என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
    • இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது.

    புனே:

    5-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.

    இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி, இங்கிலாந்தின் காஷ், பாட்டேன் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.
    • பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கேப்டன் பாபர் ஆசம் 27 ரன்களும், ஷான் மசூத் 35 ரன்களும் அடித்தனர். சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.

    சவுத் ஷகீல் 146 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அகா சல்மான் 30 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் அகமது சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் அகமது 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287 ஆக இருந்தது. ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.

    ஆனால், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இரண்டாவது போட்டியில் சதம் அடித்த சர்பராஸ் அகமது, பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

    • ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னர் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வருகின்றனர்.
    • இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார்.

    அப்போது கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்து இருக்கிறது.

    குறிப்பாக முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளது. எனவே பாதிப்பின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த உயர்தர சிகிச்சை அளித்து அவர் விரைவில் குணமடைய இந்திய கிரிக்கெட் வாரியம் துரித நடவடிக்கை எடுத்தது.

    இதனால் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள விளையாட்டு மருத்துவ பிரிவின் தலைவரும், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் தின்ஷா பர்திவாலா நேரடி மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு பிறகே 25 வயதான ரிஷப் பண்ட் களம் திரும்புவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்பது உறுதியாக தெரிய வரும். இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் ஐபிஎல்லில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , நலமுடன் வாருங்கள் சகோதரர் ரிஷப் பண்ட். நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் என அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    • ஒரே ஆட்டத்தில் அதிக நோ பால் வீசிய அணியாக இருந்த அயர்லாந்தை பின்னுக்கு தள்ளியது இந்திய அணி.
    • நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசியுள்ளது.

    இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

    பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

    இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது.

    ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

    • அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது.
    • நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார்.

    புனே:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19-வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.

    ஆனால் 19-வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    • இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    புனே:

    இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

    அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 2 விக்கெட் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு போல்ட் விக்கெட்டின் போது பெய்ல்ஸ் கீப்பரை தாண்டி விழுந்தது. இந்த விக்கெட்டின் வீடியோவை ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.

    இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.

    அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.
    • 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக் கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித், கவாஜா சதம் அடித்தனர்.

    கவாஜா 195 ரன்னுடனும், ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.

    முதல் 2 செஷன்களும் மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

    • அர்ஷ்தீப் சிங்கை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது.
    • அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம்.

    புனே:

    புனேயில் நேற்று நடந்த இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இலங்கையிடம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது.

    கேப்டன் ஷனகா 56 ரன்னும், குசல் மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

    அதன் பின் சூர்யகுமார் யாதவ் (51 ரன்), அக்ஷர் பட்டேல் (65 ரன்) ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனாலும் இந்திய அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. 7 நோ-பால்களை வீசினர். இதில் அர்ஷ்தீப்சிங் மட்டும் 5 நோ-பால் வீசினார். அவர் 2 ஓவர் வீசி 37 ரன் விட்டு கொடுத்தார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கின் போது பவர் பிளேயில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களை காயப்படுத்தி விட்டது. நாங்கள் சில அடிப்படை தவறுகளை செய்தோம்.

    சர்வதேச அளவில் விளையாடும் நாங்கள் அதை செய்யக்கூடாது. அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். நாம் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    போட்டியில் அன்று நல்ல நாளாக இருக்கலாம். கெட்ட நாளாகவும் அமையலாம். ஆனால் அடிப்படை விஷயங்களில் இருந்து விலகி செல்லக்கூடாது. அர்ஷ்தீப் சிங்கின் சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. அவரை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது. ஆனால் எந்த வடிவத்திலும் நோ-பால் வீசியது குற்றம் என்பது எங்களுக்கு தெரியும்.

    ராகுல் திரிபாதி 3-வது வீரராக விளையாடுவது வழக்கம். அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். இதனால் தான் ராகுல் திரிபாதி 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது.

    • அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.
    • மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    எந்த வடிவத்திலும் யாரும் நோ-பால் வீச விரும்புவதில்லை. அது குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் உங்களை காயப்படுத்தலாம்.

    இந்த இளம் வீரர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்.

    இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டியதிருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக ஆதரவளிக்கிறோம்.

    மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் கற்று கொள்வது எளிதானதல்ல. அதிலிருந்து கற்று கொள்ள வேண்டும்.

    நல்ல விஷயம் என்னவென்றால் ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

    • சீன வீராங்கனை கின்வென் செங்கை வீழ்த்தி அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகுவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் கின்வென் செங்கை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகுவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    மற்ற ஆட்டங்களில் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    ×