என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கொடுப்பினை பற்றி அறிய உதவும் ஒன்பதாமிடம் எனும் பாக்கியஸ்தானம்
- ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும்.
- ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது.
"எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது பழமொழி" அதாவது ஒரு செயலை எப்படி திட்டமிட்டாலும், அதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டும். அதாவது ஒரு செயலைச் செய்ய முயற்சிப்பது மட்டுமே போதாது, அது நிறைவேறச் சரியான நேரமும், காலமும் இருந்தால் மட்டுமே செயலாக்கம் பெறும். எப்படி திட்டமிட்டுச் செயல்பட்டாலும், சில சூழ்நிலைகளில் வெற்றி என்பது ஜாதகரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. செயலைச் செய்வதற்கான முயற்சியை எடுப்பதுடன், அதற்கான விதி அமைப்பு இருந்தால் மட்டுமே அந்த முயற்சி வெற்றி பெறும். இதை ஜோதிட ரீதியாக விதி கொடுப்பினை என்று சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் விதிப்படி அதாவது கொடுப்பினை, படித்தான் இருக்கும். இதுதான் நிதர்சனமான அனுபவப் பூர்வமான உண்மையாகும். இதைத் தான் ஜோதிடம் ராசி, லக்னம் விதி, மதி என்று கூறுகிறது. இதை விதி, தலையெழுத்து, கொடுப்பினை, புண்ணியம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தலைவிதி என்று கூறுகிறார்கள். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கொண்டு விதி கொடுப்பினையை தெளிவாக அறிய முடியும்.
ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும். அந்தத் தொகுப்பின்படி இந்த பிறவியில் ஜாதகர் என்ன அனுபவிக்கப் போகிறார் என்பதை கூறுவது ஒன்பதாமிடமாகும்.
ஒருவர் என்ன பலனை அனுபவிக்க வேண்டும் என்ற விதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திலேயே உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் இல்லாத ஒரு பலனை இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க முடியாது. ஒருவர் குறிப்பிட்ட வருமானம் பெற வேண்டும் என்ற விதி அவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இதை மேலும் புரியும் படி கூறினால் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனனம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது. இது அவரவரின் தாத்தா பாட்டி முன்னோர்கள் பெற்றோர்கள், ஜாதகர் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பவே இருக்கும்.
கடந்து வந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மம் இருக்கும். ஒருவர் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறந்து அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அதை கடவுளே நினைத்தால் கூட மாற்றி அமைக்க முடியாது. கொடுப்பினையில் பதிவாகாத ஒரு சம்பவம் இந்த ஜென்மத்தில் நடக்காது. கடந்த ஜென்மத்தில் ஒருவர் புண்ணிய பலன்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தால் இந்த ஜென்மத்தில் பொருளாதார சிரமம் கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பி இருக்கும்.
எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவு செய்யும் வலிமை பெற்றவர்கள். நிலையான நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் உத்தியோகம் உண்டு. தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.
ஐ.ஆனந்தி
குல தெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுகிரகம் முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்ப பெற்றவர்கள். கவுரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்தி சாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். ஜோதிட ரீதியாக விதி மற்றும் கொடுப்பினையை அறிய லக்னம் எனும் லக்னாதிபதி, 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 9ம்மிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தின் மூலமே அறிய முற்படுவார்கள். இதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரையான பிராப்தம் எனும் விதி மற்றும் கொடுப்பினையை அறிய முடியும்.
ஆனால் ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்ந்துள்ள நட்சத்திர பாதாச்சாரத்தின் மூலமே ஒரு ஜாதகரின் கொடுப்பினையை தெள்ளத் தெளிவாக கூற முடியும். இந்த முறைகளை தான் இன்றளவும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஜோதிடர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திரச் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க விதி, கொடுப்பினை உதவும்.
ஒரு கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிப்பதற்கு வாய்ப்பில்லை. விதி, கொடுப்பினை இல்லை எனலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திர நாதன் ராசி கட்டத்தில் எந்த பாவத்தில் நிற்கிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் அந்த நட்சத்திரநாதன் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறாரோ, அந்த பாவக பலன்களையும் ஜாதகர் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் தசா புத்தி காலங்களில் அனுபவிப்பார்
ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம்மிடம் மூலமே ஒரு மனிதன் உயர்வானதை அடைய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானப் படி அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் இந்த பாவகத்தில் பதிவாகி இருக்கும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்.
இதுதான் "ஜோதிட ரகசியம். அத்துடன் உன்னைப் பெற்ற தந்தையார்? உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ கிடைக்கப்பெற்றாய்? உன் குலம், ஜாதி, மதம் எது? புண்ணிய பலத்தால் உன்னைப் பெற்றாரா? பாவ பலத்தால் உன்னைப் பெற்றரா? உன்னால் உன் தந்தை கவுரவம் கிடைக்கப் பெறுவாரா? அல்லது உன் தந்தையால் நீ கவுரவம் கிடைக்கப் போகிறாயா? முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? அல்லது அநீதியாக வந்ததா? அந்த சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா? உன் பிறப்பின் நோக்கம் என்ன? நான் ஏன் பிறந்தேன் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தரும் பாவகம்.
ஒரு ஜாதகத்தில் 9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் அதிக கிரகங்கள் இருப்பது மிக மிக நன்மை தரும் அமைப்பாகும். 9ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு பாக்கிய பலன்கள் மிகுதியாக நடக்கும். நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார்.நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகவும் குலத் தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தை வழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தவர்கள், செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள்.
லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். 9-ம் அதிபதிக்கு 1, 5 சம்பந்தம் பெற்றால் வம்சாவளியாக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் குடும்பம். இவர்களும் இவர்களுடைய வம்சாவளியும் குடும்ப கவுரவத்தை கட்டி காப்பார்கள்.
லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். 9ம் அதிபதி 5ல் இருந்தால் குழந்தைகளால் முன்னேற்றம். உயிர்கல்வி, தந்தை வழி சொத்தை அனுபவித்தல், அரசு பதவி, குலதெய்வ கடாட்சம், அரசு பதவி, ஆலயங்களை உருவாக்குதல் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறும்.
9ம் அதிபதி 9ல் இருந்தால் அதிகமான அதிர்ஷ்டம், ஒழுக்கம், அழகு, தந்தைக்கு தீர்க்கமான ஆயுள், உடன் பிறப்புகளால் இன்பம், தான தர்மம் செய்யும் பாக்கியம், மங்காத புகழ் கிடைக்கும். புண்ணிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள். 9ம் அதிபதி 6,8,12ல் மறையாமல் ஆட்சியோ, உச்சமோ, நட்போ பெற்றிருந்தால் ஜாதகரின் வாழ்நாள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். 9ம் அதிபதி 6ல் இருந்தால் முன்னோர் சொத்தினால் கடன், முன்னோர் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு பங்கம், முன்னேற்ற குறைவு, புத்திர தோஷம் ஏற்படும். 9ம் அதிபதி 8,12ல் இருந்தால் அதிர்ஷ்ட குறைவு, விரையச் செலவு, ஏழ்மை, சொத்து பறி போதல், துரதிர்ஷ்டம் அதிக மாகும். தந்தை மகன் ஒற்றுமை இருக்காது. பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரும்.
9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஜாதகருக்கு தான தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தை வழி தந்தை சம்பாதித்த சொத்துக்களை விரையம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர்களுக்கு அவப்பெயரை தேடி வைப்பவர். குல கவுரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை பெற்ற பாவத்திற்காக படியளப்பார்கள்.
பெற்றவர்களுக்கு அவரால் எந்த பயனும் இருக்காது. பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும். இரண்டு திருமணம் உண்டு. சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள். தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒன்றா? நிச்சயமாக மாற்றலாம் ஆனால் அதற்குரிய வழி முறையினை உணர்ந்து கடக்க வேண்டும். ஒரு ஜீவனில் உள்ள ஆசைகளே தலையெழுத்திற்கு காரணமாக அமைகிறது. ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் பலம் குறைந்து 8-ம் பாவகம் பலம் பெற்றால் இறை பக்தியில் சுயநலம் மிகுதியாக இருக்கும். ஜீவன் தனது ஆசைகளை மறந்து, துறந்து ஞானத்தை அடைவதற்கு பதிலாக இறைவனை சுய நலமாக வழிபடும். இறை ஞானத்தை அடைய முடியாமல் லவுகீக மாயையில் ஆன்மா சிக்கி தலையெழுத்தை அதிகப்படுத்தும்.
ஆகவே இந்தப் பெரும் பிரச்சினைக்கு தீர்வு தூய பக்தியுடன் தொண்டு, சேவை செய்து பகவானின் திருநாமத்தை உச்சரிக்க தலையெழுத்து மாறும். இந்து தர்ம கோட்பாடுகளை நன்கு பயின்று தலையெழுத்தினை மாற்றிக் கொள்ள முடியும். ஒருவரின் செயல்களே தலையெழுத்தை நிர்ணயிப்பதால் செயல்களைப் பற்றி தெளிவாக அறிதல் தலையெழுத்தை வெல்வதற்கு உதவியாக அமையும்.
பரிகாரம்
ஒன்பதாம் பாவகம் என்பது, ஏற்கனவே சேர்த்த கர்மாவின் பலன்களை பாக்கியமாக அனுபவிக்கிறோம் என்பதால் ஒன்பதாமிடம் சுபத் தன்மை பெற்று இருக்க வேண்டும். ஒன்பதாமிடம் அசுபத்தன்மை, பகை, நீசம், அஸ்தங்கம், வக்ரம் பெற்றவர்கள் முன்னோர்களை முறையாக வழிபட வேண்டும்.
செல்: 98652 20406






