களும், 2-வது கட்டத்தில் 76 தொகுதி வேட்பாளர்கள் விவரத்தையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    இதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ரிவபா கடந்த 2019-ம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார்.

    கட்சியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் விரம்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    குஜராத் முதல் அமைச்சர் பூபேந்திர படேலுக்கு மீண்டும் டிக்கெட் கொடுத்து உள்ளது. அவர் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    160 வேட்பாளர்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 38 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

    வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எஸ்.சி. பிரிவை சேர்ந்த 13 பேருக்கும், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 24 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரிஷப் பண்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

    அடிலெய்டு:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது அரைஇறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் தினேஷ் கார்த்திகா அல்லது ரிஷப் பண்டா என்ற நிலையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

    • இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும்.
    • ஹர்திக்கை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழஙகப்படுமா? என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும். 2 சுழற்பந்து வீரர்கள் விளையாட வேண்டுமா? அல்லது ஒரு சுழற்பந்து வீரருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசையிலும், ரிஷப் பண்ட் 5-வது வரிசையிலும் ஹர்திக் பாண்ட்யா 6-வது வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7-வது வரிசையிலும் விளையாடலாம். பேட்டிங் வரிசையும் வலுவாக இருக்கும்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இதனால் அவரை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
    • சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 இல் 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.

    சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்து உள்ளது. அப்போதுதான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.

    சமீபத்தில், சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார்.

    இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர். சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர். சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.

    சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவார். பாபாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

    • நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன்.
    • மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.

    நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    கோடான கோடி ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:-

    ஹிந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னுக்கு முன்னேறிவிட்டோம். உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்தை வீழ்த்தி நீங்கள் மெல்போர்ன் வர மனதார வாழ்த்துகிறேன். மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.

    தற்போது 2022-வது வருடம். வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன். இன்னொரு முறை மோதப் போகிறோம். நமக்கு இன்னும் ஒரு போட்டி தேவை. உலகம் முழுவதும் மூச்சு விட முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
    • பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    சிட்னி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டேரியல் மிச்சேல் 35 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். ஷகீன்ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் பாபர் அசாம் 42 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி), முகமது ஹாரிஸ் 26 பந்தில் 30 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்) போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 2009-ல் கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி 3 முறை அரை இறுதியில் (2010, 2012, 2021) தோற்று இருந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர் கொள்கிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் பாபர் அசாம் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 3 போட்டிகளில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கிறது.

    முதல் 6 ஓவரில் எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீரர்கள் இறுதியில் நன்றாக முடித்து வைத்தனர்.

    முதல் 6 ஓவரில் அதிரடியாக ஆடுவது என்று திட்ட மிட்டோம். அதன்படி செயல்பட்டோம். இந்த வெற்றி தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். ஆனால் அதே நேரத்தில் இறுதி போட்டியில் கவனம் செலுத்துவோம்.

    இறுதி போட்டியில் எந்த அணியை எதிர் கொள்வோம் என்பதை இப்போதே சொல்ல இயலாது. எந்த அணி வந்தாலும் நாங்கள் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்.

    இறுதிப்போட்டி சவால்களை சமாளிக்க முயற்சி செய்வோம். பல கட்டங்களை கடந்து முன்னேறி உள்ளதால் இறுதி போட்டியில் அழுத்தம் இருக்கும்.கடந்த 3 ஆட்டத்தில் வெளிப்படுத்திய அதே திறமையை இறுதி போட்டியில் வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார்.

    இதே போல பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    • நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறியது.
    • டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 2வது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிறது.

    அடிலெய்டு:

    8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

    வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

    2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார். புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால் எதிரணியை அச்சுறுத்தலாம்.விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான்.

    எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×