என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பத்தாம் பாவகம்
- ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
- தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும்.
ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக உயர்த்துவது அவருடைய தொழிலாகும். சாதாரண மனிதன் முதல் சாதனை மனிதன் வரை அனைவரும் ஜீவிக்க தொழில் அல்லது உத்தியோகம் வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தின் மூலம் ஒருவரின் தொழில் பிராப்தம் பற்றி அறிய முடியும். ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தில் நிற்கும் கிரகம் ஜாதகருக்கு வாழ்க்கையில் மேன்மையை தரும். ஒன்பதாமிடமான கொடுப்பினை ஸ்தானத்திற்கு இரண்டாம் இடமாக பத்தாமிடம் வருகிறது. அதாவது ஒருவருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மூலமாகவே ஒருவர் ஜீவனம் நடத்துவார். முன்னோர்கள் நல்ல பலன்கள் சேர்த்து வைத்திருந்தால் ஜாதகருக்கு எளிய உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். முன்னோர்கள் பாவம் சேர்த்து வைத்திருந்தால் கடின உழைப்பில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். பத்தாம் இடத்தில் எத்தகைய கிரகம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்று தான் ஜோதிடம் கூறுகிறது.
பத்தாமிடத்தை தொழில் ஸ்தானம் என்று மட்டும் கூற முடியாது. கர்மம் செய்ய புத்திரன் உண்டா என்று சொல்லக்கூடிய ஸ்தானமும் பத்தாமிடம் தான். பத்தில் ஒரு கிரகம் நின்றால் நிச்சயமாக ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு ஜாதகத்தில் 5, 9ம் அதிபதிகள் பலம் பெறாவிட்டாலும் பத்தாமிடம் வலுப்பெற்றால் ஜாதகருக்கு இறுதி காரியம் செய்ய குழந்தை பிறக்கும். இதில் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் மூலம் பல கோடி சம்பாதிப்பவர்கள் புத்திர பாக்கியத்திற்காக மருத்துவ உதவியை நாடுகிறார்கள்.
பத்தாமிட பலவீனத்தால் நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு பெயர் சொல்ல மழலை செல்வம் அதிகமாக இருக்கிறது. பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வழி வேண்டி கடவுளை நோக்கி ஒரு கூட்டம் செல்கிறது. சம்பாதித்த சொத்தை அனுபவிக்க அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்று ஒரு பிரிவினர் ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் நோக்கி செல்கிறார்கள்.
கால பகவானின் கணக்கை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மனிதனாகப் பிறந்தவர்கள் உயிர் காரகத்துவ ரீதியான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருள் காரகத்துவத்தை இழப்பார்கள். அதே நேரத்தில் பொருள் காரத்துவத்தை அதிகப்படியாக ஒருவர் அனுபவித்தால் அவருக்கு பயந்து உறவுகள் எட்ட நிற்பார்கள். ஒட்டி உறவாட மாட்டார்கள். அல்லது உறவுகள் பணம் கேட்பார்கள் என்று பயந்து உறவுகளிடம் பழக மாட்டார்கள். இன்று பணமா பாசமா என்று பட்டிமன்றம் நடத்தி வாதிடும் வகையில் உலகம் உள்ளது. பதவியும் செல்வமும் ஒரு காலகட்டத்தில் உயர்ந்தும் மற்றொரு கால கட்டத்தில் குறைந்தும் சந்திரன் போல் வளர்ந்தும் தேயும் தன்மை கொண்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தொழிலை பற்றியதாகும் என்பதால் அதைப் பார்க்கலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தொழில்
ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொழில் செய்தனர். பெரும்பான்மையானவர்கள் குலத்தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அரசாங்கமும் வங்கிகளும் நிதி உதவி அதிகமாக வழங்குகிறது. நிதி உதவி பெற்று தொழில் தொடங்க பல இளைய தலைமுறையினர் முன்வருகிறார்கள். தொழில் தொடங்கும் அனைவரும் வெற்றியை நிலை நாட்டுவதில்லை. அதேபோல் ஒருவருடைய தொழிலை முதலீடு அடிப்படையான தொழில்கள் முதலீடு இல்லாத தொழில்கள் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். சிலருடைய ஜாதக அமைப்பு படி முதலீடு செய்யக்கூடிய தொழில்கள் நல்ல வருமானத்தை பெற்று தரும். ஒரு சிலருடைய ஜாதக அமைப்பு முதலீடு இல்லாத தொழில்கள் அதிகப்படியான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
முதலீடும் அடிப்படையான தொழில்
எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்து வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் செய்தாலும் எட்டாம் பாவக வலிமை வேண்டும். போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் வீக். ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பாரம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருப்பதால் அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகுகிறது. பெரும் பணக்காரர்களின் வாழ்க்கையும் , முதலீடும் யாரும் அறிய முடியாத வண்ணம் மறைபொருளாக ரகசியமாக இருக்கும். 5.10 சம்பந்தம் இருந்தால் அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.
முதலீடு இல்லாத தொழில்கள்
லக்னாதிபதி, பத்தாம் அதிபதியை விட ஆறாம் பாவகம் வலுத்தால் முதலீடு இல்லாத தொழில்கள் அல்லது பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில்கள் அல்லது உத்தியோகமே சிறப்பான பலனைத் தரும். பேச்சை மூலதனமாக கொண்ட, முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், மார்க்கெட்டிங், ஜோதிடம், புரோகிதம் போன்ற துறையில் வாழ்வாதாரம் உயரும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பார்கள்.
ராசி சக்கரம்
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
ஜாதகரின் சிந்தனைகள் தொழில் பற்றியதாகவே இருக்கும். அவர்களின் மூச்சுக்காற்று கூட தொழில் எண்ணம் மிகுதியாக இருக்கும். அதே நேரத்தில் பத்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் தொழில் வாய்ப்புகள் ஜாதகரை தேடிச் செல்லும். தொழிலைத் தேடி ஜாதகர் செல்ல வேண்டிய தேவை இல்லை. தொழில் சார்ந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். 1, 5, 9 என்னும் திரிகோணங்கள் ஒரு ஜாதகத்தில் வலுத்தால் உழைத்து 30 முதல் 50 வயதிற்குள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 1, 4, 7,10 எனப்படும் கேந்திரம் வலுத்தால் 25- 40 வயதுக்குள் வாழ்க்கையில் செட்டிலாக தேவையான அனைத்து பொருளாதாரத்தையும் தொழில் மூலமாக சம்பாதிப்பார். 2,5,8,11 எனும் பண பரஸ்தானம் பலம் பெற்றால் 20-30 வயதுக்குள் பொருளாதாரத்தில் தன்னிறைவு தொழில் மூலமாக உண்டாகும்.
சனிபகவான்
கால புருஷ பத்தாம் அதிபதி சனிபகவானே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்கிறார். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியும் சனி பகவானும் லக்னமும், லக்னாதிபதியும் என்ற நிலைக்கு ஏற்பவே தொழிலில் ஒருவர் வெற்றி பெற முடியும். பத்தாம் பாவகம் வலிமையாக இருந்து சனிபகவான் வலிமையாக இல்லாவிட்டால் சுமாரான வருமானம் வரும். நல்ல வருமானம் தரக்கூடிய வகையில் தொழிலை வழி நடத்த தெரியாது.
ஒரு ஜாதகரின் அனைத்து கர்மாவும் சனிகிரகத்திலேயே பதியப்பட்டு இருக்கிறது. சனிபகவான் தன் பணியை திறம்படச் செய்ய ராகு கேதுக்கள் உதவியாக இருப்பார்கள். வினையூக்கி கிரகங்களான ராகு கேதுக்கள் சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன் வழங்குவார்கள்.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.
சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,8,12ல் சந்திரன் மறையக் கூடாது. சந்திரன் மறைந்தவர்கள் தனது சுய முதலீட்டை இழப்பார்கள். தொழிலால் பெரிய நன்மையை அடைய முடியாது.
தசாம்சம் டி10
இவை எல்லாவற்றிற்கும் மேலாக டி10 எனும் தசாம்ச வர்க்கசக்கரத்தின் மூலம் ஒருவரின் தொழில் அமைப்பை தெளிவாக விரிவாக அறிந்து கொள்ள முடியும். ராசி சக்கரம் உணர்த்தும் மேலோட்டமான பலனை விட தசாம்ச சக்கரம் மூலம் அறியும் தொழிலுக்கான பலன் தெள்ளத் தெளிவாக இருக்கும். 30 பாகைகள் கொண்ட ஒரு ராசி சக்கரத்தை பத்து சம பங்காக பிரிக்கும்போது ஒரு பங்கிற்கு மூன்று பகை வரும்.
இதன் மூலம் ஒருவரின் சரியான தொழில் நிலை வகிக்கும் பதவி செயல்திறன் ஆகியவற்றை அறியலாம். ஒரு ஜாதகத்தில் ஜீவனம் எனும் தொழில் நிலையை அறிய 1,10-ம் பாவக ஆய்வு மிக முக்கியம். அதேபோல் தசாம்ச சக்கரத்தில் 1,10-ம் பாவக அதிபதிகளைக் கொண்டு தொழிலை நிர்ணயிக்கலாம். ராசி சக்கரத்தினை விட மிக தெள்ள தெளிவாக தொழிலை நிர்ணயிக்கலாம். தசாம்ச சக்கரத்தில் 1,10 பாவகத்தில் நிற்கும் கிரகங்களில் எந்த கிரகம் வலிமை உள்ளதாக உள்ளதோ அந்த கிரகத்தின் தொழில் ஜாதகர் செய்வார்.
தசாம்ச சக்கரத்தின் லக்னாதிபதி பலம் பெற்றால் தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்கக் கூடிய தொழில் அமையும்.
ராசி சக்கரத்தின் பத்தாம் அதிபதியும் சனிபகவானும் தசாம்ச சக்கரத்தில் சுபவலிமை பெற்றால் ஜாதகத்தின் தொழில் மூலமாக பலருக்கு வேலை கொடுப்பார். தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். அல்லது பேராசையால் குறுக்கு வழியில் செல்வார். தசாம்ச சக்கரத்தில் சூரியன் பலம் பெற்ற ஜாதகருக்கு நிர்வாகத் திறமை உண்டு. அரசியல் ஈடுபாடு அரசாங்க ஆதரவு உண்டு. சூரியன் பலம் குறைந்தால் தொழிலுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்காது. நிலையற்ற வருமானம் இருக்கும். நிர்வாக திறமை இருக்காது. தசாம்ச சக்கரத்தில் சனி வலுவாக இருந்தால் ஜாதகரின் தொழிலுக்கு உதவியான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
தசாம்ச சக்கரத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு தெளிவான மனநிலை இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வார். தசாம்ச சக்கரத்தின் 10-ம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்மாவை பற்றியும் கர்மவினை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். மனிதராய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து வாழ வேண்டும் என்பது விதி. மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளிலும் ஒருவரின் ஜாதகம் பலம் பெற்றால் பணத்திற்காக ஜாதகர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பணம் ஜாதகருக்காக வேலை செய்யும்.
மேலே கூறிய நிலைகளில் சில குறைபாடுகள் இருந்தால் பணத்திற்காக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.
பரிகாரம்: சுய ஜாதக ரீதியான பத்தாம் பாவக வலிமை குறைவால் டி10 எனும் தசாம்சம் பலம் குறைந்தால் சனிக்கிழமை காலபைரவரை வழிபடுவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.






