என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: ரஜினி-லதா காதல் கதை!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: ரஜினி-லதா காதல் கதை!

    • கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார்.
    • பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும்-லதாவுக்கும் இடையே மலர்ந்த காதல் தெய்வீகமானது. இப்படி ஒரு காதல் தங்களுக்குள் உருவாகும் என்று நிச்சயமாக அவர்கள் இருவருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தெய்வீக சங்கல்பம்தான் அவர்களை இணைத்தது.

    ரஜினி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறி இருந்த அந்தக் கால கட்டத்தில் லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அவரது தந்தை ரங்காச்சாரி, தாய் அலமேலு.

    ரங்காச்சாரியின் பூர்வீகம் கடலூர். அவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ அவென்யூவில் அலமேலுவுடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் பிறந்தனர்.

    மகன் பெயர் ரவி ராகவேந்திரா, மூத்த மகள் சுதா, இளைய மகள் லதா. மகன்-மகள்கள் மூவரையும் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் படிக்க வைத்தனர். படித்துக் கொண்டே சுதாவும், லதாவும் பாட்டு கற்றுக் கொண்டனர். பள்ளிகள் அளவில் நடக்கும் பாட்டு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்த்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இசைக்குழு நடத்திய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இசைக்குழுவுக்கு ஒரு தடவை பாடகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரங்காச்சாரியின் மூத்த மகள் சுதா தேர்வானார். அவரது குரல் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மிகவும் பிடித்துப் ேபானது.

    ஒரு கட்டத்தில் சுதாவுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே நட்பு காதலாக மாறியது. இருவர் வீட்டிலும் பெரியவர்கள் பேசி திருமணத்தை முடித்தனர். இந்த காலக் கட்டத்தில் பணி நிறைவு பெற்று ரங்காச்சாரியும், அலமேலுவும் சென்னையை காலி செய்து விட்டு கடலூர் சென்று விட்டனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால் ரவி ராகவேந்திராவையும், லதாவையும் மூத்த மகள் சுதா கண்காணிப்பில் ரங்காச்சாரி விட்டு சென்று இருந்தார். சுதா வீடு அருகிலேயே ரவி ராகவேந்திராவும், லதாவும் தனியாக இருந்தனர். லதா அங்கிருந்த படியே எத்திராஜ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கல்லூரியில் பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அவருக்கு தோழி வட்டாரம் உருவாகி இருந்தது. அதில் உமா, சந்திரா, சுனிதா ஆகிய 3 பேர் இருந்தனர்.

    தோழிகள் 4 பேரும் கல்லூரியில் தனித்துவத்துடன் வலம் வந்தனர். எந்த போட்டியாக இருந்தாலும் இந்த 4 தோழிகளும் சேர்ந்து கலக்குவதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். இதனால் 4 தோழிகள் பற்றிய பேச்சு கல்லூரியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த 4 பேரும் அடிக்கடி நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசுவது உண்டு. அப்போது அவர்களுக்குள் ஒருநாள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டனர். வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்ள கூடாது. சமூக சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் அவர்களுக்கு கல்லூரி மலருக்காக சிறப்பு கட்டுரைகள் தயாரிக்கும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதன்படி லதாவுக்கும், அவரது தோழிகளுக்கும் சினிமா நட்சத்திரம் யாரையாவது பேட்டி கண்டு கட்டுரை எழுதி தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    எந்த நடிகரிடம் பேட்டி எடுக்கலாம் என்று 4 தோழிகளும் தங்களுக்குள் விவாதித்த போது ரஜினியிடம் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமித்த கருத்து உருவானது. லதாவின் அக்கா சுதாவின் கணவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் என்பதாலும், அவர் ரஜினியுடன் சேர்ந்து படங்களில் நடித்து இருப்பதாலும் அவர் மூலம் ரஜினியை தொடர்பு கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாளில் 4 மாணவிகளையும் வரச்சொல்லுமாறு ரஜினி கூறி இருந்தார். முதல் நாள் லதாவும் அவரது தோழிகளும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது ரஜினியை சந்தித்து பேட்டி காண இயலவில்லை.

    இதையடுத்து சென்னை செனடாப் சாலையில் உள்ள பிரபல நடிகை சவுகார்ஜானகியின் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பு சமயத்தில் சந்திக்கலாம் என்று ரஜினி உறுதியளித்து இருந்தார். அந்த சமயத்தில் சவுகார்ஜானகி வீட்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லுமுல்லு படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக அன்று நடந்துக் கொண்டிருந்தது.

    பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியில் ஒரே டேக்கில் ரஜினி நடித்து முடித்தார். அடுத்த காட்சிக்கான படப்பிடிப்புக்கு கருவிகள் வேறு இடத்துக்கு மாற்றும் பணிகள் நடந்த சமயத்தில் ரஜினி ஓய்வெடுக்க தனது அறைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது உதவியாளர் வந்து, "எத்திராஜ் கல்லூரி மாணவிகள் உங்களை பேட்டிக்காண வந்து இருக்கிறார்கள். கீழ் தளத்தில் அவர்களை உட்கார வைத்து இருக்கிறேன்" என்றார். அதை கேட்டதும் ரஜினி, சரி 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். அடுத்த சில நிமிடங்களில் ஓய்வு அறையில் இருந்து வெளிேய வந்த அவர் கீழ் தளத்தில் மாணவிகள் இருக்கும் இடத்துக்கு வந்தார்.

    அவர் வருவதை லதாவும், அவரது தோழிகளும் பார்த்தனர். ரஜினியை கண்டதும் 4 பேரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ரஜினியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு 4 பேரையும் ஒவ்வொருவராக பார்த்தார். லதாவை பார்த்ததும் அவரது கண்கள் அப்படியே நிலைக்கொண்டது போல ஆகி விட்டது.

    லதாவின் அழகிய கண்கள், மனதை கொள்ளைக் கொள்ளும் அழகு, மென்மையான பேச்சு, இனிமையான பார்வை, புன்னகை முகம் ஆகியவற்றை கண்டு ரஜினி தன்னையே மெய்மறந்துப் போனார். ஸ்டைலாக தலையை முன்பக்கம் சாய்த்து அதே வேகத்தில் பின் பக்கமாக ஒரு வெட்டுவெட்டி தலைமுடியை தள்ளி விட்டபடி சிரித்துக் கொண்டே "சொல்லுங்க" என்றார்.

    மாணவிகள் 4 பேரும் தங்களை அறிமுகம் செய்தனர். ஒரு மாணவி லதாவை சுட்டிக் காட்டி, "இவள் பெயர் லதா" என்று கூறினார். அதை கேட்டதும் ரஜினிக்கு மனதுக்குள் இன்ப அலை வீசியது. அவரது பார்வை லதா மீது மட்டுமேதான் இருந்தது. இது லதாவுக்கு முதலில் என்னவோ போல் இருந்தது. அவருக்குப் பேச்சு வரவில்லை.

    எப்போதும் அதிரடியாக கலகலப்பாகப் பேசும் லதா வாய்மூடி மவுனமாக இருந்தார். அவரது முகம் வெட்கத்தில் மூழ்கி இருந்தது. அவருக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    அப்போது ரஜினி கேள்விகளை கேளுங்கள் என்றார். லதாவின் தோழிகள் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். ரஜினியும் அதற்கான பதிலை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது கண்கள் மட்டும் லதாவையே சுற்றி... சுற்றி... வந்தன.

    சில கேள்விகளுக்கு பிறகு லதா ஒரு கேள்வியை எடுத்து வீசினார். "உங்களுக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று லதா கேள்வி எழுப்பினார்.

    லதாவின் குரலை கேட்டதும் ரஜினிக்கு உடம்பே ஜில்லென்று குளிர்ந்தது போல் ஆகி விட்டது. என்னவோ தெரியவில்லை. அந்த குரலை கேட்டதுமே ரஜினி சொக்கிப் போனார். அவர் மனது அவரிடம் இல்லை. லதா மீது இருந்தது. இந்த பெண் நமக்கு மனைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரஜினியின் உள்மனம் மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயத்தில்தான் லதா இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். நாம் மனதுக்குள் நினைத்தது போலவே இந்த பெண் கேள்வி கேட்கிறாரே? என்று ரஜினிக்குள் இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் சிரித்துக் கொண்டே, "எனக்கு மனைவியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் மனதுக்குள் முடிவு செய்து விட்டேன். என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பப்பாங்கான பெண்ணாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

    ரஜினியின் இந்த பதில் லதாவுக்கு திருப்தியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அவர் தலையை அசைத்துக் கொண்டே புன்னகைப் பூத்தார். அதை கண்டதும் ரஜினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் லதாவை தொடர்ந்து ஊடுருவி ஆழமாக பார்த்தார்.

    அவர் கண்களை அகற்றவே இல்லை. அப்படி ஒரு ஆழமான பார்வையை அவர் லதா மீது பாய்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை நாம் இப்படி வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ரஜினியிடம் கொஞ்சமும் இல்லை. ஏனெனில் அவர் அந்த நிமிடத்தில் இருந்தே லதாவை மனதார காதலிக்க தொடங்கி இருந்தார்.

    அவரது கூர்மையான பார்வை லதாவை நிலைகுலைய செய்தது. என்ன இவர் இப்படி நம்மை குறு...குறு...வென பார்த்துக் கொண்டே இருக்கிறாரே என்று படபடப்பு ஏற்பட்டது. லதாவின் தோழிகளும் இதை கவனிக்க தவறவில்லை. அவர்கள் ரஜினியிடம் வேறு சில கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். அந்த சூழலை பயன்படுத்தி தனது காதலை தெரிவிக்க ரஜினி முடிவு செய்தார். ராகவேந்தரின் வழிகாட்டுதலோ, என்னவோ லதா கேட்ட ஒரு கேள்வி ரஜினி எதிர்பார்த்தது போல அமைந்து இருந்தது. அதற்கு ரஜினி அளித்த பதிலை நாளை பார்க்கலாம்.

    Next Story
    ×