என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சூர்யகுமார் யாதவ் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.
    • சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி 'ஏ பிளஸ்' பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.

    அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21-ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. இதில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய 20 ஓவர் அணியின் வருங்கால கேப்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சி பிரிவில் இருந்து குறைந்தது பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்படுகிறார்.

    முன்னாள் துணை கேப்டன் ரஹானே, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் மூவரும் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே சமயம் 20 ஓவர் போட்டியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாக அதிரடியில் வெளுத்து கட்டுகிறார். இதனால் அவர் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷன் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    • குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
    • அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

    கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.

    அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சட்டோகிராம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா விலகியதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்றும் 2வது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உன்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்காளதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடர் உல்க டெஸ்ட் சான்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளும் மிக கடுமையாக போராடுவர்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். அதே போல் காயம் காரணமாக விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம் பெறவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் வருமாறு:

    பேட் கம்ம்னிஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், மைகேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

    • அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
    • உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    லுசைல்:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

    குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.

    ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

    உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    • அயர்லாந்து நாட்டு குடியுரிமை, கார் மற்றும் வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட்டிற்கு நிகராக வழங்கப்படும் ஊதியம் என அனைத்தையும் வழங்குகிறோம்.
    • அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த வீரராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்த ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமான சஞ்சு சாம்சன், இந்த 7 ஆண்டுகளில் வெறும் 16 டி20 போட்டி, 11 ஒருநாள் போட்டியில் தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அந்த அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்காமல் , பிசிசிஐ ஏமாற்றி இருக்கிறது.

    இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத பல வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்ல தொடங்கி விட்டனர். அண்டர் 19 உலககோப்பையை வென்ற உன்முகுத் சந்த், போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் அமெரிக்காவிற்காக விளையாட சென்றுவிட்டார். இதே போன்று உத்தப்பா போன்ற சீனியர் வீரர்களும், இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாட்டில் விளையாட சென்றுவிட்டார்கள்.

    இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரை இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுமாறு அண்மையில் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

    அயர்லாந்து நாட்டு குடியுரிமை, கார் மற்றும் வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட்டிற்கு நிகராக வழங்கப்படும் ஊதியம் என அனைத்தையும் வழங்குகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து அயர்லாந்து அணிக்காக விளையாடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

    ஆனால், சஞ்சு சாம்சன் நாட்டின் மீது உள்ள பற்றால், இந்த வாய்ப்ப வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன். பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    • இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர் நடராஜ் சேலத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரத்தான் என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவரும் ஓடலாம். மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ரன்னிங் தேவைப்படுகிறது.

    நடராஜன் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன் என்றும் அதில் நான் நன்றாக விளையாடும் பட்சத்தில் எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த பேட்டியை அடுத்து அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் இருக்கும் அவர் நடராஜன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

    • டோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
    • ரசிகரின் முதுகில் (டி-ஷர்ட் பின்புறம்) டோனி ஆட்டோகிராப் போடுகிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த சீசனுக்கான ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் ஐபிஎல் மட்டுமே ஆடி வருகிறார். மற்ற நேரங்களில் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்து தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாலும் ஏராளமாக உள்ளனர். இன்னமும் அவர் ஐபிஎல்லில் களத்தில் இறங்கும் போது அவரது ரசிகர்கள் டோனி...டோனி ...டோனி என்ற சத்தம் எழுப்புவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உள்ளது.

    அவருக்கு ரசிகர் பட்டாளம் இன்னமும் ஏராளமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த சீசன் ஐபிஎல்லுக்கு பின்னர் டோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வு நேரங்களில் டோனியின் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வரும்.

    சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் துபாயில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பாண்டியாவுடன் இணைந்து டோனி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

    அதேபோல் தற்போது டோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகரின் முதுகில் (டி-ஷர்ட் பின்புறம்) டோனி ஆட்டோகிராப் போடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    • 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது.

    முல்தான்:

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் (74 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (16 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தனது 2-வது சதத்தை எட்டிய ஹாரி புரூக் 108 ரன்களில் (149 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்படத்தக்கது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு 355 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

    இதற்கு முன்பு ஒரே ஒரு முறை 350-க்கு மேலாக இலக்கை விரட்டிப்பிடித்து இருக்கும் பாகிஸ்தான் அணி, மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த முகமது ரிஸ்வானும், அப்துல்லா ஷபிக்கும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் (15.5 ஓவர்) திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர்.

    ரிஸ்வான் 30 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 45 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் (1 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 83 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானை சாத் ஷகீலும், இமாம் உல்-ஹக்கும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இமாம் உல்-ஹக் 60 ரன்களில் (104 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனாஅர். நேற்றைய முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. சாத் ஷகீல் 54 ரன்களுடனும், பஹீம் அஷ்ரப் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட், ஜாக் லீச் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரம் தாக்கு பிடித்த பாகிஸ்தான் அணி உணவு இடைவேலைக்கு அப்புறம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 17-ந் தேதி தொடங்குகிறது.

    • முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது.
    • இதில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அரை இறுதியில் புனேயை சந்திக்கும்.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. பெங்களூர், புனே, ஐதராபாத் ஆகிய 3 இடங்களில் 'லீக்' ஆட்டங்கள் நடந்தது. கடந்த 10-ந்தேதியுடன் 'லீக்' போட்டிகள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 82 புள்ளியுடன் (15 வெற்றி, 6 தோல்வி, 1 டை) முதல் இடத்தையும், புனேரி பல்தான் 80 புள்ளியுடன் (14 வெற்றி, 6 தோல்வி, 2 டை) 2-வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த இரண்டு அணியும் அரை இறுதியில் நேரடியாக விளையாடும்.

    பெங்களூரு புல்ஸ் 74 புள்ளியுடன் 3-வது இடத்தையும், உ.பி. யோதா 71 புள்ளியுடன் 4-வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் 66 புள்ளியுடன் (10 வெற்றி, 8 தோல்வி, 4 டை) 5-வது இடத்தையும், தபாங் டெல்லி 63 புள்ளியுடன் 6-வது இடத்தையும் பிடித்து 'பிளே ஆப்' சுற்றின் எலிமினேட்டர் ஆட்டங்களில் விளையாட தகுதி பெற்றன.

    அரியானா ஸ்டீலர்ஸ் (61 புள்ளி), குஜராத் ஜெய்ன்ட்ஸ் (59 புள்ளி), மும்பை (56 புள்ளி) 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் (54 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (53 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (15 புள்ளி) ஆகியவை 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'பிளே ஆப்' சுற்று ஆட்டங்கள் நாளை (13-ந்தேதி), மும்பையில் தொடங்குகிறது. எலிமினேட்டர் போட்டிகள் நாளை நடக்கிறது. முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். தோற்றால் வெளியேற்றப்படும். இதில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அரை இறுதியில் புனேயை சந்திக்கும்.

    நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'எலிமினேட்டர்1' ஆட்டத்தில் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் மோதும். அரை இறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடக்கிறது.

    • இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ×