என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும்.
    • இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட்தொடர் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் மைதானங்கள் குறித்து நாங்கள் அறிவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முக்கியமானவை. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் இது எங்களுக்கு மிக முக்கியமான தொடர்.

    இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும். அதுவும் எங்கள் வீரர்களுக்கு சாதகமாக அமையும். உலகக்கோப்பை டி20 தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி பலமாக உள்ளது. அதனை வெல்ல மிக சிறப்பாக இலங்கை விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இலங்கையில் நடந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) இளம் வீரர்களை அடையாளம் காண உதவியது. இதில் கிடைத்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்.

    ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டவை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் - தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் ராஜதுஞ்சனா, டில்ஷான் மதுஞ்சனகா, டில்ஷான் மதுஞ்சன, மதுஷான், லஹிரு குமாரா, நுவன் துஷாரா

    • ஆலோசனை குழு இறுதி செய்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் இடம்பெறவில்லை.
    • சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.

    இதை தொடர்ந்து இந்திய வீரர்களை தேர்வு செய்யும் 5 பேர் கொண்ட தேர்வு குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதிரடியாக கூண்டோடு கலைத்தது.

    முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவில் சுனில்ஜோஷி (தெற்கு மண்டலம்) ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) தேபாஷிஸ் மொகந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஒருவர் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவை தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி புதிய தேர்வு குழுவை தேர்வு செய்ய முடிவு செய்தது.

    புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

    இந்தகுழு புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் தாமதம் செய்தது. இதனால் பழைய தேர்வு குழுவை இலங்கை தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்தது.

    புதிய தேர்வு குழுவுக்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 பேரின் பெயர்களை இறுதி செய்து அவர்களிடம் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்கானல் நடத்தியது. ஆலோசனை குழு இறுதி செய்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் இடம்பெறவில்லை.

    அமய் குருசியா, அஜய் ரத்ரா, எஸ்.எஸ்.தாஸ் சலீல் அங்கோலா, எஸ். சரத், கானர் வில்லியம்ஸ் முன்னாள் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, ஹர்விந்தர் உள்ளிட்டோ ரிடம் நேர்கானல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் தேர்வு குழு பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குறுகிய காலத்துக்கு அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீச தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம்.
    • எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது.

    எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கேற்பு விதிமுறைகளை தெளிவாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கெல்லாம் சம்மதித்து கேமரூன் கிரீன் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார்.

    அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

    • ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
    • 2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஆட்டம் மறறும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் போதுான வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது. ஒரு சிறிய ஓய்வை எடுத்துக் கொண்டு எனது உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு அணிக்கு திரும்பி உள்ளேன்.

    20 ஓவர் உலக கோப்பையை வெல்ல நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டு அது நடக்காமல் போனது. 2023-ல் நடைபெறும் உலக கோப்பையை வெல்வது தான் எனது புத்தாண்டு தீர்மானமாகும்.

    எதிர்காலத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவோம். ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    விபத்தில் காயம் அடைந்த ரிஷப்பண்ட் வேகமாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக அணியில் உள்ள அனைத்து வீரர்களும் விரைவில் குணமடைய பிரார்த்தி வருகிறார்கள்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்ட்யா 20 ஓவர் அணிக்கு கேப்டனாக இருப்பார். ரோகித் சர்மா டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார்.

    • தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.
    • இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.

    இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதற்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.

    இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    • பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார்.

    சாண்டோஸ்:

    பிரேசில் கால்பந்தின் ஜாம்பவான் பீலே புற்று நோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது.

    பீலேயின் உடல் பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

    நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

    அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பீலேயின் உடல் அப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள நெக்ரோ போல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    பீலேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

    பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார். 12 கோல்கள் உலக கோப்பையில் அடித்துள்ளார்.

    • மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான்.
    • கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

    மும்பை:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது.

    இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும்.

    அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கப்போகிறது. மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.

    கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதே போல் இந்த ஆண்டிலும் பரிசோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காராக அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள்.

    மிடில் வரிசையில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.

    ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. அதனால் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம்.

    2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

    இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    சான்டோஸ்:

    உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.

    இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது.
    • ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன் என்றார் ஹர்திக்.

    புதுடெல்லி:

    இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.

    இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உலக கோப்பையை வெல்வதுதான் இந்த புத்தாண்டில் நான் எடுத்திருக்கும் தீர்மானம். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது.

    அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் வருகிறது. அவற்றை வெல்லவேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு உள்ள இலக்கு.

    இந்தியாவை அவ்வளவு எளிதாக இலங்கை வீழ்த்திவிட முடியாது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்தார்.

    • சேத்தன் சர்மா தலைமையிலான முந்தைய தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது.
    • ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான செயல்முறையை பிசிசிஐ தொடங்கியதால், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இருப்பினும், சேத்தன் சர்மா தனது பதவியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

    தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பித்தவர்களில் சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ராத்ரா, எஸ்எஸ் தாஸ், எஸ்.ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நாளையும் நேர்காணல் தொடரும்.

    வெங்கடேஷ் பிரசாத் இந்த நேர்காணலுக்கான பட்டியலில் இல்லை. ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • டாம் லாதம் - கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    கராச்சி:

    பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டாம் லாதம் - கான்வே ஜோடி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். அணியில் எண்ணிக்கை 134 ரன்கள் இருந்த போது லாதம் அவுட் ஆனார்.

    இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் 26 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • நாளைய போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் பங்கேற்க ஷனகா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர்.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், சாகல், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்திய அணி, 20 ஓவர் போட்டியில் சாதிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மெண்டீஸ், தனஞ்செய டிசில்வா, ஹரன்கா, அசலங்கா, கருரத்னே, நிசாங்கா, தீக்ஷனா, லகிரு குமார பனுகா ராஜபக்சே, ரஜிதா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    அந்த அணி வீரர்கள் சமீபத்தில் இலங்கை பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி இருந்தனர்.

    இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நடந்த போட்டியில் இலங்கை வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்று இருப்பார்கள். இது தங்களுக்கு இந்திய சுற்றுப்பயணத்தில் உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இப்போட்டி தொடர் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்தியா: ஹர்த்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், அக்சர் பட்டேல், சாகல், ஷிவம் மவி, முகேஷ் குமார், உம்ரான் மாலிக்.

    இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), அவிஷ்க பெர்னாண்டோ, அசலாங்கா, அஷேன் பண்டார, தனஞ்செய டிசில்வா, நிசாங்கா, ஹசரன்கா, குஷல் மெண்டிஸ், பனுகா ராஜபக்சே சமிகா, கருண ரத்னே, லகிரு குமாரா, மதுஷன்கா, பிரமோத் மதுஷன், ரஜிதா, தீக்ஷனா, சமரா விக்ரமா, துஸத் வெல்லுகே, நுலன் துஷாரா.

    ×