என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை உம்ரான் மாலிக் தற்போது முறியடித்துள்ளார்.
    • 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார்.

    மும்பையில் நடந்த முடிந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டை வெற்றிகரமாக இந்திய அணி தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் அறிமுகமான சிவம் மாவி, நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த போட்டியில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசி பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். உம்ரான் மாலிக் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இது போட்டியின் வேகமான பந்தாகவும் இருந்தது. 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை இவர் தற்போது முறியடித்தார். இதுவரை பதிவு செய்யப்பட்ட பும்ராவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ. அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர்.  

    • தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார்.
    • அக்‌ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் படேல் 6-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

    சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுணையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.


    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன்.
    • நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த ஷிவம் மாவியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார்.

    இது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த போட்டியில் நாங்கள் தோற்று விடும் நிலை உருவானது. கடைசி ஓவரை அக்ஷர் படேல் அபாரமாக வீசினார். நாங்கள் பலமுறை விவாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன். நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன். மாவியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக பந்து வீசினார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறும் போது, 'ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டி யாகும். 163 ரன் இலக்கு எடுக்க கூடியது. நாங்கள் அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுப்போம்' என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஆட்டம் புனேயில் நாளை நடக்கிறது.

    இதனால் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • 4-வது அகாடமியாக திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் தொடங்கப்படுகிறது.
    • இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி சென்னை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4-வது அகாடமியாக திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் தொடங்கப்படுகிறது. இங்கு 8 ஆடுகளங்களுடன் மின்னொளி வசதியும் அமைக்கப்படு கிறது.

    இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்கிசின் முதன்மை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், 'தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் கிரிக்கெட்டுக்கான ஆர்வம் அதிகம். இந்த அகாடமியின் மூலம் பல்வேறு இளம் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியும், அனைத்து விதமான வசதிகளும் வழங்கி அவர்களின் விளையாட்டு மேம்படுத்தப்படும்.

    இதன் மூலம் வருங்கால சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்றார். இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் என்றும், இரு பாலருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் விக்கெட் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்.
    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது.

    மும்பை:

    இலங்கைக்கு எதிரான பரபரப்பான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 163 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தீபக் ஹூடா 23 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), இஷான் கிஷன் 29 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 20 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    மதுஷனகா, தீக்சனா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, ஹசரங்கா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 160 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.

    கேப்டன் தசுன் ஷனகா 27 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), குஷால் மெண்டீஸ் 25 பந்தில் 28 ரன்னும் (5 பவுண்டரி), கருணாரத்னே 16 பந்தில் 23 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர்.

    24 வயதான ஷிவம் மாவி தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவர் 4 விக்கெட் வீழ்த்தினார். உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. அக்ஷர் படேல் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசினார். அவர் 10 ரன்களை கொடுத்தார். கடைசி ஓவரில் இலங்கை அணியின் 2 வீரர்களும் 'ரன் அவுட்' ஆனார்கள்.

    தனது முதல் ஆட்டத்தி லேயே 4 விக்கெட் வீழ்த்திய ஷிவம் மாவி கூறியதாவது:-

    இந்திய அணியில் இடம் பெறுவதில் மிகவும் தாமதம் ஆகிவிட்டது. 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி 6 ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த 6 வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. காயமும் ஏற்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது. முதல் விக்கெட் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சான்டோஸ்:

    கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

    14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

    தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • அந்த அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

    மும்பை:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.

    காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இந்த அணிக்கு ரோகித் தலைமை தாங்குகிறார். இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அப்போது இடம்பெறவில்லை.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது.
    • 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரைசதம் அடித்து 51 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் , நசீம் ஷா, ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் 20 ரன்களுக்கும், பாபர் அசாம் 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 74ரன்களும், சவுத் ஷகீல் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் உனத்கட்.
    • முதல் இன்னிங்சில் உனத்கட் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அந்த அணியின் கேப்டன் யாஷ் துல் அறிவித்தார்.

    அதன்படி, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துருவ் ஷோரே, ஆயுஷ் பதோனி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை சவுராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் வீசினார். டெல்லி அணியினர் முதல் 2 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை.

    இதையடுத்து வீசிய 3-வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரேவை உனத்கட் போல்டாக்கினார். அடுத்த பந்தில் ராவலை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.

    ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த டெல்லி அணியின் கேப்டன் யாஷ் துல்லை உனத்கட் எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதன்மூலம் உனத்கட் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமின்றி, தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை மளமளவென எடுத்தார் உனத்கட். ஒரு கட்டத்தில் 53 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹிரித்திக் ஷோக்கீன், ஷிவ்னாக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய ஷோக்கின் அரைசதம் அடித்தார். மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த ஷிவ்னாக் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் டெல்லி அணி 35 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உனத்கட் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிராக் ஜானி, ப்ரேராக் மன்கட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையை உனத்கட் படைத்தார்.

    • துவக்க வீரர் பதும் நிசங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி.
    • இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். துவக்க வீரர் பதும் நிசங்கா(1), தனஞ்செய டி சில்வா (8) ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி. அதன்பின்னரும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா 12 ரன்னிலும், குஷால் மென்டிஸ் 28 ரன்னிலும், பனுகா ராஜபக்சே 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹசரங்கா 21 ரன்களும், தசுன் சனகா 45 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அக்சர் பட்டேல் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட கருணாரத்னே, 3வது பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் 5வது பந்தில் கசுன் ரஜிதா ரன் அவுட் ஆனதால் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் கருணாரத்னே ஒரு ரன் எடுத்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது மறுமுனையில் தில்சன் ரன் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கருணாரத்னே 23 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதனால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உம்ரான் மாலிக், ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • துவக்க வீரர் இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்தார்
    • கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    ×