என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சிவக்குமாரும், ஜெய்சங்கரும் மற்ற நடிகர்களை விட ரஜினியிடம் சற்று அதிகமாக பழகி இருந்தனர்.
    • படத்தில் ரஜினி காட்டுக்குள் சென்று மிருகங்களை பிடித்து விற்பனை செய்யும் வேடத்தில் நடித்து இருந்தார்.

    ''கண்டக்டர் வேலையில் நான் நிம்மதியாக இருந்தேன். அந்த வேலைதான் எனக்கு எல்லாவிதமான சுகத்தையும் தந்தது. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு அந்த சுகங்கள் எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன். ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். சினிமாவை விட்டுவிட்டு மீண்டும் கண்டக்டர் வேலைக்கு போக முடியாது. அதை தினமும் நினைத்துப் பார்க்கிறேன்.

    அப்போது எனக்கு தற்கொலை செய்து ெகாள்ளலாமா? என்று கூட ஒரு தடவை தோன்றியது. ஆனால் என்னை நம்பி திரை உலகில் நிறைய குடும்பங்கள் இருப்பதை பலரும் என்னிடம் சொல்வார்கள். அந்த சமயங்களில் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். நம்மிடம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று யோசிப்பேன்.

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்து வந்த சக்தி எது? என்று யோசித்துப் பார்ப்பேன். அப்போது எனக்கு ஒன்று புரிய ஆரம்பித்தது. எனக்குப் பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கி ஆட்டி வைத்துக் கொண்டே இருப்பதை முழுமையாக நான் உணர்ந்தேன். என்னை ஆட்டி வைத்த அந்த சக்தி எது? என்று எனக்கு தெரியவில்லை...''

    1978-ம் ஆண்டு இறுதியிலும் 1979-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் இந்த வார்த்தைகளை வசனம் போல உடைந்த ரிக்கார்டு போல ரஜினி திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். ரஜினியின் இந்த பேச்சை 99 சதவீதம் பேர் உளறல் என்றே நினைத்தனர். மீதமுள்ள அந்த ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே ரஜினியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் புரிந்தது.

    ரஜினியின் குலதெய்வமும், இஷ்ட தெய்வங்களும், சித்தப் புருஷர்களும், மகான்களும்தான் ரஜினி வாழ்க்கையை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் செதுக்கி, செதுக்கி திரை உலகுக்குள் கொண்டு வந்து தள்ளியுள்ளனர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

    ஆனால் தொடக்கத்தில் ரஜினி இதை உணரவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் குடிப்பழக்கத்தில் மூழ்கி இருந்ததுதான். மற்ற போதை பழக்கங்களும் அவரை ஆக்கிரமித்த போது தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்கள் அனைவருமே கவலைப்பட்டனர்.

    நம்பியார், மேஜர் சுந்தரராஜன், சிவக்குமார், பாலாஜி, முத்துராமன், நாகேஷ், வி.கே.ராமசாமி என பலரும் ரஜினிக்கு அறிவுரை சொன்னார்கள். சிவக்குமாரும், ஜெய்சங்கரும் மற்ற நடிகர்களை விட ரஜினியிடம் சற்று அதிகமாக பழகி இருந்தனர். ஜெய்சங்கர், ரஜினியுடன் பல மாதங்கள் நகமும், சதையுமாக இருந்தார்.

    அப்படி இருந்தும் சிவக்குமார், ஜெய்சங்கரின் அறிவுரைகளை ரஜினி கண்டுகொள்ளவில்லை. டைரக்டர் பாலச்சந்தரிடம் 'குரு' என்ற முறையில் ரஜினிக்கு பயமும், பக்தியும் இருந்தது. பாலச்சந்தர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுவார்.

    1979-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. யார் சொல்லியும், எந்த அறிவுரைகளையும் ரஜினி ஏற்கவில்லை. தினமும் குடிபோதையில் மிதந்தார். குறிப்பாக 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'தர்மயுத்தம்' ஆகிய 2 படங்களிலும் இரவு -பகலாக மாறி, மாறி நடித்து அவருக்குள் மனநல பாதிப்பு அதிகரித்தது.

    'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' படப்பிடிப்புகளில் ரஜினிக்கு மனநல பாதிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் கமல் மேக்கப் போட்டு விட்டு, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு வரை இதே நிலை நீடித்தது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இதைத் தொடர்ந்து 'தர்மயுத்தம்' படத்தில் ரஜினி தீவிர கவனம் செலுத்தினார். இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கிய இந்த படத்தில் தங்கை மீது அதிக பாசம் உள்ள தொழில் அதிபர் வேடத்தில் ரஜினி நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்காக மலேசியா வாசுதேவன் பாடிய, 'ஒரு தங்க ரதத்தில்' என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

    'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் சரியாக ஓடாததால் ரஜினி நடித்த 'தர்மயுத்தம்' படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்்தது. மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினியின் எதிர்காலத்தை இந்த படம்தான் தீர்மானிக்கப் போகிறது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    தர்மயுத்தம் கதைப்படி, ரஜினி பகலில் அமைதியாகவும், பவுர்ணமி நாட்களில் இரவில் சைக்கோ போல மாறி உக்கிரமாக நடந்து கொள்வது போலவும் நடிக்க வேண்டியது இருந்தது. அந்த சமயத்தில் ரஜினி உண்மையிலேயே அத்தகைய நிலையில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது 'தர்மயுத்தம்' படத்தில் அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலித்தது.

    'தர்மயுத்தம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரஜினியை மரத்தில் கட்டிப் போட்டு விட்டு, மரத்தைச் சுற்றி தீ வைத்து விடுவார்கள். அவரை கொல்வதற்காக வில்லனின் ஆட்கள் அப்படி செய்வார்கள். அந்த இறுதிக்கட்ட காட்சியை அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்க முடிவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    ஆனால் திடீரென ரஜினி அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டார். 'ஏன்?' என்று கேட்டதற்கு திரை உலகில் இருக்கும் சில மர்ம எதிரிகள், பணம் கொடுத்து உண்மையிலேயே மரத்தில் தன்னைக் கட்டி வைத்து எரித்து கொன்று விடக் கூடும் என்று ரஜினி பயந்தபடி கூறினார். படக்குழுவினர் எவ்வளவோ சமரசம் செய்தும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்தார்.

    இதையடுத்து படக்குழுவினர் ரஜினியின் பாசம்மிக்க தாயாக திகழ்ந்த ரெஜினாவின் உதவியை நாடினார்கள். ரெஜினா பக்குவமாக ரஜினியிடம் அந்த படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி பற்றி விளக்கிக் கூறி தைரியம் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி அந்த காட்சி படமாக்கும் போது தனது வீட்டில் பாதுகாவலராக இருந்த கூர்க்காவை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்பிறகே அந்த காட்சியில் ரஜினி நடித்துக் கொடுத்தார்.

    'தர்மயுத்தம்' படத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ரஜினி திமிறும் காட்சிகள், முகத்தில் காட்டிய உக்கிரமான தோற்றங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த படம் ஓடாது என்றே 90 சதவீதம் பேர் நினைத்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் பொய்யாக்கும் வகையில 'தர்மயுத்தம்' படம் வெற்றிகரமாக ஓடி மகத்தான சாதனை படைத்தது.

    தமிழ்நாடு முழுவதும் 'தர்மயுத்தம்' படம் வெளியான திேயட்டர்களில் அவரது பிரமாண்ட கட்-அவுட்களை ரசிகர்கள் வைத்தனர். ரசிகர்கள் கொடுத்த இந்த அபரிதமான ஆதரவு ரஜினியை முழுமையான தனி கதாநாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் ரஜினியின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆர்ப்பாட்டமாகத் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து கே.ஆர்.விஜயா தயாரித்த 'நான் வாழ வைப்பேன்' படத்தில் சிவாஜியுடன் இணைந்து ரஜினி நடித்தார். இந்த படத்தில் கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே ரஜினி வருவார். இந்த படம் வெளியான போது ரஜினி நடிப்பு மக்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்தது. இதுபற்றி சிவாஜி, வசனகர்த்தா ஆரூர்தாசிடம் ரஜினியை பற்றி மிகவும் புகழ்ந்து பாராட்டி பெருமையாக குறிப்பிட்டார்.

    அதன் பிறகு ஆறில் இருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் ஆகிய படங்களில் ரஜினி இரவு பகலாக நடித்தார். இதில் 'அன்னை ஓர் ஆலயம்' படத்துக்காக நடந்த படப்பிடிப்புகளில் ரஜினி செய்த கலாட்டா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேவர் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ரஜினியுடன் ஸ்ரீபிரியா, சுந்தரராஜன், அசோகன், தேங்காய்சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன், ஜெயமாலினி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. ரஜினியின் அம்மாவாக பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி நடித்து இருந்தார்.

    இந்த படத்தில் ரஜினி காட்டுக்குள் சென்று மிருகங்களை பிடித்து விற்பனை செய்யும் வேடத்தில் நடித்து இருந்தார். இது அவரது தாய் அஞ்சலி தேவிக்கு பிடிக்கவில்லை. மிருகங்களுக்கும் தாய் பாசம் உண்டு. எனவே தாய் மிருகங்களிடம் இருந்து குட்டியை பிரிக்காதே என்று சொல்வார். ஆனால் அதை ரஜினி கேட்கவில்லை.

    ஒரு நாள் ரஜினியை தேடி காட்டுக்குள் அஞ்சலி தேவி வருவார். அப்போது குட்டி யானையை பிரிந்து இருந்த தாய் யானை கோபத்தில் அஞ்சலி தேவியை மிதித்து நசுக்கி விடும். அவர் மரண தறுவாயில், ''இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்து விடு'' என்று சொல்லி விட்டு உயிரை விடுவார்.

    அந்த குட்டி யானையை மீட்க ரஜினி ஒவ்வொரு சர்க்கஸ் கம்பெனியாக செல்வார். கடைசியில் அந்த குட்டி யானையை கண்டுபிடித்து தாய் யானையிடம் சேர்த்து வைப்பார். இந்த படத்தில் ரஜினி முழுக்க முழுக்க ஒரு குட்டி யானையுடன் நடித்து இருக்கும் காட்சிகள் கலகலப்பாக அமைந்தன. ஆனால் அந்த காட்சிகளை எடுப்பதற்குள் ரஜினி படப்பிடிப்பு பகுதிகளை கலவரப்பூமியாகவே மாற்றி விட்டார்.

    அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டன. சில காட்சிகள் அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் வளாகத்தில் படமாக்கப்பட்டன. மனநலப் பாதிப்பில் இருந்த ரஜினி சத்யா ஸ்டூடியோவிலும், தேவி தியேட்டர் வளாகத்திலும் சத்தம் போட்டு தன்னிலை மறந்து ஏதேதோ செய்ததுண்டு.

    இது பற்றி எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது. ஒரு நாள் சத்யா ஸ்டூடியோவுக்கு வந்த அவர் ஸ்டூடியோ நிர்வாகி பத்மநாபனிடம் சொல்லி ரஜினியை அழைத்து வரச்சொன்னார். உடனே ரஜினி வணக்கம் தெரிவித்து எம்.ஜி.ஆரிடம் பணிவாக நின்றார்.

    அவரிடம் எம்.ஜி.ஆர்., ''சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நடிகராக இருப்பவர் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் நிறைய மது அருந்துவதாக கேள்விப்பட்டேன். மது குடிப்பதை விட்டு விடுங்கள். புகைப்பிடிப்பதையும் நிறுத்தி விட்டால் உங்கள் உடல்நலம் சிறப்பாகி விடும். நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

    எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரையால் ரஜினியிடம் சற்று மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆனால் அன்னை ஓர் ஆலயம் படப்பிடிப்பு முடிவதற்குள் ரஜினி செய்த அட்டகாசங்கள் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • கரிசல் மண்ணில் நன்றாக விளையும் பச்சைப் பயிர்.
    • முளை கட்டிய பச்சைப் பயிற்றைப் போட்டு பொங்கல் சமைத்து உண்டால் தூக்கத்திற்கு மாறாக ஊக்கம் கிடைக்கும்.

    நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பயிறு வகைகளில் கெட்டித் தன்மை வாய்ந்ததும் உண்டு, சற்று மிருதுவானதும் உண்டு. கெட்டித் தன்மைக்குத் தேர்ந்த எடுத்துக் காட்டு கொண்டைக் கடலை என்றால் மிருதுத் தன்மை உடையதற்கு எடுத்துக்காட்டு பச்சைப் பயிறு. கொண்டைக் கடலைத் தமிழகத்தில் விளைகிறது என்றாலும் நம்மவர்கள் விளைவிப்பது போதியளவிற்கு இருக்காது. இங்கே பச்சைப் பயிறு கணிசமான அளவில் விளைவிக்கப்படுகிறது. பச்சைப் பயிற்றை நஞ்சைப் பாசனமும் செய்யலாம், புஞ்சைப் பாசனமும் செய்யலாம். எனவே இதனை விவசாயிகள் தம்முடைய வீட்டுத் தேவைக்கும் அப்பால் பணப்பயிராக விளைவிப்பது பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாகக் கரிசல் மண்ணில் நன்றாக விளையும் பச்சைப் பயிர்.

    இன்றைய தலைமுறையினருக்குப் தோலுடன் கூடிய பயிற்றிற்கும் தோல் நீக்கப்பட்டப் பருப்பிற்கும் வேறுபாடு அவ்வளவாகத் தெரியாது. தோல் நீக்கப்படாத முழுப் பச்சைப் பயிறு விளைவிக்கப்பட்ட நிலையில் களத்தில் அடித்துத் தூற்றி மணியாக அள்ளி மூட்டைக் கட்டுவதைப் பார்த்திருக்க மாட்டார்கள். நம் பிள்ளைகள் அவ்வளவு தொலைவிற்கு விவசாயத்தில் இருந்து அந்நியப்பட்டு விட்டனர். இன்று பலருக்கும் கொண்டைக்கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் செரிக்கும் திறன் இல்லை. அதிலும் புலால் சாப்பிடாதவர்கள் என்றால் அவர்களுக்குத் தேவையான புரதச் சத்தினை எப்படி ஈடுசெய்வார்கள்.

    செரிமானத்திற்கும் எளிது, வேகவைப்பதும் எளிது என்று பார்த்தால் அதில் பயிறு வகைகளில் முதலிடத்தில் இருப்பது பச்சைப் பயிறுதான். இன்று பரவலாகத் தோல் நீக்கப்பட்ட பச்சைப் பருப்பைத் தான் வெளிர் மஞ்சள் நிறத்தில் பார்க்கிறோம். இது அவ்வளவு சத்தானது அல்ல. இதிலும் வணிகரீதியாக அதிக விளைச்சலுக்காக சற்றே பருமனான பச்சைப் பயிறும் சந்தையில் கிடைக்கிறது. அதுதான் பரவலாக விற்பனையில் கிடைக்கிறது.

    ஆனால் தமிழகத்தில் புஞ்சையில் விளையும் பச்சைப் பயிறுதான் உண்மையில் சத்து மிக்கது. கேரளா மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தில் பச்சைப் பயந்தங்கஞ்சி காலைவேளைகளில் சத்துமிக்க உணவாக இன்றும் சமைக்கப்படுகிறது. உணவகங்களில் பரிமாறப்படும் பொங்கலின் ஆதி வடிவமே பயத்தங்கஞ்சி. பயத்தங்கஞ்சியில் உள்ள சத்துக்கள் பொங்கலில் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. அதிலும் பொங்கல் தூக்க மருந்து என்ற அவப்பெயரை நகரங்களில் பெற்று விட்டது காலத்தின் கோலம் தான்.

     

    கடைப்பொங்கல் உண்ட அரைமணி நேரத்தில் மயக்க உணர்வு தோன்றுவதற்குக் காரணம், அதன் மூலப்பொருளான பச்சை அரிசியோ, தோல் நீக்கிய பச்சைப் பருப்போ அல்ல. மலினமான வியாபார உத்திக்காக அதில் சேர்க்கப்படும் டால்டா எனும் தாவரக் கொழுப்பே ஆகும். டால்டாவானது, இறுகின நிலையில் பிசுபிசுப்பாக இருக்கும். உருக்கினால் நெய்க்கு மாற்றுபோலத் தோன்றலாம். ஆனால் உருக்கின நிமிடத்தில் மட்டுமே அப்படி இருக்கும். ஆறியதும் தானும் இறுகி, தான் சார்ந்திருக்கும் பண்டத்தையும் இறுக்கி விடும். இந்தப் பிசுபிசுப்புதான் அதனைக் கொண்டிருக்கும் பண்டத்தை உண்டதும் மயக்கத்தைத் தருவது.

    உண்மையில் தாவரக் கொழுப்பு அத்தனை பிசுபிசுப்பும் ஆறிய பின்னர் இறுகல் தன்மையும் அடைவதில்லை. பல தயாரிப்புகளில் டால்டாவில் தாவரக் கொழுப்புடன் பெட்ரோலியத்தின் உப தயாரிப்பான மெழுகும் சேர்க்கப்பட்டு விடுகிறது. இந்த மெழுகு இன்று எண்ணை வரைக்கும் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தனிக்கதை.

    இப்படிக் கலக்கப்பட்ட உணவுப் பண்டம் உண்டதும் மயக்கம் மட்டுமல்ல, உண்ண உண்ண கல்லீரல் துவங்கி சிறுநீரகம், நுரையீரல் என இருதயம் வரைக்கும் நிரந்தரப் பாதிப்பினை உருவாக்கி விடும். இன்று அனைத்து வயதினருக்கும், அனைத்துப் பொருளாதாரப் பிரிவினருக்கும், அனைத்து வகையான வேலைகளைச் செய்வோருக்கும் எந்தச் சூழலிலும் தொடர்நோய்கள் உருவாவதற்கும், திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும் காரணம் இத்தகைய நச்சுத் தன்மை மிகுந்த ரசாயனங்களின் கலப்பே ஆகும். இன்று நம் மக்கள் விவசாயத்தில் இருந்து வெகுதொலைவிற்கு விலகி வந்து விட்டது ஒருபுறம் என்றால் வீட்டுச் சமையலில் இருந்தும் நம்மை மிகவேகமாக விலக்கிக் கொண்டு வருகிறோம்.

    போப்பு

     

    இது மிகவும் ஆபத்தான போக்காகும். இதனை வெறும் கலாச்சார மாற்றமாக மட்டுமே பார்க்க முடியாது. இம்மாற்றம் உடலளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்களைக் கைக்கொள்ளும் பலரும் நோய் தம்மை நெருங்காமல் இருக்கத் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இது அப்பாவித்தனமான எண்ணம். உடலை நோய்க்கலனாக மாற்றி விட்ட பின்னர் மருந்துகள் அதிலும் குறிப்பாக தடுப்பு மருந்துகளால் எப்படி உடலைப் பாதுகாக்க முடியும்.

    உணவில் சத்துக்கள் உள்ள மூலப்பொருட்கள் கொண்டு தயாரிப்பதும், முறையான ஓய்வு, தூக்கம், பொருத்தமான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே உடலையும், உடல் தாங்கி நிற்கும் உயிரையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில் நமது கைக்கெட்டும் தொலைவில் உள்ள உயிர் ஆதாரப் பொருள் பச்சைப் பயிறு. அதாவது தோல் நீக்கப்படாத பச்சைப் பயிறு. அதிலும் சிறிய வகை என்றால் இன்னும் சிறப்பு. முளை கட்டிய பச்சைப் பயிறு என்றாலும் இன்னும் கூடுதல் சிறப்பு. பச்சைப் பயிற்றை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறுபயிறு என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்.

    முளை கட்டிய பச்சைப் பயிற்றைப் போட்டு பொங்கல் சமைத்து உண்டால் தூக்கத்திற்கு மாறாக ஊக்கம் கிடைக்கும். உணவகப் பொங்கலில் ஒரு பங்கு தோல் நீக்கிய பச்சைப் பருப்புடன் அதேயளவு மூன்று அல்லது நான்கு பங்கு அரிசி போட்டு பொங்கல் சமைப்பார்கள். முன்னரே சொன்னது போல நெய் என்ற பெயரில் டால்டாவில் தாளிப்புப் போடுவார்கள். இது கையில் ஒட்டாமல் நெழு நெழுவென்று உள்ளிறங்கும். ஆனால் சாப்பிட்ட பின்னர் கைகழுவும் போதே தெரிந்து விடும் அதன் பிசுபிசுப்பு.

    முளை கட்டிய பச்சைப் பயிறு நூறுகிராம் என்றால் நான்கு மடங்கு அதாவது நானூறு கிராம் பச்சை அரிசி போட்டு குழைவாக வேகவிட்டு வெறுமே சீரகத்தையும், ஒரு தேக்கரண்டி மிளகையும் நுணுக்கிப் போட்டு கிளறினால் அற்புதமான சத்து தரும் பொங்கல் தயார். இது நல்ல உழைப்பாளிக்கும் கூட ஊக்க உணவாக அமையும். தொடர்ந்து சுவைப்போம், சுகம் தரும் நல்லுணவு. 

    தொடர்புக்கு- 96293 45938

    • நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார்.
    • கவர்னருக்கு நானக் ஒரு மகான் என்ற உண்மை புலப்பட்டது.

    தற்போது மேற்கு பாகிஸ்தானில் உள்ள தால்வண்டி கிராமம் தான் குருநானக் அவதரித்த சிற்றூர். இந்து முஸ்லீம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் அவர்.

    ஒரு கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கும் இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார்.

    அவதார புருஷரான அவருக்கு உலகியல் படிப்பில் நாட்டம் தோன்றவில்லை. நானக்கின் தந்தை அவரை மாடுமேய்க்க அனுப்பினார். நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார்.

    மாடு மேய்ப்பது இழிவான தொழிலா என்ன? மாடுமேய்த்த கண்ணன் தானே கீதை சொன்னான்? மாடு மேய்க்கும்போது மனத்தை நினைவுகளில் மேயாதிருக்கப் பழக்குவோம். தியானம் செய்து இறைவனைத் தரிசிக்க முயல்வோம்.

    மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு நாள்தோறும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பல மணிநேரம் நானக் தியானம் பழகலானார்.

    மாடுகள் சமர்த்துப் பசுக்கள். கொஞ்ச காலம் நன்றாகத் தான் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்கு மெல்ல மெல்லத் திருட்டுப் புத்தி வந்தது. கண்டிப்பார் யாருமில்லை. மேய்க்க வந்த சிறுவனோ மரத்தடியில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறான். இனி என்ன? மாடுகள் கூட்டம் கூட்டமாக அடுத்தவர் வயல்களை மேயலாயின.

    அதனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். `என்ன அக்கிரமம் இது! மாடுகளை என் வயலில் மேய விட்டுவிட்டு இந்தப் பையன் கண்ணை மூடி உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான். கேட்பாரில்லையா இதை?`

    திருப்பூர் கிருஷ்ணன்


     

    நானக்கின் தந்தைக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. `என்ன அபராதம் சொல்லுங்கள். கட்டிவிடுகிறேன்.` என்றார் அப்பா. நானக் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றான். `உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும், கவலைப்படாதீர்கள்` என்று பாதிக்கப்பட்டவரிடம் சொன்னான். விளைச்சலைத்தான் மாடு மேய்ந்துவிட்டதே என்றார் அவர். `இல்லையில்லை. எனக்குத் தெரியும். உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும்.`

    திரும்பத் திரும்ப நானக் இதையே சொன்னதும் பஞ்சாயத்தில் அனைவரும் சலிப்போடு எழுந்து எவ்வளவு தூரம் பாதிப்பு என்றறிய வயலை நோக்கிச் சென்றார்கள். வயலின் சொந்தக்காரருக்கு மூர்ச்சையால் மயக்கம் வரும்போல் இருந்தது.

    சற்று முன் தாறுமாறாக இருந்த பயிர்களெல்லாம் இப்போது தளதளவென்று வளர்ந்து அந்தக் காலமில்லாத காலத்தில் அறுவடை செய்யுமளவு கதிர் விட்டிருந்தன! பஞ்சாயத்தார் வியந்து நின்றனர். இது சிறுவனாயிருந்தபோதே சித்தர் நானக் தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய முதல் சித்து. இவன் அற்புதக் குழந்தை என்று நானக்கின் காலில் விழுந்து பணிந்தார் அந்த வயலின் உரிமையாளர்.

    நானக் அரசாங்கத்தில் தானியக் காப்பாளராகப் பணிபுரிந்தவர். திடீரென்று நாடெங்கும் பஞ்சம் தோன்றியது. மக்கள் பசியால் கஷ்டப்படத் தொடங்கினர். கவர்னர் நானக்கை அழைத்தார். நல்ல மனிதரான அந்த கவர்னர், மக்களுக்குக் குறைந்த விலைக்கு தானியங்கள் தருமாறு உத்தரவிட்டார்.

    நானக் கவர்னரின் ஆணைப்படியே குறைந்த விலையில் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கலானார். ஆனால் அடிக்கடி அவர் தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலைக்குச் சென்றுவிடுவதை மக்கள் கண்டுகொண்டார்கள்.

    பிறகென்ன? காசு கொடுத்து வாங்கியவர்கள் சிலர். காசு கொடுக்காமல் அள்ளிச் சென்றவர்கள் பலர். சீக்கிரமே தானியங்கள் பெருமளவில் காலி!

    தானியம் குறைந்த விலைக்குத் தான் விற்கப்பட்டது என்றாலும் அதற்கான தொகை கஜானாவில் சேர வேண்டும் அல்லவா? கஜானாவும் ஏறக்குறையக் காலியாகவே இருந்தது. கவர்னருக்குத் தகவல் போயிற்று. நானக் விசாரிக்கப்பட்டார்.

    `நீ தானியத்தைக் குறைந்த விலைக்குக் கொடுத்தாயா? இல்லை இலவசமாகக் கொடுத்தாயா?` என்று கேட்டார் கவர்னர். `இறைவன் சித்தப்படிக் கொடுத்தேன்!` என்று வித்தியாசமாக பதில் சொன்னார் நானக். கஜானாவில் உள்ள நாணயங்களையும் தானியம் எவ்வளவு மீதி இருக்கிறது என்பதையும் கணக்கிடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கவர்னர்.

    என்ன விந்தை! கஜானா முழுவதும் பணத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. தானியக் கிடங்கும் ஒருசிறிதும் தானியம் குறையாமல் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கவர்னருக்கு நானக் ஒரு மகான் என்ற உண்மை புலப்பட்டது. நானக்கின் பாதங்களில் விழுந்து பணிந்தார் அவர். தன் அரசாங்க வேலையைத் துறந்த குருநானக் இல்லறத்தையும் துறந்து துறவியானார்.

    *அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்றபோது அந்த ஊர் கவர்னரான மாலிக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். நானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது. ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று நேரில் வந்து சீறினான்.

    `உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திலிருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்!` என்றார் குருநானக்.

    ரொட்டித் துண்டு கொண்டுவரப்பட்டது. அடுத்த கணம் குருநானக் செய்த செயலின் விளைவைப் பார்த்து மக்கள் வியப்பில் மூழ்கினர்.

    அந்த ரொட்டித் துண்டை எடுத்துக் கையால் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிலிருந்து செக்கச் செவேல் என ரத்தம் வழிந்தது. `நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம் தான் இது!` என்றார் நானக்.

    பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது.

    கவர்னர் மாலிக்பாகோ திகைப்படைந்தான். அவன் கால்கள் அந்த விளைவைப் பார்த்து நடுநடுங்கத் தொடங்கின. தன் இல்ல ரொட்டியிலிருந்து வழிந்த ரத்தம் அவன் மனத்தை மாற்றியது. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான்.

    அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்தான். அவன் அவரின் அடியவனானான்.

    அதுசரி. சாதாரண ரொட்டியை எடுத்துப் பிழிந்தால் அதிலிருந்து எப்படி ரத்தம் வரும்? வரும்! சித்தர்கள் கைப்பட்டால் ஒரு பொருளின் உள்ளே அதற்கு உரியவரின் மன உணர்வுகள் பதிவாகி இருப்பதைக் கூட அந்தப் பொருள் சொல்லிவிடும்!

    அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டு அருளுரைகளை வழங்கலானார். ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன், அடியவன் போல் வந்தான். நானக்கிடம் ஏராளமான பணம் இருக்கும் என்றும் அவரைக் கொன்று அந்தச் செல்வத்தை அபகரிக்கலாம் என்றும் திட்டமிட்டான்.

    நானக்கிடம் பணமே இல்லை என்பதை அவன் நம்பத் தயாராயில்லை. கபட வேடதாரியான அவன் நானக்கைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான்.

    ஒரு பார்வையில் உள்ளத்தை ஊடுருவி அனைத்தையும் உணரும் குருநானக் உடனே சம்மதித்தார். தன் அடியவர்களான மர்தானாவோடும் பாலாவோடும் அவன் இல்லத்திற்குச் சென்றார். திருடன் வீட்டு வாயிலில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார்.

    `மர்தானா! உன் இசைக்கருவியான ரூபாப்பை எடுத்து மீட்டு!` என்றார். ரூபாயைத் தவிர வேறெதுவும் அறியாத அந்தத் திருடன் அன்று ரூபாப் இசையைக் கேட்கலானான்.

    நானக் மனம் இறையனுபவத்தில் உயரே உயரே பறக்கலாயிற்று. அவரது தேனினுமினிய குரலிலிருந்து பாடல் பிறந்தது. திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளி விவரத்தோடு விவரிக்கலாயிற்று!

    முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போகக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளையடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடலில் விவரித்தபோது சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.

    `மகனே! பாவ வாழ்வை விட்டுவிட்டுப் புண்ணிய நெறிக்கு வா!` என அவன் தலையை வருடி அறிவுரை சொன்னார் நானக்.

    `பிரபோ. இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழிசொல்ல வேண்டும்!` என்று அவன் கெஞ்சினான்.

    குருநானக் அவன் பாவங்கள் தொலைய ஒரு வழி சொன்னார். குருநானக் சொன்ன அந்த வழி எந்த ஞானியும் சொல்லாத ஒரு விந்தையான வழி.

    சஜ்ஜன் திகைப்பில் ஆழ்ந்தான். அவன் எந்தெந்த வீடுகளில் கொள்ளையடித்தானோ அந்த வீடுகளுக்கெல்லாம் சென்று தான் கொள்ளையடித்த விவரத்தைச் சொல்லி, அந்தந்த வீட்டினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் குருநானக்.

    கன்னங்களில் கண்ணீர் வழிய வழிய அந்தக் கொள்ளைக்காரன் அவர் சொன்னபடியே செய்தான். மக்கள் முதலில் திகைத்தாலும் அவனை வெறுத்தாலும் அவனது கண்ணீரைக் கண்டு அவனை மன்னிக்கத் தொடங்கினார்கள். அவன் மனம் நிம்மதி அடைந்தது.

    அவன் குருநானக்கின் அடியவனாக மாறினான். தானே உழைத்துச் சாப்பிட்டு எளிய வாழ்க்கை வாழலானான். இப்படி எண்ணற்ற மனிதர்களைத் தம் பேச்சாலும் செயலாலும் வாழ்க்கை முறையாலும் தூயவர்களாக மாற்றினார் குருநானக். அவரது வாழ்க்கை இன்னும் பற்பல அதிசய சம்பவங்களைக் கொண்டது.

    குருநானக் தேவ்ஜி தம் எழுபதாவது வயதில் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கர்த்தார்பூரில் கடவுளுடன் இணைந்தார் என்று சொல்லப்படுகிறது.

    எளிமை, தூய்மை, உழைத்து வாழ்தல், எளியோருக்கு இரங்குதல் போன்ற அரிய பண்புகளை எல்லா மனிதர்களும் பின்பற்றுமாறு அவரது தூய தவ வாழ்க்கை அறிவுறுத்துகிறது.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • ரஜினி, கமல் இருவருக்கும் வருத்தம் ஏற்பட்டது.
    • தமிழ்நாடு முழுவதும் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரஜினியும், கமலும் 1975-ம் ஆண்டு "அபூர்வ ராகங்கள்" படத்தில் தொடங்கி பல படங்களில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். 1975-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ரஜினி மொத்தம் 53 படங்களில் நடித்திருந்தார்.

    அதாவது ஆண்டுக்கு சராசரியாக 10 அல்லது 11 படங்களில் ரஜினி நடித்து இருந்தார். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு மாதத்துக்கு ஒரு படம் என்ற வகையில் ரஜினி படங்கள் வெளியாகி இருந்தது.

    இந்த 53 படங்களில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, அவள் அப்படித்தான், ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, தப்புத் தாளங்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் உள்பட 13 படங்களில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்திருந்தனர்.

    தெலுங்கு, இந்தி படங்களையும் கணக்கிட்டால் இருவரும் 18 படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் ரஜினிக்கும், கமலுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே நல்ல நட்பும், சிறப்பான புரிதலும் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் இருவரிடையேயும் சண்டையை மூட்டி விட்டு பிளவை ஏற்படுத்திவிட வேண்டும் என எத்தனையோ பேர் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினியும், கமலும் பொதுவாக திரை உலகில் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.

    அதாவது ஒருவர் மீது ஏதேனும் அதிருப்தியோ அல்லது சந்தேகமோ ஒருவருக்கு ஏற்பட்டால் அதை இருவரும் உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அதனால்தான் எத்தனையோ "ஜால்ரா"க்கள் எத்தனையோ தடவை முயற்சி செய்தும் அவர்களது நட்பை சீர்குலைக்க இயலவில்லை. அந்த சிறப்பான, உண்மையான நட்பு இன்று வரை நீடித்து நிலைத்து இருப்பதற்கு அவர்கள் இருவரிடமும் அப்போதும், இப்போதும் உள்ள வெளிப்படையான பேச்சே முக்கியக் காரணமாகும்.

    அவர்கள் நட்பு "நினைத்தாலே இனிக்கும்" படப்பிடிப்பு நாட்களின் போது மிக, மிக உச்சத்தில் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் சிங்கப்பூர் சாலைகளில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். ஆனால் அந்த படமே ரஜினியையும், கமலையும் இணைந்து நடிப்பதில் இருந்து நிரந்தரமாக பிரிய வழி வகுத்து விட்டது.

    "நினைத்தாலே இனிக்கும்" படம் வெளியான போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும் அந்தப் படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் திரண்டு வந்தனர். ரஜினி வரும் காட்சிகளில் அவரது ரசிகர்கள் தேங்காயில் கற்பூரம் ஏற்றி காண்பித்து கொண்டாடினார்கள். கமல் வரும்போது அவரது ரசிகர்களும் அதே மாதிரி செய்தனர்.

    படம் வெளியான ஒரு வாரத்தில் "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் "சிறப்பாக நடித்திருப்பது யார்?" என்று ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. பல ஊர்களில் "நினைத்தாலே இனிக்கும்" படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மிகப்பெரிய அடி-தடியே நடக்க ஆரம்பித்து விட்டது.

    இதைப் பார்த்து ரஜினி, கமல் இருவருக்கும் கடும் வருத்தம் ஏற்பட்டது. அந்த காலக் கட்டத்தில் ரஜினியின் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை கமல் கவனித்தப்படி இருந்தார். குறிப்பாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" படத்தில் ரஜினி நடந்து கொண்ட விதம், கமலுக்குள் மிகுந்த அதிருப்தியை கொடுத்திருந்தது. மேலும் இருவரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதால் அதிக சம்பளம் பெற முடியாமல் போகும் சூழலையும் உணர்ந்தனர்.

    இதுபற்றி ரஜினியிடம் ஒருநாள் கமல் விளக்கமாகப் பேசினார். "இதற்கு தீர்வு காண என்ன செய்யலாம்?" என்று ரஜினி கேட்டார். அதற்கு கமல், "இனி நாம் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து விடலாம். தனித்தனியாக ஹீரோ வேடங்களில் நடித்தால் இருவருக்கும் அது லாபமாக இருக்கும்" என்றார்.

    இந்த யோசனை ரஜினிக்கும் பிடித்திருத்தது. உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். அடுத்த நாளே கமலும், ரஜினியும் ஒன்றிணைந்து நிருபர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தனர். "இனி நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டோம்" என்று அறிவித்தனர். அவர்களது இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒரு பேட்டியில் ரஜினி இதுபற்றி மனம் திறந்து கூறி இருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

    ''அபூர்வராகங்களில் நடிக்க வந்தபோது நான் ஒரு புது நடிகன். யாருக்கும் அறிமுகம் இல்லாத நடிகன். ஆனால் கமல்ஹாசன் 1970-களிலேயே கதாநாயகனாக பிரபலம் ஆகி இருந்தார். அவர் தனது நடிப்புத் திறமையால் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறோம் என்பது எனக்கு அந்த சமயத்தில் பிரம்மாண்டமான உணர்வுகளை ஏற்படுத்தியது.

    அது மட்டுமல்ல கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாட்கள் என் மனதில் பசுமையாக உள்ளன. அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. அவரிடம் இருந்து நான் நடிப்பு விஷயத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். திரைப்பட கல்லூரியில் படித்ததை விட அவர் மூலம் எனக்கு கண் எதிரில் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. படப்பிடிப்பு நேரங்களில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைத்தது அவர்தான். நான் என்ன சந்தேகம் கேட்டாலும் அவரும் ஆர்வத்துடன் எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

    நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் எல்லாம் அவர் தான் கதாநாயகனாக நடித்தார். நான் வில்லனாக நடித்தேன். அதற்காக அவர் என்னை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு நடத்தியதே கிடையாது. சக கலைஞன் என்ற முறையில் அவர் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பார். அதுபோல்தான் அவர் எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல் என்னோடு பழகினார்.

    பொதுவாக திரையுலகில் யாரும் மற்றவரை படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் என்னை பல படங்களுக்கு சிபாரிசு செய்தார். பல தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி அவர் நிறைய எடுத்து கூறி இருக்கிறார். நிறைய இயக்குனர்களுக்கு என்னைப் பற்றி சொல்லி வாய்ப்புகள் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

    அவர் நினைத்து இருந்தால் என்னைப் பற்றி சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மனதில் எனக்கு தனி இடம் இருந்ததால் தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருந்தார். அவர் மட்டும் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தால் எந்த டைரக்டரும், தயாரிப்பாளரும் என்னை தேடி வந்து இருக்க மாட்டார்கள்.

    ஆனால் கமல்ஹாசன் என்னைப் போட வேண்டும் என்று பல டைரக்டர்களிடம் வற்புறுத்தி சொல்லி இருக்கிறார். அதனால்தான் 1976 மற்றும் 1977 -ம் ஆண்டுகளில் எனக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது. அதற்கு ஆதாரமாக எத்தனையோ சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். உதாரணத்திற்கு 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் என் கேரக்டருக்கு வேறு ஒருவரைத்தான் டைரக்டர் ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்து இருந்தார்.

    ஆனால் கமல்ஹாசன்தான் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நான் நடிப்பதற்கான அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்காக அவர் என்னுடைய தனிப்பட்ட நடிப்பு விஷயங்களில் ஒருநாள் கூட தலையிட்டது இல்லை. குறிப்பாக படங்களில் என் வேடம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் ஒரு போதும் தலையிட்டதே இல்லை.

    அதேபோல 'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தபோது நானும், கமலும் இரவு முழுவதும் சிங்கப்பூர் தெருக்களை சுற்றி வருவோம். விடிய விடிய சுற்றி பார்த்துக் கொண்டேஇருப்போம். அதிகாலையில்தான் மீண்டும் ஓட்டலுக்கு வந்து தூங்குவோம். சிறிது நேரம் தூங்குவதற்குள் படப்பிடிப்புக்கு அழைத்து செல்ல கார் வந்துவிடும். அவசரம் அவசரமாக நானும் அவரும் புறப்பட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு செல்வோம்.

    படப்பிடிப்பு நடக்கும் நேரங்களில் ரொம்ப ஜாலியாக இருக்கும். நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறோம். மதியம் படப்பிடிப்பு இடைவேளையில், நேரம் கிடைக்கும்போது ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்கி ஓய்வு எடுப்போம். சில சமயங்களில் எங்களது உடைகளைக் கூட நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

    அவ்வளவு ஆழமானது எங்களின் நட்பு. இப்போது நினைத்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதை நான் என் வாழ்வின் பொற்காலமாக கருதுகிறேன். இந்த நிலையில்தான் 'நினைத்தாலே இனிக்கும்' படம் முடிந்த பின்பு ஒரு நாள் நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது தமிழ் திரையுலகில் இருவரும் சேர்ந்தே நடித்துக் கொண்டிருந்தால், முன்னுக்கு வர முடியாது. எனவே இனி படங்களில் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

    படங்களில் இனி கதாநாயகனாக நடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறினார். அதுதான் பொருளாதார ரீதியாகவும் நல்லது என்றும் கமல்ஹாசன் எனக்கு ஆலோசனை வழங்கினார். அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் நடிப்பில் நான் எனக்கென ஒரு தனிப்பாதை அமைத்துக் கொண்டேன்.

    இவ்வாறு ரஜினி அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ரஜினியிடம் ஏற்பட்டு இருந்த உடல்நல பாதிப்பும், மனநல பாதிப்பும் நீங்காமல் நீடித்துக் கொண்டே இருந்தது. அலாவுதீனும் அற்புத விளக்கும், அன்னை ஓர் ஆலயம் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பில் ரஜினியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வருத்தப்பட்டார். அவர் ரஜினியை அழைத்து அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். ரஜினிக்கு என்ன அறிவுரை சொன்னார் என்பதை நாளை பார்க்கலாம்.

    • பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும்.
    • பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும்.

    பெண்கள் சமீப காலமாக சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை 15 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த 2 வகை பாதிப்புகளிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்:

    லூபஸ் பாதிப்பு கொண்ட பெண்களுக்கு கருத்தரிப்பதிலும், கர்ப்ப காலத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனது 30 வருட அனுபவத்தில் இந்த லூபஸ் பாதிப்புடன் நிறைய பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை மூலம் கருத்தரிப்பதற்கு வருவதை பார்த்திருக்கிறேன். இது மிகவும் சவால் நிறைந்த குழந்தையின்மை பிரச்சனை ஆகும். ஏனென்றால் இவர்களுக்கு நிறைய பாதிப்பு காரணிகள் இருக்கிறது.

    அவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம், இருதயம் பழுதாகலாம், நுரையீரல் பழுதாகலாம். இதுபோன்ற பல சிக்கல்கள் அந்த பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையும் பாதிப்படைந்து பல பிரச்சனைகள் உருவாகும்.

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுமா என்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு. லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் என்னிடம் வந்து கேட்டார். டாக்டர், 'நான் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தைப்பேறு பெற முடியுமா?' என்று கேட்டார். கண்டிப்பாக திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்.

    இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு 2 காலகட்டங்கள் இருக்கிறது. அதாவது ஒன்று நோய் தீவிரம் அடையும் காலகட்டம். மற்றொன்று நோய் குணமடையும் காலகட்டம் ஆகும். இதில் நோய் தீவிரம் அடையும் (எக்சாசர்பேசன்) காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க கூடாது. அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் நன்றாக குறைவாகும் (ரெமிசன்) காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்கலாம்.

    இந்த காலகட்டத்தை நிர்ணயிப்பதற்கு சில வரையறைகள் இருக்கிறது. இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும். அதில் ஆன்டிபாடி உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சினைப்பையில் முட்டைகள் குறையும் அபாயம்:

    இவை தவிர பெண்கள் இந்த நோய் தாக்கத்துக்காக பல மாத்திரைகளை எடுத்து இருப்பார்கள். இதில் குறிப்பாக செல்களில் அழற்சியை குறைப்பதற்கு கொடுக்கின்ற மருந்துகள் எல்லாம் புற்றுநோய்க்கு கொடுப்பது போன்றது ஆகும். இவை செல்களில் உள்ள அழற்சியை குறைப்பது போல, கர்ப்ப காலத்தில் கொடுத்தால் கரு வளர்ச்சியையும் பாதிக்கும்.

    இதனால் அந்த பெண்களுக்கு கர்ப்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அவர்களுக்கு குறைபாடு உள்ள குழந்தை உருவாகலாம். இது கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதால் குறையுள்ள குழந்தை பிறக்கலாம். அதனால்தான் இந்த காலகட்டத்தில் சீரிய மருத்துவம் என்பது இவர்களுக்கு தேவையான ஒன்றாகும்.

    இந்த பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்பம் தரிப்பதற்கு தேவையான சினைப்பையின் முட்டைகளையும் குறைக்கும். சில நேரங்களில் சினைப்பைக்கு போகின்ற ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதில் உள்ள திசுக்கள் குறைவாகி, சினைப்பையில் உள்ள முட்டைகளும் குறைவாகும். பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும். அதனால் அவர்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இதற்கு எடுத்துக் கொள்கின்ற மாத்திரைகள், மருந்துகள் எல்லாமே பைபுரோசிசை உருவாக்கும். ஏனென்றால் செல்களில் அழற்சி இருக்கும்போது அதே கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கின்ற மருந்து, மாத்திரைகள் எல்லாமே அந்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் திசுக்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு கருத்தரிப்பதிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த மாதிரியான பெண்களுக்கு கருசிதைவு ஏற்படுவது மிகவும் அதிகம். அவர்களுக்கு திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படும். 2 மாதம், 3 மாதம், 4 மாதங்களில் கருச்சிதைவு ஏற்படும். பல நேரங்களில் 8 மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகமாகி, கர்ப்பத்திலும் ரத்த அழுத்தம் அதிகரித்து கருவில் இருக்கும் குழந்தை இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் ரத்த ஓட்டம் நின்று போகும், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்படலாம், தண்ணீர் சத்து குறையலாம், குழந்தைக்கு துடிப்பு நின்று போகலாம், எடை குறைவான குழந்தை பிறக்கலாம். இந்த மாதிரியான எல்லா சிக்கல்களும் இந்த பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் தான் லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு குறிப்பிட்ட காலகட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தான் இந்த நோயின் தாக்கம் குறையும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்க முயல வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை:

    குறிப்பிட்ட காலகட்டத்தில் நோய் குணமடைந்த நிலையில், நோய் பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, இவர்களுக்கு ஏற்கனவே இருந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் அதிகமாகலாம், குறை பிரசவம் ஏற்படலாம், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். பல நேரங்களில் மூளைக்கு செல்கின்ற ரத்த குழாய்கள் பழுதாகி வலிப்பு ஏற்படலாம். கை, கால்கள் விழுந்து போகலாம். சில நேரங்களில் கோமா நிலைக்கு கூட செல்லலாம். அவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் சிறுநீரகம் பழுதாகி, சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்த விஷயம். அந்த பாதிப்பு அவர்களுக்கு எப்போது குறைவாக இருக்கிறதோ, அப்போது கருத்தரிப்ப தற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    இவர்களுக்கு முக்கியமான சிகிச்சை முறைகளில் எச்.சி.கியூ. (ஹைட்ராக்சி குளோ ரோகுயின்) மருந்து கொடுக்கிறோம். அதை கொடுக்கும்போது, லூபஸ் பாதிப்பால் ஏற்பட்ட அழற்சியை குறைத்து கருவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தாயின் உடல் நிலையையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் தற்காலத்தில் ஸ்டீராய்டு, ஆஸ்பிரின் உள்ளிட்ட மருந்துகள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையானது. கருத்தரிப்பதில் 2 அல்லது 3 முறை தோல்வி அடைந்தால், முதலில் முக்கியமாக லூபஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த லூபஸ் இருக்கிறவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் லூபஸ் வரலாம். அதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவை ஏற்படலாம். இந்த பெண்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்தால் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனம் மற்றும் கண்காணிப்பு தேவை.

    அவர்களுக்கு பலவிதமான மருந்துகள் கொடுக்க வேண்டி இருக்கும். அவை அனைத்துமே கருவின் வளர்ச்சிக்கும் தாயின் பாதுகாப்புக்கும் முக்கியமான தேவை. இவை தவிர இதற்கு வாத நோய் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் தாய்க்கு பாதிப்பு வரக்கூடாது. அதேபோல் சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர், தோல் நிபுணர் ஆகிய அனைவருமே சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பெண்ணுக்கு தன்னுடைய நிலையும் பாதிக்காமல், குழந்தையின் வளர்ச்சியையும் பாதுகாக்க முடியும்.

    அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்:

    என்னுடைய அனுபவத்தில் லூபஸ் பாதித்தவர்கள் சுமார் 45 பெண்களை பார்த்து இருக்கிறேன். இதில் ரொம்ப சவாலே 2 முறை மற்றும் 3 முறை கருச்சிதைவு, 6 மாதத்தில் குழந்தை இறப்பு, வலிப்பு, உடனடியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் பழுது போன்ற பாதிப்புகளுடன் வந்தவர்கள் நிறைய பேர். இதனை முறையாக சரி செய்து, பின்னர் கருவுற்ற பிறகு கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு சிறப்பான கண்காணிப்புடன் சிகிச்சை கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். ஏனென்றால் இவர்கள் எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கும், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்பதுதான் அந்த பயம். இதனால் கண்டிப்பாக அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனென்றால் இந்த பெண்களுக்கு அந்த மாதிரி பாதிப்புகள் வரலாம். எனவே முறையாக தேர்ச்சி பெற்ற, இதில் அனுபவம் வாய்ந்த மருத்துவர் தான் அவர்களின் கர்ப்பத்தை கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவையான மருந்துகள் எல்லாமே சீராக கொடுக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு வராமல் பார்க்க வேண்டும். அது சவால் நிறைந்தது தான். ஆனால் முறையாக செய்தோம் என்றால் இந்த பாதிப்பை சரி செய்து, அந்த பெண்ணை குழந்தைப்பேறு பெற வைக்க முடியும்.

    பல நேரங்களில் கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு லூபஸ் பாதிப்பில் குணமடையும் நிலையை கொடுக்கும். குழந்தை பெற்றவுடன் அவர்கள் இதில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கான வாய்ப்புகள் கூட அதிகம். கண்டிப்பாக லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே கருத்தரித்தால் கூட உங்களது கர்ப்பகால சிகிச்சை மற்றும் பிரசவத்தை ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் முக்கியமான ஒன்று, கர்ப்ப கால சிகிச்சையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

    • ரஜினி விஜயா நர்சிங் ஹோமில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • பாலச்சந்தருக்கு கடும் கோபம் வந்தது.

    ரஜினியை என் வீட்டுக்கு அழைத்து செல்லட்டுமா? என்று ரெஜினா வின்சென்ட் கேட்டதும் டாக்டர் செரியனுக்கு முதலில் மிகவும் தயக்கமாக இருந்தது. அப்போது ரஜினி, "நான் அம்மா வீட்டில் இருந்தால் வசதியாக இருக்கும்" என்று கூறினார்.

    டாக்டர் செரியன் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவைப் பார்த்தார். அந்த சமயத்தில் மருத்துவமனையில் திரைத்துறை பிரபலங்களும் மற்றும் பெங்களூர் நண்பர்களும் இருந்தனர். அவர்களுக்கும் ரெஜினா அம்மாவின் பாசத்தால் ரஜினி கட்டுப்பட்டு அமைதியாக மாறியது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரெஜினா வின்சென்ட் பற்றி அப்போதுதான் முதல்முறையாக தெரிய வந்தது.

    திரை உலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினிக்கு இப்படியொரு பெயரில் ஒருவர் பழக்கமாகி இருக்கிறார் என்பது வெளிஉலகுக்கும் அப்போதுதான் முதன் முறையாக தெரிய வந்தது. ரஜினி ஆஸ்பத்திரியில் தன்னை மறந்து படுத்த படுக்கையாக இருந்த நேரங்களில் கூட ரெஜினா அம்மா என்று அவர் பெயரை உச்சரித்ததன் மூலம் அவர் மனதுக்குள் தாய் பாசம் எந்த அளவுக்கு ஆழமாக பதிந்து இருந்தது என்பது தெரிய வந்தது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரஜினியின் உள்ளத்தில் மட்டுமின்றி தாய் பாச உணர்வோடும் பின்னிப்பிணைந்தவராக ரெஜினா வின்சென்ட் இருந்தார். டாக்டர் செரியன் தலைமையிலான மருத்துவக் குழுவுக்கும் மருந்துகளை மிஞ்சிய சக்தியாக ஒரு தாயின் பாசம் இருப்பதை கண் கூடாகப் பார்த்தனர்.

    அந்த சமயத்தில் டாக்டர் செரியனிடம் ரெஜினா வின்சென்ட் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். "ரஜினிக்கு ஓய்வு வேண்டும். அவரை நன்றாக தூங்க வைக்க வேண்டும். அவ்வளவுதானே. அது ஒரு பிரச்சினையே இல்லை. என் வீட்டுக்கு நான் அழைத்து செல்கிறேன். என் பங்களாவுக்கு வந்தால் ரஜினி நிம்மதியாக தூங்குவார். அவரை என் வீட்டுக்கு அழைத்து செல்லட்டுமா?" என்று கேட்டார்.

    டாக்டர் செரியனுக்கு இதில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பம் நீடித்தது. சிகிச்சை அளிக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் ரஜினியை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் தயங்கினார். அவரது மனதில் தோன்றிய எண்ணத்தை ரெஜினா வின்சென்ட் புரிந்துக் கொண்டார்.

    அவர் டாக்டர் செரியனிடம், "நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது. என்னை நம்பி நீங்கள் அனுப்பலாம்" என்றார். கடைசியில் டாக்டர் செரியன் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து ரஜினி விஜயா நர்சிங் ஹோமில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு பங்களாவின் கீழ்தளத்தில் உள்ள ஒரு அறையை ரஜினிக்காக ரெஜினா வின்சென்ட் ஒதுக்கிக் கொடுத்தார். ரஜினி அன்றிரவு அங்கு நிம்மதியாக படுத்துத் தூங்கினார். ரெஜினா வின்சென்ட் சொன்னதை கேட்டு ரஜினி முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு இருந்தது. என்றாலும் அவர் நள்ளிரவில் திடீரென விழித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக சமையல்காரர் மீரானையும் அங்கே விடிய விடிய ரெஜினா வின்சென்ட் காவலுக்கு வைத்து இருந்தார்.

    அன்று இரவு முழுவதும் ரஜினி நிம்மதியாகத் தூங்கினார். அவரிடம் முழுமையான மாற்றம் உருவாகி இருந்தது. காலையில் எழுந்த போது ரஜினி புத்துணர்ச்சியோடு இருந்தார். அவருக்கு ரெஜினா வின்சென்ட் காலை உணவு கொடுத்து மதுஅருந்தக் கூடாது என்ற அறிவுரையை மீண்டும் சொன்னார். பிறகு டாக்டர் செரியனுக்கு போன் செய்தார்.

    'சார்... ரஜினி நேற்றிரவு இங்கு நன்றாக தூங்கினார். இப்போது அமைதியாக இருக்கிறார். எந்தக் கவலையும் வேண்டாம்" என்றார். இதைக் கேட்டதும் டாக்டர் செரியனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ரஜினியை எப்படி தூங்க வைத்தீர்கள்? என்று கேட்டார்.

    அதற்கு ரெஜினா வின்சென்ட், "எந்த மருந்தும் இல்லை. நம்பிக்கையான இடத்தில் இருப்பதாக நினைத்து தூங்கி விட்டார்" என்றார். என்றாலும் டாக்டர் செரியனுக்கு ஆச்சரியம் நீங்கவில்லை. ரஜினியை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார்.

    அதை ஏற்றுக் கொண்ட ரெஜினா வின்சென்ட் அன்று மாலை 5 மணிக்கு ரஜினியுடன் வருவதாக கூறியிருந்தார். ஆனால் அன்று காலையிலேயே ரஜினி படப்பிடிப்பு இருக்கிறது. அதை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டு புறப்பட்டார். அவரிடம் மாலை 5 மணிக்கு விஜயா நர்சிங் ஹோமுக்கு வந்து விட வேண்டும் என்று ரெஜினா வின்சென்ட் உத்தரவிட்டு இருந்தார்.

    அன்று மாலை 5 மணிக்கு அவர் மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் கழித்து சர்வ சாதாரணமாக ரஜினி வந்தார். அவருக்கு டாக்டர்கள் குழு மீண்டும் சிகிச்சை அளிக்கத் தொடங்கியது. தனி அறையில் ரஜினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரெஜினா வின்சென்ட்டை வெளியில் இருக்குமாறு கூறினார்கள்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆவேசம் வந்து விட்டது. ரெஜினா வின்சென்ட்டை டாக்டர்கள் அவமரியாதை செய்து விட்டதாக நினைத்தார். அடுத்த நிமிடமே அந்த அறையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து டாக்டர்கள் மீது வீசினார். டாக்டர்கள் பயந்து அலறியடித்து ஓடினார்கள்.

    இதை கண்ட தலைமை டாக்டர் செரியன் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தார். இனி ரஜினிக்கு எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது. அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறி விட்டார். அவரை ரெஜினா வின்சென்ட்டை எவ்வளவோ சமரசம் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர்கள் ஏற்கவில்லை.

    இதையடுத்து ரெஜினா வின்சென்ட் காரில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது ரஜினியும் தனது காரில் அவரை பின் தொடர்ந்து சென்றார். வீட்டுக்கு சென்றதும் ரஜினிக்கு பொறுமையாக ரெஜினா வின்சென்ட் மீண்டும் ஆலோசனை வழங்கினார். அப்போதுதான் டாக்டர்களை அடிக்க பாய்ந்தது எவ்வளவுப் பெரிய தவறு என்று ரஜினிக்கு புரிய வந்தது.

    தன்னையும் அறியாமல் இது நடந்து விட்டதாக அவர் வருத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் வழக்கம் போல படப் பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி இருந்தார். ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதும், சிறிது நேரத்திலேயே ஏதாவது ஒரு காரணத்துக்காக ரஜினி கண்கள் சிவக்க கோபப்படுவதும் படப்பிடிப்பு தளங்களில் சர்வ சாதாரணமாக நடந்தது. இது ரஜினியை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களை மிகவும் சங்கடப்பட வைத்தது. ரஜினி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று தவித்தனர்.

    ஒரு நாள் ரெஜினா வின்சென்ட் வீட்டில் ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அங்கு பிராமண நண்பர் ஒருவர் வந்தார். அவர் ரஜினியைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் முகம் மாறினார். ரஜினி பக்கத்தில் அவர் செல்வதற்கே அவர் பயந்தார்.

    இதை ரெஜினா வின்சென்ட் கவனித்துக் கொண்டே வந்தார். "எதற்காக ரஜினியை பார்த்து பயப்படுகிறீர்கள்? அவர் இப்போது நல்ல மனநிலையில்தான் இருக்கிறார். கவலை வேண்டாம்" என்றார். அதற்கு அந்த பிராமண நண்பர் கூறுகையில், "எனக்கு பயம் இல்லை. ஆனால் இவரைப் பற்றி உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இவருக்கு சிலர் சூனியம் வைத்து இருக்கிறார்கள். 4 சூனியம் இவர் மீது ஏவி விடப்பட்டு இருக்கிறது. எனவே இவரிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்" என்று கூறினார்.

    இதை கேட்டதும் ரஜினிக்கும், ரெஜினா வின்சென்ட்டுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. கிறிஸ்தவரான ரெஜினா வின்சென்ட்டுக்கு சூனியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் நெருங்கிய குடும்பத்து நண்பர் சொன்னதால் அவரால் அதை அலட்சியப்படுத்தவும் முடியவில்லை.

    ரஜினிக்கும் அதிர்ச்சி நீங்கி பயம் ஏற்பட்டது. ஏற்கனவே அவரிடம் திரையுலகை சேர்ந்த சிலர், "உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்" என்று சில வாரங்களுக்கு முன்புதான் கூறி இருந்தனர். ரஜினியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான் அந்த செயலில் ஈடுபட்டதாகவும் திரையுலகில் வதந்தி பரவி இருந்தது.

    மேலும் ரஜினி அந்த சமயத்தில் ஒரு நடிகையை உயிருக்கும் மேலாக நேசித்தார். ஆனால் அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் அதை அறிந்து ரஜினி மீது ஆட்களை ஏவி தாக்குதல் நடத்த செய்தார். இதுவும் ரஜினியிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தது.

    ஏற்கனவே உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தனக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று மிகவும் பயப்பட்டார். வெளியில் செல்வதற்கு கூட அவருக்கு சற்று யோசனையாக இருந்தது. தனது பாதுகாப்புக்காக ரஜினி எப்போதும் இடுப்பில் ஒரு சிறு கத்தியை சில நாட்கள் மறைத்து வைத்திருந்தார் என்றால், அவர் எந்த அளவுக்கு மனநலத்தில் பாதிக்கப்பட்டு இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    ரஜினியின் மனநலப் பாதிப்பால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சினை உருவாகிக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், தர்மயுத்தம், நான் வாழ வைப்பேன், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் ஆகிய 6 படங்களில் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

    இதில் நினைத்தாலே இனிக்கும் படம் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட வேண்டியது இருந்ததால் கடைசி கட்ட படப்பிடிப்பு நடத்தப் பட்டது. அப்போது படக்குழுவினருடன் ரஜினி சண்டை போட்டார். இதனால் பாலச்சந்தருக்கு கடும் கோபம் வந்தது. ரஜினியை விட்டு பிரிய முடிவு செய்தார். இதனால் ரஜினி என்ன செய்தார் என்பதை நாளை பார்க்கலாம்.

    • ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
    • முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.

    * நடுத்தர வயதாக இருந்தாலும், நன்கு ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்கின்றீர்களா? இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது காலத்தின் கட்டாயம். சில கூடுதல் கவனங்கள் தேவைப்படுகின்றது.

    * இளவயதாக இருந்தாலும் வருடத்திற்கு 2-3 முறை உங்கள் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம்.

    * வயது 30 ஆகி விட்டதா? ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடும்ப ரத்த உறவுகளில் யாருக்கேனும் இருந்தால் இதில் கூடுதல் கவனம் அவசியமாகின்றது.

    * ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * தேவையான தடுப்பூசிகளை போட்டு உள்ளீர்களா?

    * நம்மை பற்றிய மருத்துவ குறிப்புகள் கொண்ட ஒரு சிறிய நோட்டு புத்தகம் வைத்துக் கொள்ளலாம்.

    * கையை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் (அ) சிறிய கிருமி நாசினி கையில் அவ்வப்போது போடுவது நல்லது.

    * சுய வைத்தியம் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

    * டாக்டர் எழுதும் மருந்தினை குறைத்து எடுத்துக் கொள்வதும் (அ) அதே சீட்டினை வருடக் கணக்கில் காட்டி மருந்து வாங்கி சாப்பிடுவதும் தவறு.

    * தண்ணீரினை வடிகட்டி காய்ச்சி குடிக்கின்றீர்களா? இவற்றையெல்லாம் முறைப்படி ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.

    உடலுக்காக செய்ய வேண்டியவை

    * தினம் 30 நிமிடம் நடப்பது கட்டாயமாகும்.

    * முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.

    * யோகா அவசியம்

    * மூச்சு பயிற்சி அவசியம்.

    * பயிற்சியாளர் மூலம் உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை கற்று பயில வேண்டும்.

    * சீரான எடை பராமரிப்பு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதானே.

    * தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை ஓயாது டி.வி. ஓடுவதும், ஒலிப்பதும், போன் பார்ப்பதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    * காலை, மாலை நேரத்து வெயில் 30 நிமிடங்களாவது உங்கள் மீது படுகின்றதா?

    உட்காரும் பொழுதும், நடக்கும் பொழுதும் வளைந்து நெளிந்து இல்லாமல் நேராய், கம்பீரமாய் இருக்கின்றீர்களா?

    * எந்த மூட்டில் வலி இருந்தாலும் உடனடியாக உரிய கவனம் கொடுப்பது நல்லது.

    உணவு-சத்துணவு

    * காய்கறி, பழங்கள் இவைகளை ஒரு நாளைக்கு 5 முறை பரிமாறிக் கொள்ளலாம்.

    * அன்னாசி, கொய்யா, வாழை, ஆரஞ்சு, தர்பூசணி இப்படி பழ வகைகளை சிறிதளவாக எடுத்துக் கொள்ளலாம். உணவில் காய்கறிகள் ஏதேனும் இல்லாது இருக்கக் கூடாது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இந்த நிறங்களில் உங்கள் உணவு தட்டு, பருப்பு, காய்கறி இவற்றினால் தேவையான அளவு இருக்க வேண்டும்.

    * முழு தானியம், பிரவுன் அரிசி, சீரக சம்பா, தூயமல்லி அரிசி என வகை வகையாய் உள்ளன.

    * அதிக உப்பு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடாம்-இவை 'நோ' தான்.

    * புரதம் இல்லாத உணவு உணவாகாது - பருப்பு, முட்டை, பால் இவற்றினை பயன் படுத்தலாமே.

    கமலி ஸ்ரீபால்


     

    * காலை உணவினை தவிர்ப்பது, சீக்கிரம் ஒருவரை நோயாளி ஆக்கும்.

    * பொரித்த, வறுத்த போன்ற எண்ணை பலகாரங்களுக்கும் 'நோ' தான்.

    * இரவு 7 மணிக்குள் உணவினை முடிக்க முடிந்தால் ஆரோக்கியம் கூடும்.

    இருதயம்

    * புகை பிடிப்பதனை நிறுத்தி விட்டீர்களா? எப்போதாவது என்பதும் தீங்கு தான்.

    * குடி என்பதே வேண்டாமே

    * ஒமேகா-3 நிறைந்த வால்நட், சியா விதை, ஆளி விதை, மீன் நன்கு எடுத்துக் கொள்கின்றீர்களா?

    * வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

    * 40 வயதிற்குப் பிறகு இருதய பரிசோதனை கூட அவசியப்படலாம்.

    * மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி இவற்றினை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * ஸ்ட்ரெஸ் இருதய பாதிப்பினை கூட்டும்.

    பல்லும்-கண்ணும்

    * தினம் ஒரு முறை பல் துலக்குவதும், ஒரு முறை பிரஸ் செய்வதும் அவசியம்.

    * 6 மாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் செல்வது புத்திசாலித்தனம்.

    * எதனை சாப்பிட்டாலும் குறிப்பாக இனிப்பு சாப்பிட்டால் வாய் கொப்பளித்து விடுங்கள்.

    * மாதம் ஒரு முறை பிரஷ் மாற்றுவது மிக சிறந்தது.

    * கண் பாதுகாப்பிற்காக வெயிலில் கறுப்பு கண்ணாடி அணிவது சிறந்த கண் பாதுகாப்பு.

    * படிக்கும் போதும், எழுதும் போதும், டி.வி. பார்க்கும் போதும் கண்ணை மூடி மூடி திறக்க வேண்டும்.

    * காரட், பால், பழங்கள், வைட்டமின் 'ஏ' சத்து கண் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

    * 40 வயதிற்குப் பிறகு கண் பரிசோதனை தேவையே.

    * கண்களை கைகளால் தாறுமாறாகத் தேய்க்காதீர்கள்.

    * சுத்தமான துவாலைகளை (டவல்) பயன்படுத்துங்கள்.

    மனநிம்மதி

    * 8 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும்.

    * பிராணாயாமம், 10 நிமிடமாவது தியானம் அவசியம்.

    * இயற்கையோடு இருங்கள்.

    * அதிகமாக டி.வி., யூடியூப் பார்க்க வேண்டாம்.

    * சிறிது நேரமாவது வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்.

    * வேலை பளுவில் சற்று நேரம் 'பிரேக்' எடுங்கள்.

    சுகாதாரம்

    * தினமும் இருவேளை நன்கு குளியுங்கள். உடலை நன்கு துடைக்க வேண்டும்.

    * உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி உங்கள் சருமத்திற்கென 'சன்ஸ்கிரீம்' அவசியம்.

    * மிகவும் வறட்சி தரும் சோப்புகள் வேண்டாம்.

    * 'மாய்ச்சரைசர்' உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குளித்ததும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * பருத்தி ஆடையே அணியுங்கள். நகங்களை சீராய் வெட்டி விடுங்கள்.

    * கொசுவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    * உங்கள் தனி உபயோகப் பொருட்களை பிறருடன் பங்கிடக் கூடாது.

    பாதுகாப்பு

    * வீட்டில் அவசியம் ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.

    * அவசர உதவி எண்கள் போனில் இருக்க வேண்டும்.

    * மருந்துகள் பாதுகாப்பாய், குழந்தைகள் கையில் எட்டாதவாறு இருக்க வேண்டும்.

    * குடும்ப மருத்துவர் என்பது நமக்கு தேவையான ஒன்று.

    வீடு

    * காற்றோட்டம் அவசியம். சூரிய வெளிச்சம் வேண்டும்.

    * வீட்டினுள் குப்பை, புகைகள் இருக்கக் கூடாது.

    * அன்றாடம் குப்பைகளை முறையாய் பையில் போட்டு அகற்றுங்கள்.

    * அதிக காரத்தன்மை உடைய சுத்தம் செய்யும் சோப்பு, திரவங்கள் வேண்டாம். அது நுரையீரலை பாதிக்கும்.

    * தண்ணீர் தேங்குதல் கூடாது.

    * உணவுகள் மூடி வைக்கப்பட வேண்டும். பல்லி, கரப்பான் போன்றவை இருக்கக் கூடாது.

    * பிளாஸ்டிக் உபயோகத்தினை முடிந்த வரை நீக்கி விடுங்கள். இவையெல்லாம் முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்.

    * புற்றுநோய் சோதனைகள்: மார்பகம், கருப்பப்பைகள், பிராஸ்ேடட், குடல் பரிசோதனைகள் அவசியம் செய்யுங்கள்.

    உயர் சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு அவசியம்.

    * கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.

    * ப்ளூ, டெட்டனஸ், ஹெப்படைடிஸ்-3 வாக்சின்கள் அவசியம் எடுக்கவும்.

    * மாஸ்க் அணிவது எப்பொழுதுமே நல்லது.

    இவை அனைத்தும் சரியாக செய்தாலே வாழ்க்கை முறையாய் இருக்கும். எந்த ஒரு விழாவிலும் அதிக உணவு உண்பது என கொண்டாடினால் வாழ்க்கை நம்மை நோயாளி ஆக்கிவிடும்.

    ஆகவே இவைகளை செய்கின்றீர்களா? என்பதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

    மேலும்

    * நடைபயிற்சி செல்லும் போது கையில் போன் இல்லாது செல்லலாமே.

    * போனை அடுத்த அறையில் வைத்து விட்டு தூங்க செல்கின்றீர்களா? குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்யலாமே.

    * ½ நிமிடமாவது சூடு இல்லாத நீரில் ஷவர் முறை குளியல் தலை முதல் கால் வரை எடுக்கின்றீர்களா? இதனை வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் முன் செய்யலாம்.

    * கார் சாவி, வீட்டு சாவி, ஸ்கூட்டர் சாவி இவற்றினை தினமும் முறையாக ஒரே இடத்தில் வைக்கின்றீர்களா?

    * பிறருடைய நேரத்திற்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா?

    * ஒரு நல்ல தரமான 'ஜோக்' தெரியுமா?

    * அனைவரிடமும் ஒன்றினை கற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் இப்படி இருக்கக் கூடாது என்பதனையாவது கற்றுக் கொள்ளலாம்.

    * அக்கம் பக்கம் உள்ளவர்களை நட்பாக அறிந்து வைத்திருங்கள்.

    * இயற்கை பேசுவதை காது கொடுத்து கேட்டிருக்கின்றீர்களா?

    * புன்னகை, சிரிப்பு இவை உங்களிடம் உள்ளதா?

    * அப்பா, அம்மாவோடு சிறிது நேரம் செலவழித்து மனம் விட்டு பேசுகின்றீர்களா?

    * புதிர், குறுக்கெழுத்து போட்டி இதில் பழக்கம் இருக்கிறதா?

    * நிலவையும், நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் முடிந்த பொழுது பார்க்கின்றீர்களா?

    இவையெல்லாம் நம் அன்றாட பழக்கத்தில் இயற்கையாக வர வேண்டியவை ஆகும். இப்படி எதுவும் இல்லாமல் மனநோய், உடல்நோயுடன் வாழ்கின்றோம். இன்றே மாறுவோம்.

    • ரெஜினா தொடர்ந்து வழங்கிய அறிவுரைகள் காரணமாக படப்பிடிப்பு நேரங்களில் ரஜினி மது பாட்டில்களை தொடுவதே இல்லை
    • ரஜினிக்கு என்ன நடந்தது என்பது மற்றவர்கள் மூலம் ரெஜினாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது.

    ராகவேந்திர சுவாமிகள்தான் உங்கள் வீட்டுக்கு என்னை வரச் சொன்னார் என்று ரஜினி சொன்னதை கேட்டதும் ரெஜினா வின்சென்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் மதுபோதையில் மிதக்கும் ரஜினிக்குள் இப்படி ஒரு ஆழமான ஆன்மீகம் புதைந்து கிடக்கிறதா? என்று நினைத்து அவர் பிரமித்தார். ரஜினி மீது இதுவரை இருந்த பாசம் மரியாதையாக மாறியது.

    ரெஜினா வின்சென்ட் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மற்ற மதங்களிலும் நிறைய நண்பர்கள் இருந்தனர். மற்ற மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்டு மதிப்புக் கொடுப்பவர். அதனால்தான் ரஜினி ராகவேந்திரரை பற்றிச் சொன்னதும் அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    ரஜினி சொன்ன பதிலை அவர் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டார். 'சரி... இனி நீ இந்த வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்' என்றார். இதைக் கேட்டதும் ரஜினி மிகவும் உருகிப்போனார். ரெஜினா காலில் விழுந்து ஆசிபெற்று நன்றி கூறினார்.

    அதன் பிறகு ரஜினி ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெஜினா வீட்டுக்கு நினைத்த போதெல்லாம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தினார். சில சமயங்களில் அவர் அந்த பங்களாவுக்குள் செல்வதுகூட மாடியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரியாது. பங்களா பின் புறம் உள்ள புல்வெளித் தோட்டத்தில் ரஜினி தன்னந்தனியாக சுற்றும் போதுதான் அவர் அங்கு வந்து இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்வார்கள். அந்தளவுக்கு ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு செல்வதை ரஜினி சர்வசாதாரணமாக பழக்கத்தில் வைத்து இருந்தார்.

    ரெஜினா வீட்டுக்கு செல்லும் போது ஒரு தாயை பார்த்த உணர்வு தனக்கு ஏற்படுவதாகவும் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லுவது உண்டு. ரெஜினா தொடர்ந்து வழங்கிய அறிவுரைகள் காரணமாக படப்பிடிப்பு நேரங்களில் ரஜினி மது பாட்டில்களை தொடுவதே இல்லை என்ற நிலை உருவானது. இதை அறிந்து ரெஜினா வின்சென்ட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு சில நண்பர்களின் கெட்ட சகவாசத்தால் ரஜினி மதுகுடிப்பது மாறவில்லை. மாறாக சில நாட்களில் அவர் மது குடிப்பது அளவுக்கு மீறியதாக சென்றது. அவரது நண்பர்களில் சிலர், அதாவது திரைத்துறையில் உள்ள சிலர் தங்களது சுய நலத்துக்காக ரஜினியை அப்படி மது பழக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

    1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் ரஜினி அதிக அளவில் மது குடிக்க ஆரம்பித்து இருந்தார். அதோடு மற்ற போதை பொருட்களையும் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி இருந்தார். இதனால் ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு அவர் செல்வதும் சற்று குறைந்து போனது. பிப்ரவரி மாதம் கடைசி வாரம் அவர் ரெஜினா வின்சென்ட் வீட்டு பக்கமே செல்லவில்லை.

    இந்தநிலையில்தான் ரஜினி படப்பிடிப்பு இடங்களிலும் மற்ற நேரங்களிலும் தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ரஜினி மனநிலையில் மாற்றம் ஏற்பட்ட தகவல் ரெஜினா வின்சென்ட்டுக்கும் சிலர் மூலம் தெரிய வந்தது. அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

    இந்த நிலையில் ஒரு நாள் ரஜினி 4 நாட்களுக்கு பிறகு ரெஜினா வின்சென்ட் வீட்டிற்கு வந்திருந்தார். அவரிடம் ரெஜினா, '4 நாட்களாக இந்த பக்கமே வரவில்லையே? எங்கே போய் இருந்தாய்?' என்று கேட்டார். அதற்கு ரஜினி, 'எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. எனவே ஆஸ்பத்திரிக்கு போய் இருந்தேன்' என்றார்.

    ஆனால் ரஜினிக்கு என்ன நடந்தது என்பது மற்றவர்கள் மூலம் ரெஜினாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. அன்று இரவு ரஜினியை வீட்டுக்குள் வந்து சாப்பிடுமாறு ரெஜினா அழைத்தார். அப்போது வீட்டுக்குள் ரெஜினாவின் நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் அமர்ந்து இருந்தனர். ரஜினியை கண்டதும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வெளிநாட்டில் இருந்து வந்து இருந்த ஒரு விருந்தினர் ரஜினியை சுட்டிக் காட்டி, 'இவர் யார்?' என்று கேட்டார். அதற்கு ரெஜினா வின்சென்ட், 'இவரும் என்னுடைய ஒரு மகன் மாதிரிதான்' என்று அறிமுகம் செய்தார். இதைக் கேட்டதும் ரஜினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.

    விருந்து முடிந்து அனைவரும் புறப்பட்டு சென்றதும், ரஜினி கண்ணீர் மல்க ரெஜினா வின்சென்ட் கால்களில் விழுந்தார். கதறி கதறி அழுதார். அவரை ரெஜினா வின்சென்ட் ஆசு வாசப்படுத்தி, 'எதற்காக அழுகிறாய்?' என்று கேட்டார். அதற்கு ரஜினி, 'என்னையும் ஒரு மகனாக ஏற்றுக் கொண்டு அனைவரிடமும் சொன்னீர்களே? எனக்கு அது போதும்' என்று கண்ணீர் விட்டார். ரெஜினா வின்சென்ட்டும் கண்கள் கலங்க நின்றார்.

    இப்படி ரஜினிக்கும், ரெஜினா வின்சென்ட்டுக்கும் இடையே அந்த குறுகிய காலத்திற்குள் எத்தனையோ தடவை ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையே நிலவும் பாசப் போராட்டம் போல பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் ரெஜினா வின்சென்ட் தவறாமல் ரஜினிக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டே இருப்பார்.

    அவ்வளவு அறிவுரைகள் சொன்ன நிலையிலும் ரஜினி மார்ச் மாதம் தொடக்கத்தில் மிகவும் தறிக்கெட்டு போய் விட்டார். கடுமையான நரம்புதளர்ச்சி காரணமாக அவரை பாதித்த மனநலம் உச்சக் கட்டத்தை தொட்டு இருந்தது. யாராலும் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

    இதன் எதிரொலியாகத்தான் மதுரையில் நடந்த சிவாஜிகணேசன் பாராட்டு விழாவின் போது ரஜினி அவரையும் அறியாமல் அத்துமீறி நடந்துக் கொண்டார். வடபழனி விஜயா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் ரஜினி அடிக்கடி 'ரெஜினா அம்மாவை கூப்பிடுங்கள். ரெஜினா அம்மாவை கூப்பிடுங்கள்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    இதன் காரணமாகத்தான் விஜயா நர்சிங் ஹோமில் இருந்து டாக்டர்கள் போனில் ரெஜினா வின்சென்ட்டை தொடர்பு கொண்டனர். அவரிடம் டாக்டர் செரியன் போனில் பேசினார். 'அம்மா.... இங்கு எங்கள் மருத்துவ மனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மிகக் கடுமையான நரம்பு தளர்ச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நோய் அதிகமாகும் பட்சத்தில் மனநலம் கடுமையாக பாதிக்கப்படும். அந்த நோயின் தொடக்க நிலையில் அவர் இருக்கிறார்.

    அவரை 3 நாட்கள் நன்றாக தூங்கும்படி நாங்கள் சொல்லி இருந்தோம். ஆனால் அவர் தூங்க மறுத்து ரகளை செய்து கொண்டே இருக்கிறார். அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று காலை முதல் அவர் உங்கள் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவர் அமைதியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வர முடியுமா?' என்று கேட்டார்.

    இதைக் கேட்டதும் ரெஜினா வின்சென்ட்டுக்கு கடுமையான அதிர்ச்சியாகி விட்டது. இது பற்றி அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவரது அனுமதியை பெற்றுக் கொண்டு உடனே வடபழனி விஜயா நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ரஜினியை பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.

    கூண்டுக்குள் அடைப்பட்ட சிறுத்தை போல ரஜினி ஆவேசமாக இருந்தார். அவரிடம் ஒருவித கொந்தளிப்பும் இருந்தது. அந்த கொந்தளிப்பு காரணமாக அவர் அருகில் செல்லவே ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரும் பயந்தனர்.

    அப்போது ரஜினி முன்பு சென்று ரெஜினா வின்சென்ட் நின்றார். அவரை பார்த்ததும், 'அம்மா....' என்று ரஜினி வாயில் இருந்து பாசத்தோடு வார்த்தைகள் வெளியில் வந்தன. கதறி கதறி அழுதார். "எனக்கு என்னவோ ஆகி விட்டது. என்னை இங்க இருந்து கூட்டிச் சென்று விடுங்கள்" என்று அழுதார்.

    அவரை பார்க்கவே ரெஜினா வின்சென்ட்டுக்கு பரிதாபமாக இருந்தது. அவரது கண்களும் கலங்கின. ரெஜினா வின்சென்ட் பேசத் தொடங்கிய பிறகு, ரஜினியிடம் அதிரடியாக மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதுவரை புயல் போல கொந்தளித்துக் கொண்டு இருந்த அவர் சாந்தமாக மாறி இருந்தார். அவரிடம் இருந்த ஆவேசமும், ஆர்ப்பாட்டமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. இது ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

    புலி போல உறுமிக் கொண்டு இருந்த ஒருவர், பூனைக்குட்டி போல மாறி விட்டதை பார்த்தனர். அதற்கு காரணம் ரெஜினா அம்மாவின் தாய் பாசம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டாக்டர் செரியனுக்கும் இது வித்தியாசமாக தெரிந்தது. அவரிடம் ரெஜினா வின்சென்ட் ஒரு கோரிக்கை வைத்தார். "ரஜினியை நான் பார்த்துக் கொள்கிறேன். விட்டுவிடுங்கள்" என்றார். இது டாக்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அளவு மீறாமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கசந்தாலும் பாகற்காய் உடம்பிற்கு மருந்தாகப் பயன்படக் கூடியது.

    வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் ஆர்வமாய் இருக்கும் அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    நிதானம் என்பது, எதையும் கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்வது; தேவையான அளவை எப்போதும் சரியான முறையில் கையாள்வதும் ஆகும். மனிதன் பல்வேறு உணர்வுகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறான்; அவனுக்கு படக்கென்று கோபம் பொத்துக்கொண்டு வந்து விடும்; கோபம் மட்டுமா? அழுகையும்கூட சில வேளைகளில் கண்ணீரை ஆறாய்ப் பெருக்கி அவனைச் சோகத்தில் தத்தளிக்க வைத்துவிடும். சிரிப்பு, கருணை, இளக்காரம், அச்சம், பெருமைப் பீத்தல், சந்தோஷம் என்று எல்லாவகையான உணர்வுகளும் அவ்வவற்றின் கட்டுக்குள் அடங்காமல், நிதானம் மீறி, எல்லை தாண்டும்போது அவனை மனிதநிலை தாண்டிய தள்ளாட்டத்திற்குள் தள்ளிவிடும். போதைப் பழக்கத்தில் ஈடுபடும்போது அதற்குள்ளும் ஒரு நிதானம் தேவை என்று எல்லாரும் வலியுறுத்துவது உண்டு. ஏனென்றால் நிதானம் தவறிய போதை மனிதனை, இழிமனிதனாக ஆக்கிவிடும்; அவன் செய்வது இன்னதென்று அவனே அறியமுடியாத போது, அவனது போதையே நஞ்சாக மாறி அவனைப் பிணநிலைக்கு மாற்றிவிடும்.

    "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

    எஞ்ஞான்றும்

    நஞ்சுண்பார் கள்ளுண்பவர்"

    மதுவுண்பவர் நஞ்சுண்பவர் ஆவர் என்று வள்ளுவர் குறிப்பிடுவதை ஒப்பிட்டுப் பார்த்தால், நிதானம் மீறுதல் என்பதே செத்துப் போவதற்குச் சமமானது ஆகும். 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' எனும் வள்ளுவ வாக்கியமும் கூட அளவுக்கு மீறிய கோபம், கொண்டவனையும் அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்கிறது.

    வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அளவு மீறாமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பது உடல்நிலை சார்ந்த பராமரிப்புக்கு மட்டுமல்ல; வாழ்நிலை சார்ந்த எல்லாவற்றிற்கும் பொருந்தி வருவது ஆகும். அருந்துபவர்க்குச் சாவா மூவா நிலையை அளிக்கக் கூடியது அமுதம் ஆகும்; ஆனால் அந்த அமிர்தத்தையும் கூட நிதானமின்றி அருந்தக்கூடாது என்பதை, 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்னும் பழமொழி எடுத்துக் கூறுகிறது. 'இனிப்பாக இருக்கிறது' என்பதற்காக லட்டுப் பலகாரத்தை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதும், கசப்பாக இருக்கிறது என்பதற்காகப் பாகற்காயை அளவைக் குறைத்து உணவில் எடுத்துக்கொள்வதும் கூடாது. கசந்தாலும் பாகற்காய் உடம்பிற்கு மருந்தாகப் பயன்படக் கூடியது.

    நிதானமான சூட்டில் அதிகாலைக் குளியலில் தொடங்குகிற அன்றாட வாழ்க்கை, நிதானமான காற்றோட்டத்தில் காற்றாடி சுழல உறங்கப் போவது வரை நிதானமாக இயங்கினால், வாழ்க்கை நிதானமான இன்பத்தோடு நிலைத்து நீடிக்கும். நிதானமாகப் பேசுவது, நிதானமாக உண்பது, நிதானமாகப் பணிகள் மேற்கொள்வது, நிதானமாக உறக்கம் கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்தால், எதிர்பார்ப்பிலும் எல்லைமீறாது! ஏமாற்றமும் விரக்தியும் இல்லவே இல்லாமல் போய்விடும்.

    ஒரு சாம்பார் வைக்கப்படுகிறது என்றால், அதில் சேர்க்கப்படுகிற பருப்பு, மிளகாய், புளி, மல்லி, வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என்று எல்லாச் சேர்மானங்களிலும் ஒரு நிதானம் இருந்தால் அதில் இயல்பான சுவை இருக்கும். நிறைவாகத் தாளித்து இறக்குவதற்குப் பயன்படுத்துகின்ற எண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றிலும்கூட சரியான அளவைநிலை இருந்தால் சாம்பாரின் மணமும் சுவையும் தூக்கலோ தூக்கல்தான். நிதானம் என்பது நிறுத்தல், முகத்தல், நீட்டல் அளவைகளால் மட்டும் வருவது அல்ல; கண் அளக்காததைக் கை அளப்பதில்லை; கருவிகளும் அளப்பதில்லை. கண்ணும் மனமும் அனுபவத்தால் அளந்து அளந்து 'போதும்' என்கிற நிதானத்திற்குள் கொண்டு வருவதே சரியான அளவை ஆகும்.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    சமையலுக்குச் சாம்பார் வைப்பது போன்றதுதான் சமுதாய வாழ்க்கையில் ஒரு குடும்பதை அமைத்து வழிநடத்துவதும். கணவன் மனைவி குழந்தைகள், மூத்தோர் என அனைத்துச் சேர்மானங்களும் நிதானமான உணர்வுச் சேர்க்கைகளோடு ஒருங்கிணைந்து, கருத்து மேடுபள்ளங்களை விட்டுக் கொடுத்தல் வழியாகச் சமப்படுத்தி, விருப்பங்களையும் ஆசைகளையும் நிதானப்படுத்தி வாழ்ந்தால் அதுவே ஆனந்தக் குடும்பம்.

    "அளவறிந்து வாளாதான் வாழ்க்கை

    உளபோல

    இல்லாகித் தோன்றாக் கெடும்"

    எனும் வள்ளுவர் வாசகமும் வருவாய்க்கேற்ப வாழ்க்கையைச் சிறுகக் கட்டிப் பெருக வாழ்! என்பதை வலியுறுத்துகிறது. இதில் வரும் 'அளவு' என்கிற சொல்லின் சரியான பொருள், வருகிற வருவாயின் அளவிற்கேற்ப மாறுபடும். எப்படியாயினும், அளவிற் சுருங்கி விடாமலும், அளவிற் பெருகிவிடாமலும், நிதான அளவில் செயல்படுவதே அளவான செயல்பாடு ஆகும். மயில்தோகை மென்மையானதுதான் என்றாலும் அதற்கும் ஓர் எடை இருக்கிறது; ஏற்றுகிற வண்டி ஐந்து டன் எடைமட்டுமே சுமக்கும் வலிமைமிக்கது என்றால், ஏற்றப்படுவது மென்மையான மயில்தோகைதானே என்று எடைக்குமீறிய சுமையை ஏற்றினால் நிச்சயம் வண்டியின் அச்சு முறிந்துபோகும்தானே?. இதைத்தான் வள்ளுவப் பேராசான்,

    "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

    சால மிகுத்துப் பெயின்"

    எனும் குறளில் எடுத்து விளக்குகிறார். பணியிடங்களில், குடும்பப் பொறுப்புகளில், திறமைக்கு மீறிய, தகுதிக்கு மீறிய பணிச் சுமைகளில் அகப்பட்டுக்கொண்டு சிலர் அல்லாடும் நிலையை இக்குறளோடும் பொறுத்திப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நிதானம் அறிந்து ஏற்றுக்கொள்வதும் விலகிக் கொள்வதும் முக்கியமானது ஆகும்.

    நிருவாகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமக்குக் கீழுள்ள பணியாளர்களிடம் பணியைப் பகிர்ந்து தருவதைக் காட்டிலும், நிரந்து தருவதில் அக்கறை காட்ட வேண்டும். சிலர் ஆர்வத்தோடும் நேர்த்தியோடும் விரைவோடும் தட்டாமலும் பணிகளைச் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களிடமே அதிகப் பணிகளை வழங்கி, அவர்கள்மீது பணிச் சுமைகளை ஏற்றி வைக்கக் கூடாது; வண்டி அச்சு முறிந்துபோக நேரிடும். பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போதும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். 'காரியம் முக்கியமா? வீரியம் முக்கியமா?' என்று கேட்டால் காரியம்தான் நமக்கு முக்கியம். எனவே, அவ்வாறு சண்டித்தனம் புரிபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்போது, 'கடிதோச்சி மெல்ல எறிக!' எனும் புதுமையான உத்தி ஒன்றை நமக்குக் கற்றுத் தருகிறார் திருவள்ளுவர். 'குறிவைப்பதிலும் எறியும் விசை அசைவிலும் விரைவு காட்டுங்கள்! தண்டனை மெலிதானதாகவே இருக்கட்டும்!' என்கிறார். 'அடிக்க ஓங்குவது பலமாக விரைவாக இருக்கட்டும்!; அடி மெதுவாக மட்டுமே விழட்டும்!'.

    சிலர் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார்கள்; எல்லாவற்றையும் நிதானமின்றி அவசரகதியிலேயே செய்து முடிப்பார்கள். எந்தச் செயலிலும் முழுமையும் திருப்தியும் அடையவே மாட்டார்கள். நிதானம் நமது தாவித் திரியும் ஆசைகளுக்குக் கடிவாளம் போடுகிறது; எல்லாச் செயல்களிலும் ஒரு நேர்த்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது; நிதானமும் மன அமைதியும் கூடிவிட்டால் எல்லையற்ற அமைதி எப்போதும் நம்முடையதாகவே இருக்கும்.

    புத்தரிடம் ஒருவன் புதிதாகச் சீடனாகச் சேர்ந்தான்; அவன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சேர்ந்ததிலிருந்து எப்போதும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருந்தான்; யார் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை. எதைச் செய்தாலும் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்; மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று கூறினான். 'எடுத்தேன்! விடுத்தேன்!' என்பதைப்போல எல்லாச் செயல்களும் அவனுக்கு உடனுக்குடன் நடைபெற்றாக வேண்டும்.

    இந்தப் பணக்காரச் சீடனின் பரபரப்பு நடவடிக்கைகளைச் சிலநாள்கள் தொடந்து கவனித்த புத்தர் ஒருநாள் அவனது அறைக்குள் திடீரென நுழைந்தார். அவரது வருகைக்கு மகிழ்ந்த சீடன் அவரை வரவேற்றான். சீடனின் அறைக்குள் புத்தம்புதிய வீணை ஒன்று இருந்தது. "ஆகா! புத்தம்புதிய வீணையா? எனக்கு வீணை வாசிக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது!. வாசிக்கட்டுமா?" என்று சீடனிடம் கேட்டார் புத்தர். "தங்களின் திருக்கரம் படுவதற்கு இந்த வீணை என்ன புண்ணியம் செய்ததோ?; தாராளமாக வாசியுங்கள் குருவே! " என்றான் சீடன்.

    புத்தர் வீணையை எடுத்து, வாசிப்பதற்காக நரம்புகளை முறுக்கேற்றத் தொடங்கினார். முறுக்கேற்றத் தொடங்கியவர், தொடர்ந்து நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டே போனார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சீடன், " இவ்வாறு தொடர்ந்து முறுக்கேற்றிக் கொண்டே சென்றால், நரம்புகள் முறுக்கேறி, முறுக்கேறி அறுந்துபோக நேரிடும்; பிறகு வீணை வாசிக்கவே முடியாது!" என்றான். உடனே புத்தர், முறுக்கேற்றிய நரம்புகளைத் தளர்த்தும் வேலையில் ஈடுபட்டார். இப்போது நரம்புகள் தளர்ந்து தளர்ந்து தொய்ந்து தொங்கிப் போக ஆரம்பித்தன. இப்போதும் சீடன் புத்தரைப் பார்த்துக் கூறினான்," குருவே! நரம்புகளை அதிகமாகத் தளர்த்தினாலும் அதனை வாசிக்க முடியாது; நீங்கள் இப்போது மிகவும் தளர்த்தி விட்டீர்கள்!".

    இப்போது புத்தர், சீடனைப் பார்த்துக் கூறினார், " மிகச் சரியாகக் கூறினாய்!. அளவுக்கு அதிகமாக நரம்புகள் முறுக்கேற்றப்பட்டாலும் வீணையை வாசிக்க முடியாது; அளவுக்கு அதிகமாக நரம்புகள் தளர்ந்து போனாலும் வாசிக்கமுடியாது. ஒரு நிதானமான அளவில் நரம்புகளின் முறுக்கு இருந்தால் மட்டுமே வாசிக்க முடியும். வாழ்வில் நமது செயல்களும் அப்படித்தான்; அதிகக் கூடுதலான பரபரப்புகளோடும் எதிர்பார்ப்புகளோடும் செயலில் ஈடுபடக்கூடாது; முறிந்து போகும். அதே போல எந்தவிதமான ஈடுபாடும் ஆர்வமும் இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட்டால் அது சோம்பலில் கருகி அழிந்து போகும். எல்லாவற்றிலும் நிதானம் தேவை!" என்றார் புத்தர்.

    விரைவான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; நம்மைவிட விரைவாக நாம் கண்டுபிடித்த இயந்திரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கணக்குப்போட்டு நமக்கு முன்பாக நமக்குச் சொல்லிவிடுகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதம் கண்டுபிடித்த மனிதகுலச் சவாலாக இப்போது பேருருவம் எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் 60 கிலோமீட்டர் வேகம் அதிவேகம் என்று இருந்தது, இப்போது 120 கிலோமீட்டர் வேகம் நல்வேகம் எனப் போக்குவரத்து வேகமெடுத்திருக்கிறது. போர்களும் போர்க்கருவிகளும் அறிவின் கொடைகளாய், அறிவியலின் படைகளாய் ஒருபக்கம் அணிவகுத்து அமைதிகலைத்து நிற்கின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் கேள்விக்குறிகளே பதில்கள் என்றால் எதிர்காலம் என்னாவது?.

    இந்தச் சூழ்நிலையில், சிந்தனையில் நிதானம், செயலில் நிதானம், நிதானத்திலும் காலப் போக்கிற்கேற்ற நிதானம் கடைப்பிடித்தால் நிலைத்த அமைதியும் ஆனந்தமும் நமதே!

    தொடர்புக்கு 9443190098

    • பெருமாள் வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும்.
    • துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும் என்ற ஐதீகம் உருவானது.

    புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளில் இருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நவம்பர் 2-ந் தேதி அன்று வருகிறது.

    அதாவது ஐப்பசி மாதம் வரும் தேவ உத்தாணி ஏகாதசி நாளில், விஷ்ணு பகவான் நான்கு மாத யோக தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து மீண்டும் காக்கும் தொழிலைத் தொடங்குகிறார். அடுத்த நாள், துவாதசி திதியில், துளசி விவாகம் நடைபெறுகிறது.

    பஞ்சாங்கத்தின்படி, துவாதசி திதி நவம்பர் 2, அன்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நவம்பர் 3, அன்று அதிகாலை 1.43 மணிக்கு முடிவடையும்.

    இவ்வாறு திருக்கல்யாணம் செய்து வைக்கும் பொழுது, திருமணத்தில் பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுத்தப் பலன்களை கொடுக்கும். இதனால் திருமண தடைகள் நீங்கி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகும். இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

    இந்த திருமணத்தை அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் பஞ்சாங்கப்படி காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை துளசி திருமணத்தை நடத்தலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

    முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

     

    வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமோ இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நெய்வேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை, பேரிச் சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி 5 பெரிய நெல்லிக் காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்தில் இருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

    பெருமாள் வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும். மலர்கள் அணிவிக்காவிட்டாலும் 2 துளசி இலைகளை மகாவிஷ்ணுவிற்கு படைத்து வழிபட்டாலே அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். துளசி இலைகளை பறிப்பதற்கும் கூட பல கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் நிறைந்த துளசியை வருடத்திற்கு ஒரு முறையாவது பூஜை செய்து வழிபட வேண்டும்.

    "ஓம் துளசியை வித்மஹி; விஷ்ணு பரியை தீமஹி; தன்னோ விருந்தா ப்ரசோதயாத்" என்ற துளசி மந்திரத்தை தினமும் உச்சரித்து, தண்ணீர் ஊற்றி வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டால் சகல விதமான துன்பங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    செடிகளில் துளசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்படுவது ஏன்? என பலரும் நினைக்கலாம். இதற்கு இந்து புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அசுர அரசனின் மகளான விருந்தா, தீவிர விஷ்ணு பக்தை. இவள் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து தோன்றிய ஜலந்தரை மணந்தாள். பக்தியில் சிறந்தவளும், தீவிர பதிவிரதையுமான விருந்தாவை மணம் முடித்ததால் ஜலந்தர் மிகவும் பலம் மிகுந்தவனாக மாறினான். இதனால் அவனின் சக்தி பல மடங்காக அதிகரித்து சிவபெருமானால் கூட வெல்ல முடியாதவன் ஆனான்.

    இதன் காரணமாக தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆசை ஜலந்தருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் விருந்தா தனது பக்தை என்பதால், அவளது கணவரை அழிப்பதா என குழப்பத்தில் ஆழ்ந்தார் மகா விஷ்ணு.

    இதனால் சிவனுக்கும், ஜலந்தருக்கும் போர் நடைபெற்ற சமயத்தில் ஜலந்தரின் உருவத்தில் துளசியை காண சென்றார் மகா விஷ்ணு. வந்திருப்பது தனது கணவன் என நினைத்து அவருடன் அமர்ந்து, பூஜை செய்தாள் விருந்தா. பிறகு தனது கணவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தனது கணவரின் உருவில் வந்த மகாவிஷ்ணுவின் காலை தொட்டு வணங்கினாள்.

    அப்போது வந்திருப்பது தனது கணவன் இல்லை என தெரிந்து கொண்டாள். தனது கடவுளே தன்னை ஏமாற்றி விட்டதால் வேதனையடைந்த விருந்தா, மகா விஷ்ணுவை கல்லாக மாற சாபம் அளித்தாள். இதனால் மகா விஷ்ணு சாளகிராம கல்லாக மாறினார். அதே சமயம், விருந்தாவின் தூய்மை தன்மை குறைந்ததால் ஜலந்தரின் பலம் குறைந்தது. போரில் அவனை வென்றார் சிவபெருமான்.

    தனது தூய்மை தன்மை குறைந்ததால் உயிரை விட துணிந்தாள் விருந்தா, அந்த சமயத்தில் விருந்தா இனி துளசி என அழைக்கப்படுவாள் என வரமளித்தார் மகா விஷ்ணு. துளசி இல்லாமல் மகா விஷ்ணுவிற்கு செய்யும் பூஜைகள் முழுமை பெறாது. துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும் என்ற ஐதீகம் உருவானது.

    துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும். இளம் வயதினர் துளசி பூஜை செய்தால் தங்களின் மனத்திற்கு பிடித்தது போல் விரைவில் திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணை அமைவார்கள். திருமண தடை, திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்பவர்கள் நாளை துளசி மாதாவிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    திருமணமாகாத ஆண்கள் துளசி செடிக்கு பூஜைகள் செய்து, வஸ்திரம் படைத்து, துளசி செடியை 7 முறை வலம் வந்து வணங்க வேண்டும். திருமணமாகாத பெண்கள், மனத்திற்கு பிடித்த கணவர் அமைய வேண்டும் என விரும்பும் பெண்கள் வீட்டில் துளசி கல்யாணம் நடத்தி, துளசி மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.

    துளசி முன் விழுந்து வணங்கி, பூக்கள் படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்ளலாம்.

    • ரெஜினா வின்சென்ட் பேச... பேச... ரஜினி அப்படியே தலைகுனிந்தார்.
    • ரஜினி கொஞ்சம் கூட சலனம் ஆகவில்லை.

    ரெஜினா வின்சென்ட் பதறிப் போனார். மிகப்பெரிய நடிகர் தனது காலில் விழுந்ததைக் கண்டதும் அவருக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

    "என்னப்பா... இது?" என்றார். அவரிடம் ரஜினி, "அம்மா என்னை ஆசீர்வதியுங்கள்" என்றார். ரெஜினா வின்சென்ட்டுக்கு மிகவும் நெகிழ்ச்சியாகி விட்டது. வாழ்நாளில் யாரும் இப்படி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றது இல்லை என்பதால் ரஜினியை கருணையோடு பார்த்து ஆசி வழங்கி எழுந்திருக்கும்படி சொன்னார்.

    ரஜினி எழுந்ததும் அவரிடம், "உனக்கு என்ன ஆச்சு.... என்ன வேண்டும்?" என்று கேட்டார். அவரை ரஜினி கண்ணீர் மல்க பார்த்தார். அவருக்கு தனது தாயார் ஜிஜிபாயின் நினைவு வந்தது.

    சிறு வயதிலேயே தாயை இழந்த ரஜினிக்கு முழுமையான தாய் பாசம் கிடைக்காமலேயே போய் விட்டது. தாய் மடியில் தூங்கினாலும் அவர் காட்டிய அன்பை உணரும் வயது வந்த போது தாயார் உயிருடன் இல்லை.

    அவரது தந்தை ரனோஜி ராவ் உடம்பு முழுக்க பாசத்தைக் கொண்டவர். ரஜினி மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால் அவர் அதையும் மீறி ரஜினியிடம் கடுமையான கட்டுப்பாடுகள் காட்டியது தான் அதிகம். தாய் பாசம் கிடைக்காமல் போனதாலேயே ரஜினி சிறு வயதில் இருந்தே பிடிவாதமும், மற்றவர்களை கைநீட்டி அடிக்கும் குணத்துடனும் வளர்ந்து இருந்தார். குறிப்பாக 9 வயதுக்குப் பிறகு முரடனாகவே மாறி இருந்தார்.

    அம்மா என்ற பாசத்தை அறியாத அவருக்கு ரெஜினா வின்சென்ட்டை பார்த்ததும் தனது தாயார் போன்ற நினைவு அவருக்குள் வந்து விட்டது. தனது அம்மா போலவே ரெஜினா வின்சென்ட்டை நினைத்து உருகினார். அதனால்தான் "என்ன வேண்டும்?" என்று ரெஜினா வின்சென்ட் கேட்டதும் கண்ணீர் மல்க ரஜினி நின்றார்.

    அவர், "அம்மா... எனக்கு நீங்கள் நிறைய அறிவுரை சொல்ல வேண்டும் என்று அன்றைக்கு சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்" என்றார். அதற்கு ரெஜினா வின்சென்ட், "என்னிடம் நீ ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாய் அல்லவா? முதலில் அதை சொல். பிறகு நான் அறிவுரை சொல்கிறேன்" என்றார்.

    அதை ரஜினி ஏற்கவில்லை. "இல்லை அம்மா முதலில் நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு என் விருப்பத்தை நான் சொல்கிறேன்" என்றார். இதை கேட்டதும் ரெஜினா வின்சென்ட் பேசத் தொடங்கினார்...

    "உன்னை பார்த்தால் எனக்கு அளவு கடந்த பாசம் வருகிறது. நீ வளர்ந்து வரும் நடிகர். இந்த நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் நீ எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறாய்?

    அடிக்கடி இடைவிடாமல் சிகரெட் புகைக்கிறாய்? அது மட்டுமல்ல நீ தொடர்ந்து இரவும்-பகலும் மது குடிப்பதாகவும் நான் அறிந்தேன். மது குடிப்பது நீ சின்ன வயதில் இருந்து பழகிவிட்ட ஒரு பழக்கமாக இருக்கலாம். அதை என்னால் தடுக்க முடியாது.

    ஆனால் ஒரு தொழில் என்று வந்து விட்டால் அதில் முழுமையான நேர்த்தியும் ஈடுபாடும் இருக்க வேண்டும். அன்று 3-வது நாள் படப்பிடிப்புக்கு நீ மது குடித்து வந்ததால் எந்த வேலையும் நடக்கவில்லை. உன்னால் அன்று எத்தனை தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்று உனக்குத் தெரியுமா?

    வேலை நேரத்தில் குடிப்பதால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய் என்றுதான் அர்த்தம். உனது எதிர்கால வாழ்க்கைக்கு இது நல்லது அல்ல. படப்பிடிப்பு நாட்களில் மது குடிப்பதை தவிர்ப்பது நல்லது" என்றார்.

    ரெஜினா வின்சென்ட் பேச... பேச... ரஜினி அப்படியே தலைகுனிந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை... தாரையாக ஓடியது. கையை முன்பக்கம் கட்டிக் கொண்டு ஒரு மாணவனைப் போல பவ்யமாக நின்றுக் கொண்டிருந்தார். ரஜினி நடிக்க வந்து இந்த 4 ஆண்டுகளில் யார் முன்பும் அவர் இப்படி தலைகுனிந்து கைக்கட்டி நின்றது இல்லை.

    அவரை சகஜநிலைக்கு கொண்டு வந்த ரெஜினா வின்சென்ட் அன்போடு, "உன் எதிர்கால நல்லதுக்குத்தான் சொல்கிறேன்" என்றார். இதை கேட்டதும் ரஜினி, "அம்மா.... இனி நான் படப்பிடிப்பு நேரத்தில் குடிக்க மாட்டேன். இதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், "இதுவரை என் மது பழக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் சொன்னப் பிறகு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறேன் என்பது தெரிகிறது. எத்தனையோ பேர் மது அருந்தாதீர்கள் என்று எனக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் யார் பேச்சையும் நான் கேட்டதே கிடையாது.

    இன்னும் சொல்லப்போனால் எனக்கு அறிவுரை சொல்பவர்களை நான் கண்டு கொண்டதும் இல்லை. அலட்சியமாக கடந்து சென்று விடுவேன். ஆனால் இன்று நீங்கள் என் தாய் இடத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. வேலை நேரத்தில் மது குடிக்கக் கூடாது என்ற உறுதி என் மனதில் வந்து இருக்கிறது" என்றார்.

    அவரது பேச்சைக் கேட்ட ரெஜினா வின்சென்ட்டுக்கு மேலும் நெகிழ்ச்சியாக இருந்தது. ரஜினியை மீண்டும் ஆசுவாசப்படுத்திய அவர் அங்கிருந்த பெஞ்சில் அமர செய்தார். பிறகு ரஜினியிடம் அவரைப் பற்றிய தகவல்களை கேட்டார்.

    ரஜினி பெங்களூரில் காவல் துறையில் பணிபுரிந்த ரனோஜிராவ்-ஜிஜிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தது முதல் சிறு வயதில் படித்தது, தற்கொலைக்கு முயற்சி செய்தது, பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் வீட்டில் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்தது, மூட்டை தூக்கியது, பிறகு கண்டக்டர் பணிக்கு சென்றது, ராகவேந்திர சுவாமிகள் ஆசி கிடைத்தது, அதன் பிறகு சென்னை நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தது, டைரக்டர் பாலச்சந்தர் ஆசியால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தார்.

    அதோடு தனது குடும்ப சூழ்நிலைகளை ரெஜினா வின்சென்ட்டிடம் ஒளிவுமறைவின்றி அனைத்தையும் தெரிவித்தார். சிறு வயதில் தாயார் இறந்து போன பிறகு உறவினர்கள் அனைவரும் தன்னிடம் அன்பு காட்டாமல் உதாசீனம் செய்ததை சொல்லி... சொல்லி அழுத்தார். நட்பு வட்டாரத்திலும் தன்னை ஏமாற்றியவர்களைப் பற்றி சொன்னார்.

    அதுபோல சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் தன்னை பலர் தொடர்ந்து ஏமாற்றுவதாக வருத்தப்பட்டார். வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவர் சொல்ல... சொல்ல... ரெஜினா வின்சென்ட் உருகிப்போனார்.

    தமிழ் திரையுலகில் புகழ் பெற்று உச்சத்துக்கு வந்துக் கொண்டு இருக்கும் ஒரு நடிகனின் மறுபக்கத்தில் இவ்வளவு ஏமாற்றங்கள், காயங்கள், ஏக்கங்கள் இருக்கிறதா? என்பதை உணர்ந்த போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த கண்ணீர்தான் ரஜினி மீது அவருக்கு அசைக்க முடியாத பரிவையும், ஆழ்ந்த பாசத்தையும் உருவாக்கியது.

    "கவலைப்படாதே ரஜினி, நாங்கள் இருக்கிறோம்" என்றார். அதைக் கேட்டதும் ரஜினி முகம் மலர்ந்தது. தனக்கு உண்மையிேலயே ஒரு அம்மா கிடைத்து விட்டார்கள் என்று அவரது மனம் ஆனந்தம் அடைந்தது. தாய் பாசம் அறியாத அவர் ரெஜினா வின்சென்ட்டை தாயாக தத்து எடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ரஜினியின் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே அவர் ரெஜினா வின்சென்ட்டுக்கு நன்றி சொன்னார். "அம்மா.... நான் அடிக்கடி வருவேன். தினமும் எனக்கு நல்ல அறிவுரைகளை சொல்லி திருத்த வேண்டும்" என்றார்.

    ரெஜினா வின்சென்ட் அதை ஏற்றுக் கொண்டார். அவரிடம் மீண்டும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு ரஜினி ஒரு புது மனிதன் போல அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற ரெஜினா வின்சென்ட்டுக்கு ரஜினி மீது நம்பிக்கை வரவில்லை.

    ரஜினி எப்போதும் மது போதையில் இருப்பவர். இந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார் என்றுதான் நினைத்தார். ஆனால் ரஜினி அப்படி இருக்கவில்லை. மறுநாளே ரெஜினா வின்சென்ட் வீட்டுக்கு வந்து விட்டார். சாப்பாடு கொடுங்கள் என்று உரிமையோடு கேட்டு வீட்டுக்குள் போய் உட்கார்ந்து வாங்கி சாப்பிட்டார்.

    அடுத்த நாளும் வந்தார்.... அதற்கு அடுத்த நாளும் வந்தார்... அடிக்கடி வர ஆரம்பித்தார். வரும் போதெல்லாம் ரெஜினா வின்சென்ட் கையால் சாப்பிடாமல் போகவே மாட்டார். இது மருத்துவத்திலும், சமூக சேவை துறையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த ரெஜினா வின்சென்ட்டுக்கு ஒரு கட்டத்தில் சற்று இடையூறு ஏற்படுத்தியது.

    ஒரு நாள் அவர் ரஜினியை பார்த்து, "ஆமா... நீ ஏன் தினமும் என் வீட்டுக்கு வருகிறாய்? உன்னை யார் இங்கு வரச்சொன்னது?" என்று ஈட்டி முனைக்குத்துவது போல கேட்டார். ரஜினி கொஞ்சம் கூட சலனம் ஆகவில்லை. அவர் சிரித்துக் கொண்டே, "ராகவேந்திர சுவாமிகள் தான் இங்கு வரச்சொன்னார்" என்றார். கிறிஸ்தவரான ரெஜினா வின்சென்ட்டுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. சிலைப் போல் நின்று விட்டார். அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் 3-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.

    • தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்
    • தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது.

    நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது. தைராய்டு சுரப்பி எங்கே இருக்கிறது? தைராய்டு என்பது லத்தீன் சொல். அதனுடைய பொருள் கவசம் என்பதாகும்.

    தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். பெண்கள் சோக்கர் எனப்படும் நெக்லஸ் அணியுமிடமே தைராய்டு சுரப்பியின் இடம். மூச்சு குழலின் மேல் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் ஒட்டி இருக்கும் கவசம் என்று சொல்லலாம்.

    எப்படி வேலை செய்கிறது?

    தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும்.

    உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.

    தைராய்டு நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு என்ன காரணம்?

    நம்முடைய உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எந்த சத்துமில்லாமல், வயிற்றை அடைக்கும் குப்பை உணவுகளால் அயோடின் சத்து குறைபாடு அதிகரித்து விட்டது. தைராய்டு எதிர்ப்பு நோய்களும் அதிகமாகிவிட்டன. இன்னொரு காரணம் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால், கண்டுபிடிப்பதும் அதிகமாக உள்ளது.

    தைராய்டு நோய் வகைகள் என்ன?

    தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது. இதுதான் மிகவும் அதிகமாக காணப்படும் தைராய்டு நோய். தேவையை விட அதிகமாக சுரப்பது ஹைப்பர் தைராய்டு எனப்படுகிறது.

    என்ன அறிகுறிகள் இருக்கும்?

    ஹைப்போ தைராய்டு: மந்தநிலை, எதையும் சுறுசுறுப்பாக இவர்களால் சிந்தித்து செய்ய முடியாது. எப்போதும் ஒரு சோம்பேறித்தனம் இருக்கும். தலைமுடி கொட்டுதல், உடல் முழுவதும் நீர் அடித்தல் (வீக்கம்), குறிப்பாக கால்களில் வீக்கம், இதயத்துடிப்பு குறைவது, மூச்சு விடுவதில் சிரமம், ஜீரண மண்டலத்தில் மந்த தன்மை - பசி எடுக்காது. சில நாட்களுக்கு ஒரு முறையே மலம் கழிப்பது, பெண்களாக இருந்தால் அவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பது பல மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாதவிடாய் உண்டாகும். குழந்தை கருத்தரிப்பது தடைபடும். தடைபடலாம் ஆண்களுக்கும் விந்தணுக்களை பாதிக்கும். எடை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். பொதுவாக எதிர்ப்பு சக்தி குறையும்.

    ஹைப்பர் தைராய்டு

    தைராய்டு அதிகமாக சுரந்தால் அவர்கள் இளைத்துக் கொண்டே போவார்கள். கண்முழி துருத்திக் கொண்டிருக்கும். இதய துடிப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். கரு தங்குவதில் சிக்கல் ஏற்படும்.

     

    இதை எப்படி கண்டுபிடிப்பது?

    தைராய்டு ரத்த பரிசோதனை செய்தாலே போதும். தேவைப்பட்டால் தைராய்டு ஸ்கேன் மற்றும் கட்டி எதுவும் இருந்தால் அதிலிருந்து சதை எடுத்து பயாப்ஸி செய்யப்படும்.

    எப்படி சரி செய்வது?

    அயோடின் சத்து குறைபாட்டால் வரும் தைராய்டுக்கு அயோடின் சத்து மாத்திரைகள் தரப்படும். தைராய்டு மாத்திரையும் தரப்படும். தைராய்டு மாத்திரை காலையில் சாப்பிடும் முன்பாக எடுக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் நன்றாக சேரும்.

    ராதா 35 வயது பெண்மணி

    ரத்தத்தில் ஹீமோகுளோபின், ஏறவே இல்லை. தலைமுடி வேறு, வேர் வேராக கொட்டிக் கொண்டிருந்தது. பிறகு அவருக்கு தைராய்டு குறைவாக சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆறு மாதமாக மாத்திரை எடுக்கிறார்.

    காலை எழுந்ததும் 50 மைக்ரோகிராம் தைராய்டு மாத்திரையை விழுங்கி விட்டு அரை மணி நேரம் கழித்து அவருடைய காபியை குடிப்பார்.

    ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவர் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்யும்படி கூறியிருக்கிறார். நேற்றுதான் டெஸ்ட் எடுத்திருந்தார். இன்று மொபைலில் அவருக்கு ரிப்போர்ட் வந்திருந்தது.

    அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஏனென்றால் வந்திருந்த மூன்று தைராய்டு எண்ணிக்கைகளும் ( டி3, டி4, டி.எஸ். ஹெச்)சரியான லெவலில் இருந்தன.

    சரி! நமக்கு தைராய்டு சரியாகி விட்டது! இனி மாத்திரை வேண்டாம் என்று மாத்திரை டப்பாவை எடுத்து எங்கோ தூக்கி எறிந்தவர் தான்.

    மொத்தமாக மறந்துவிட்டார். ஒரு மாதம் ஓடி விட்டது.

    மெதுவாக பழைய பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. முடி மீண்டும் கொட்ட ஆரம்பித்தது.

    இப்போது மருத்துவரிடம் சென்றார்.

    "டாக்டர்! நீங்க கொடுத்த மருந்து கொஞ்ச நாளைக்கு தான் வேலை செஞ்சு இருக்கு. இப்ப எனக்கு எல்லா பிரச்சனையும் திரும்ப ஆரம்பிச்சிருச்சு. "

    என்று வருத்தத்துடம் அங்கலாய்த்தார்.

    மருத்துவர் விளக்கியதும் தான் அவருக்கு புரிந்தது. தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு முழுமையாக சரியாகாது. அவர்கள் தொடர்ந்து தைராய்டு மாத்திரைகள் எடுக்க வேண்டும். தைராய்டு பரிசோதனையில் எல்லாம் சரியாக வந்தால் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நீங்கள் எடுக்கும் மாத்திரை போதுமான அளவு உள்ளது என்பதுதான். தைராய்டு சரியாகிவிட்டது என்று அல்ல.

    எனவே, தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்!

    தைராய்டு குறித்த உணவுகள், அடுத்த வாரம்!

    ×