என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: தினத்தந்தியில் வெளியான ரஜினியின் காதல்!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: "தினத்தந்தி"யில் வெளியான ரஜினியின் காதல்!

    • ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார்.
    • லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு லதா மீது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் புனிதமாக மாறியது. லதாவை பார்த்து அவர் மெய்மறந்து போய் இருந்தார். அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ரஜினி மனதுக்குள் ஆழமாக உருவானது.

    சினிமா உலகில் அவர் எத்தனையோ நடிகைகளை பார்த்து இருக்கிறார். அவர்களில் சில நடிகைகள் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள். அதுபோல பொதுவாழ்வில் எத்தனையோ பெண்களை அவர் கடந்து வந்து இருக்கிறார். அவர்களிலும் சிலர் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது உண்டு.

    ஆனால் யாரும் அவர் மனதில் முழுமையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கல்லூரி மாணவி லதா மட்டுமே ரஜினி மனதில் அந்த அரிய தாக்கத்தை அன்று ஏற்படுத்தினார். தனக்கு மனைவியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே கனவு கண்டு கொண்டு இருந்தார்.

    அவரது அந்த கனவை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் லதா பொருத்தமாக இருந்தார். எனவேதான் லதா தனக்கு மனைவியாக வந்தால் தனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று ரஜினிக்கு மனதில் தோன்றியது.

    ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார். லதா மீதான காதலும் அவருக்கு அப்படித்தான் அடித்தளம் அமைத்து இருந்தது. ஆனால் மாணவி லதாவிடம் தனது காதலை எப்படி சொல்வது என்ற தவிப்பு ரஜினியிடம் ஏற்பட்டது.

    தனது மனதுக்குள் உருவாகி இருக்கும் காதலை லதா உணரும் வகையில் சொல்ல வேண்டும். ஆனால் நேரடியாக சொல்ல முடியாது. எப்படி சொல்வது என்று யோசித்தார். லதா தன்னிடம் அடுத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்கும்போது அதையே தனக்கு சாதகமாக மாற்றி காதலை சொல்லி விட வேண்டியதுதான் என்று மனதுக்குள் முடிவு செய்துக்கொண்டார்.

    அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல லதா ஒரு கேள்வியை ரஜினியை பார்த்து கேட்டார். "மிஸ்டர் ரஜினிகாந்த் நான் முன்பு கேட்ட கேள்விக்கு குடும்பப்பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்பப் பாங்கான பெண் என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு அதுபற்றி புரியவில்லை. நீங்களே அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?" என்று லதா யதார்த்தமாக கேட்டார்.

    இதை கேட்டதும் ரஜினிக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது. லதாவிடம் இருந்து தனக்கு சாதகமாக இப்படி ஒரு கேள்வி வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்தார். லதா கேட்ட லட்டு மாதிரியான அந்த கேள்வியை "லபக்" என்று பிடித்துக் கொண்டார்.

    ரஜினி சிரித்துக்கொண்டே லதாவை பார்த்து, "குடும்பப் பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் மென்மையானவராகவும் இருக்க வேண்டும். அதோடு புத்திகூர்மை கொண்டவராகவும் செயல்பட வேண்டும். அதாவது உன்னை மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் உடனே திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

    ரஜினி சொன்ன இந்த பதிலால் லதா உள்பட 4 மாணவிகளும் அரண்டுப் போனார்கள். அந்த அறை அப்படியே நிசப்தமாக மாறியது. மாணவிகள் 4 பேருக்கும் வார்த்தை வெளியில் வரவில்லை. லதாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. அவர் முகம் லேசாக புன்னகைக்கு மாறி கண்களில் குறு...குறுப்பு தோன்றியது.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவரது பார்வை தரைக்கு சென்றது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த லதா அடுத்த நிமிடம் அந்த அறையில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து மற்ற மாணவிகளும் எழுந்து சென்று விட்டனர்.

    லதா கம்பீரமாக நடந்து செல்வதை ரஜினி ரசித்துப் பார்த்தார். இந்த பெண் யார்? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தபடியே தனது ஓய்வு அறைக்கு செல்வதற்காக நடந்தார். அப்போது அங்கே நடிகை சவுகார்ஜானகி வந்து கொண்டு இருந்தார். அவரிடம், "அம்மா இப்போது 4 பெண்கள் வந்தார்கள் அல்லவா? அதில் சிவப்பாக, சுறுசுறுப்பாக இருந்த பெண் யார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

    அதற்கு சவுகார்ஜானகி, "எந்த பெண்?" என்று கேள்வி எழுப்பினார். உடனே ரஜினி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லதாவை சுட்டிக்காட்டினார். லதாவைப் பார்த்ததும் சவுகார்ஜானகி, "இந்தப் பெண்ணா.... எனக்கு நன்றாக தெரியும். அவள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை" என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் ஆகி விட்டது. ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் தனது காதலை தெரிவித்து திருமணம் பற்றி பேசலாம் என்று தீர்மானித்தார். அதன்படி ஒய்.ஜி.மகேந்திரனை நேரில் சென்று சந்தித்தார். வழக்கமான நலம் விசாரிப்பு முடிந்த பிறகு சினிமா பற்றி இருவரும் சில விஷயங்கள் பேசினார்கள். அதன்பிறகு ரஜினி ஒய்.ஜி.மகேந்திரனிடம், "நான் லதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரன் விழுந்து.... விழுந்து... சிரித்தார். "என்னப்பா நீ.... லதாவையா திருமணம் செய்யப் போகிறாய். அவர் உன்னைவிட ரொம்ப மூத்தவர் ஆயிற்றே" என்றார். அதற்கு ரஜினி, "நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகிறீர்களா? நான் எந்த லதாவை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றார்.

    ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குழப்பமாகி விட்டது. "எந்த லதா? எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்து இருக்கிறாரே. அவரைத்தானே சொல்கிறீர்கள்" என்றார். அதற்கு ரஜினி, "இல்லை. நான் சொல்வது உங்கள் மனைவியின் தங்கை லதா" என்று பளிச்சென கூறினார். இதை கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

    குடும்பத்தில் அனைவரிடமும் பேசி விட்டு சொல்வதாக தெரிவித்தார். அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவி சுதாவிடம் அனைத்தையும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடலூரில் இருந்த லதாவின் பெற்றோர் ரங்காச்சாரி-அலமேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.

    முதலில் ரங்காச்சாரிக்கு இந்த திருமணத்தில் தயக்கமாக இருந்தது. நிறைய கேள்விகளை அவர் கேட்டார். ரஜினிகாந்த் அய்யங்காரா? அவர் என்ன படித்து இருக்கிறார்? நடிகராக இருக்கிறாரே சரியாக வருமா? என்று கேள்வி எழுப்பினார். பிறகு லதாவிடம் பேசி மனதை மாற்றலாம் என்று நினைத்தார்.

    ஆனால் லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது. ரஜினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன உறுதி அவரிடமும் காணப்பட்டது. அவர் தனது தந்தையிடம், "நான் ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அதே அளவுக்கு அவரும் என்னை நேசிக்கிறார். அவரிடம் சில கெட்டப் பழக்கங்கள் இருக்கலாம். சென்னையில் தனிமையாக இருப்பதால் அந்த சூழ்நிலை அப்படி உருவாக்கி இருக்கிறது. எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

    அதன் பிறகு லதாவை யாரும் சமரசம் செய்யவில்லை. இதையடுத்து ரங்காச்சாரி குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து பேசினார்கள். ரஜினி பற்றி ரங்காச்சாரி சில விஷயங்களை விசாரித்து அறிந்து இருந்தார். எனவே அவர் லதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி பெங்களூருக்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயண ராவிடம் லதா பற்றி கூறினார். இதைக் கேட்டதும் சத்திய நாராயண ராவுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மராத்தி வம்சத்தில் கிடைக்காத பெண்ணா மதராசில் கிடைத்து விடப்போகிறார் என்றார்.

    ஆனால் ரஜினி தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் சத்திய நாராயணராவ் சென்னை வந்து லதாவையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் பார்த்தார். பிறகு அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இவையெல்லாம் 1980-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் மிகமிக ரகசியமாக நடந்தன.

    ஆனால் ரஜினிக்கும், எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவுக்கும் காதல் மலர்ந்து இருப்பதை தினத்தந்தி நிருபர் கண்டுபிடித்து விட்டார். லதா பற்றிய தகவல்களை தினத்தந்தி நிருபர் சேகரித்தார். அப்போது இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி தினத்தந்தியில் ஆகஸ்டு மாதம் வெளியானது. மணமகள் கல்லூரி மாணவி லதா என்றும் மற்ற தகவல்களும் விரிவாக எழுதப்பட்டு இருந்தன. தினத்தந்தியில் இந்த செய்தி வெளியான தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திரையுலக பிரமுகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். தினத்தந்தியில் வந்து இருக்கும் செய்தி உண்மையா? என்று ரஜினிக்கு போன் செய்து விசாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கடிதம் எழுதி லதா பற்றி கேட்டனர். ஆனால் ரஜினி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தார். அவர் தன் கைவசம் இருந்த பொல்லாதவன், முரட்டுக்காளை படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டினார். அந்த 2 படங்களும் ரஜினிக்கு சில படிப்பினைகளை கொடுத்தன. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    Next Story
    ×