என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.

    இரட்டை ஆதாய சர்ச்சையால் சமீபத்தில் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முதல் பணியாக இருக்கும்.

    • ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் 'கிரீன்', 'ரெட்', என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

    இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னெர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவை வீழ்த்தினார். லீக் சுற்று முடிவில் 'கிரீன்' பிரிவில் யானிக் சின்னெர் 3 வெற்றியுடன் முதலிடம் பிடித்தும், 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர். சின்னெர் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

    இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் 'ரெட்' பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    • 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
    • 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    சென்னை:

    தேசிய சீனியர் ஹாக்கியில் தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை ஊதித்தள்ளி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போட்டியில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அரியானா, தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத், பெங்கால், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் (டி பிரிவு) பஞ்சாப்பை எதிர்த்து விளையாட வேண்டிய திரிபுரா விலகியதால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் (இ பிரிவு) மணிப்பூர் 7-2 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது. 'டி' பிரிவில் மராட்டிய அணி 22-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட்டை துவம்சம் செய்தது.

    'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை எளிதில் தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் சுந்தரபாண்டி 3 கோலும், கேப்டன் சோசுவா பெனடிக்ட் வெஸ்லி, கனகராஜ் செல்வராஜ், தினேஷ் குமார் தலா 2 கோலும், சதீஷ், தனுஷ், பிருத்வி, கவின் கிஷோர், கார்த்தி, சோமன்னா தலா ஒரு கோலும் அடித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜார்கண்ட்-ஆந்திரா (காலை 7 மணி), சண்டிகார்-கோவா (காலை 8.45 மணி), உத்தரபிரதேசம்-கேரளா (காலை 10.30 மணி), புதுச்சேரி-ராஜஸ்தான் (பிற்பகல் 2 மணி), அசாம்-இமாச்சல பிரதேசம் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்தியா உலகக் கோப்பை வெல்ல அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:

    அவர்கள் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.

    உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தம் மற்றும் பிரஷரை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.

    என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் இந்திய அணியின் சிறப்பு.

    ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பியும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என தெரிவித்தார்.

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். மணல் சிற்பத்தை செய்துமுடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும், 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தியுள்ளார்.

    • கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ நியமனம்.
    • 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி அறிவிப்பு.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது.
    • அரசின் தலையீடு இருப்பதாக கூறி ஐசிசியில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.

    கொழும்பு:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் ஜெய்ஷாவிற்கும் தொடர்புள்ளது என அர்ஜுன ரணதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தொலைபேசியில் அழைத்து, ரணதுங்கா கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

    மேலும் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் நானும், எனது நண்பரான எரிசக்தி துறை மந்திரியுமான காஞ்சனா விஜேசேகராவும் வருத்தம் தெரிவித்தோம் என குறிப்பிட்டார்.

    • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டி வருகிற 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    2023-ம் ஆண்டு நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது. இந்த போட்டி வருகிற 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் பாடப் புத்தகத்தில் ரோகித் குறித்தான பாடம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


    • இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    • 2 முறை மட்டுமே இந்தியா கோப்பையை வென்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்தியா லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, நாக்அவுட்டில் சொதப்பும் நிகழ்வு கடந்த காலங்களில் நடைபெற்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது. தற்போது அந்த தடையை தகர்த்துள்ளது.

    இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலும் 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலும் 2011-ல் டோனி தலைமையிலும் முன்னேறியது. ஆனால் இதில் 2 முறை மட்டுமே கோப்பையை வென்றது. 

    உலகக் கோப்பையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ்(1975)(1979), இந்தியா(1983) (2011), ஆஸ்திரேலியா ((1987), (1999) (2003) (2007) (2015)), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996), இங்கிலாந்து (2019) ஆகிய அண்கள் வென்றுள்ளனர்.

    இந்நிலையில் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து நாட்டு கேப்டன்களும் நடப்பு உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

    • நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம்.
    • ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

    கொல்கத்தா:

    ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சந்தித்த இந்தியாவை மீண்டும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை பைனலில் இந்தியா தடுமாற்றத் துவக்கத்தை பெறும் அளவுக்கு அசத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

    நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம். இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடும் இந்தியாவும் நாங்களும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளோம்.

    குறிப்பாக தொடரின் முதல் ஆட்டத்தில் அவர்களை எதிர்கொண்ட நாங்கள் கடைசியாகவும் எதிர்கொள்வது இந்த உலகக்கோப்பைக்கு நல்ல முடிவாக இருக்கும். பவர்பிளே ஓவர்களை எங்களுக்கு சாதகமான வழியில் கொண்டு வர வேண்டும்.

    குறிப்பாக ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் நன்றாக செயல்படுவது சிறப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.

    கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. 

    இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

    ×