என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கடந்த வாரம் வெளியான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறினார் சூர்யகுமார்
    • பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச டி௨௦ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். விராட் கோலி தற்போது 653 புள்ளிகளுடன் பட்டியலில்11-வது இடத்தில் உள்ளார். 

    • ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது.
    • விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று நடந்தது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    நாளை 2-வது அரையிறுதி ஆட்டம் அடிலெய்டில் நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அடிலெய்டில் கோலி 3 சதம், 4 அரைசதம் அடித்திருக்கிறார். 4 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி, 2 சதம் அடித்திருக்கிறார்.

    டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, 2 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 2 அரைசதம் அடங்கும். இதனால், அரையிறுதியில் விராட் கோலி பெரிதாக சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்து வந்தார். அப்போது ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்து சிறிது நேரம் மைதானத்திலேயே அப்படியே அமர்ந்து இருந்தார்.

    ஆனால் விராட் கோலி மைதானத்தை விட்டு செல்லாமல் மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். எனினும் விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.

    • நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது.
    • முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி 105 ரன்கள் குவித்தது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது.

    பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது.

    நாளை 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி 13-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்.

    • நிதானமாக ஆடிய வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்னில் வெளியேறினார்.
    • அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    New Zealand set a target of 160 runs for Pakistanடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக பின் ஆலன்- கான்வே களமிறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின் ஆலன் 3-வது பந்தில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கான்வே உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பவர் பிளேயின் கடைசி பந்தில் கான்வே ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த வந்த அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து வில்லியம்சன் - மிட்செல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக ஆடிய வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடி காட்டிய 30 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. 

    • இங்கிலாந்து அணியில் மார்க் வுட், மலான் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது
    • உலகத்தரம் வாய்ந்து ஆடுகளத்தில் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம்

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடைபெறும் அடிலெய்டில் நாளை மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால், மழை வராமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என சொல்ல இயலாது. அடிலெய்டு மைதானம் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ராசியானது. மேலும், சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

    இவர்கள் இருவரையும் விரைவாக வெளியேற்றினால்தான் இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என இங்கிலாந்து நினைத்தால் அதில் தவறு ஏதும் இல்லை.

    இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது:-

    மார்க் வுட், தாவித் மலான் ஆகியோர் காயத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்று பார்க்க இருக்கிறோம். முடிந்த அளவு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அணியில் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

    தாவித் மலான் மீண்டும் ஒருநாள் லேசாக காயத்துடன் காணப்படுகிறார். மார்க் வுட்டிற்கும் இன்னும் லேசாக வலி உள்ளது. நாங்கள் மெடிக்கல் டீம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதேபோல் இரண்டு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் தலைசிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். சிறந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    அது சிறந்த தருணமாக இருக்க போகிறது. ஒரு வீரராக நீங்கள் அதில் ஈடுபட விரும்பும் நேரம். இந்திய ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை மிகவும் ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிச்சயமாக இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை விரும்பவில்லை. இந்தியாவின் நாளைய திட்டத்தை முறியடிப்போம்.

    ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்.

    இவ்வாறு பட்லர் தெரிவித்தார்.

    • இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
    • ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    • நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது.

    இரு அணிகளுக்கும் இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    • சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
    • குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

    இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.

    பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
    • சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.

    இந்நிலையில் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஷாஹீன் ஷா அப்ரிடி இந்தியக் கொடியில் இந்திய ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டார். இதற்கு, ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.


    சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை பெற்ற பிறகும் சானியா தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வருகிறார்.
    • விவாகரத்து செய்யப்போவதாகவும் சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

    துபாய்:

    இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் உள்ளார்.

    குழந்தை பெற்ற பிறகும் சானியா தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வருகிறார். இந்த நிலையில் சானியாவுக்கும், அவரது கணவர் சோயிப் மாலிக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும் சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் சானியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அமைந்துள்ளது. அதில் சானியா, 'உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன..... இறைவனை தேடி' என்று குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சானியா அதில், 'இந்த தருணம் என்னை கடினமான நாட்களுக்கு கொண்டு செல்கிறது' என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் குறித்து அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

    • நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.
    • ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.

    விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். ஒரு சில சமயங்களில் அவர் சரியாக ஆடாத போது, அவரது கதை முடிந்து விட்டது என்று விமர்சனங்கள் வருவது ஏன்? என்பது தெரியவில்லை. அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.

    எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்.

    நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எதிரணியை பற்றி அதிகமாக சிந்திக்காமல் எங்களுடைய அணி குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளிக்கையில், 'அப்படி நடந்தால் அது இந்தியா, பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்து இருக்கிறோம். அதனை செய்ய முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    சிட்னி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்குசன் (தலா 7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

    அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான் (10 விக்கெட்), ஷாஹின் ஷா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×