search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது டெஸ்ட்டிலும் வெற்றி- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
    X

    2-வது டெஸ்ட்டிலும் வெற்றி- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

    • 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது.

    முல்தான்:

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் (74 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (16 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தனது 2-வது சதத்தை எட்டிய ஹாரி புரூக் 108 ரன்களில் (149 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்படத்தக்கது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு 355 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

    இதற்கு முன்பு ஒரே ஒரு முறை 350-க்கு மேலாக இலக்கை விரட்டிப்பிடித்து இருக்கும் பாகிஸ்தான் அணி, மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த முகமது ரிஸ்வானும், அப்துல்லா ஷபிக்கும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் (15.5 ஓவர்) திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர்.

    ரிஸ்வான் 30 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 45 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் (1 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 83 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானை சாத் ஷகீலும், இமாம் உல்-ஹக்கும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இமாம் உல்-ஹக் 60 ரன்களில் (104 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனாஅர். நேற்றைய முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. சாத் ஷகீல் 54 ரன்களுடனும், பஹீம் அஷ்ரப் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட், ஜாக் லீச் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரம் தாக்கு பிடித்த பாகிஸ்தான் அணி உணவு இடைவேலைக்கு அப்புறம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 17-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×