என் மலர்
புதுச்சேரி
- தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
- ஒரு சில இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கோடை காலத்திற்கு பின்னும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் காரணமாக புதுச்சேரியில் வருகிற 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது.
சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் நெட்டப்பாக்கம், திருக்கனுார், பாகூர், வில்லியனுார் பகுதிகளில் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிப்பால் இந்திரா காந்தி சிக்னல் சந்திப்பில் வாகனங்கள் வரிசையாக நின்றன.
3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியதுடன் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கியது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். நகர பகுதியான முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உப்பளம், ராஜ்பவன், கிருஷ்ணா நகர், பூமியான் பேட்டை, கடற்கரை சாலை, பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
கிராமப்புறங்களான பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, கரையாம் புத்தூர், மண்ணாடிபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள். நேற்று இரவு 3 மணி நேரம் பெய்த மழையில் 10 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
- சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வண்ணம் தீட்டாத, களிமண் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்தனர். இதனால், நீர் நிலை மாசுபடவில்லை. தற்போது, வண்ணம் தீட்டிய சிலைகளை வைத்து வழிப்பட்டு, கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைகிறது.
இதனை தவிர்க்க விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. சுற்று சூழலுக்கு நலம் பயக்க, விநாயகர் சிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். சிலைகளை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் தயாரிக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள், உள்ளாட்சி துறைகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன்பதிவு செய்ய வேண்டும். பிரசாதங்கள் வழங்க வாழை இல்லை, ஆலம் மற்றும் சால் இலைகள், மக்கும் காகித கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
பூக்கள், இலைகள், உடைகள் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை, சிலைகளை நீர்நிலைகளில் விடுவதற்கு முன்பாக அகற்றப்பட்டு, சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து, வண்ண குறியிடப்பட்ட தொட்டிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே புதுச்சேரி-விழுப்புரம் இடையே தினசரி காலை இயக்கப்படும் மெமு ரெயி்ல்கள் ஏற்கனவே வருகிற 5-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம்-புதுச்சேரிக்கு தினமும் காலை 5.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66063) வருகிற 6-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66064) வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் காலை 6.35 இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:66051) வருகிற 10, 12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் 15 நிமிடங்கள் காலதாமதமாக புதுச்சேரி வந்தடையும்.
திருச்சி-காரைக்காலுக்கு காலை 8.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76820) வருகிற 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் காரைக்கால்-திருச்சிக்கு மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76819) காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தஞ்சாவூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் சேவை காரைக்கால்-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
- பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. எனப்படும் அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் மூலம் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பி.ஆர்.டி.சி.யில் 40 நிரந்த ஊழியர்கள், 130 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வேலைநிறுத்த முன் அறிவிப்பு கொடுத்து போராட்டம் நடத்தினர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பி.ஆர்.டி.சி. சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழுவினர், 11 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
இதன் முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 21-ந் தேதி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்தனர்.
இதன்படி ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட குழுவினர் இன்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெரும்பாலான பஸ்கள் பணிமனைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னை, காரைக்காலுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கான பஸ்களை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கியது.
புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் அதிகம் என்பதாலும் தனியார் பஸ்கள் மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்க படுவதால் பயணிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை.
இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் பி.ஆர்.டி.சி. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதற்கிடையே பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாகூர் அருகே கரையாம்புத்தூர்-பனையடிக்குப்பம் ரோட்டில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டை கொட்டகை உள்ளது.
இங்கு வாலிபர் ஒருவர் நேற்று காலை ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவர் பனையடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு (வயது 34) வெல்டிங் தொழிலாளி என தெரியவந்தது. பின்னர் அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கரையாம்புத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ராஜகுருவை அடித்து கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ்பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜகுருவை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தினேஷ்பாபு மற்றும் அதே பகுதியை சேர்ந்த சர்மா (24), முகிலன் (20), சுமித் (20), கரையாம்புத்தூர் அச்சுதன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராஜகுருவை அடித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து தினேஷ் பாபு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தங்கையை திருமணம் செய்து கொடுத்துள்ளோம். கணவர் வீட்டில் எனது தங்கை குளித்ததை மாடியில் இருந்து ராஜகுரு பார்த்துள்ளார்.
இதனை அறிந்த எனக்கு ராஜகுரு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. இதனால் நான் எனது கூட்டளிகளுடன் சேர்ந்து ராஜகுருவை அடித்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அடித்து கொலை செய்யப்பட்ட ராஜகுருவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும்.
- நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.
இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம் உட்பட பல்வேறு பயிர்களை உருவாக்கியுள்ளார். இவரின் வழியில் அவரது மகள் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறார்.
தற்போது விரைவாக மகசூல் தரும் மிளகு பயிரை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும். இந்த 5 ஆண்டுகளால் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பலன் இருக்காது.
இந்த நிலையில் திசுவளர்ப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 18 மாதத்தில் மகசூல் தரும் மிளகை ஸ்ரீலட்சுமி கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நர்சரியில் மிளகு செடிகளை உற்பத்தி செய்யும் போது 100 செடிகளில் 60 சதவீதம் வீணாகிவிடும். சரியான முறையில் உற்பத்தி செய்யாததுதான் செடிகள் வீணாவதற்கு காரணம். எனவே தரமான கன்றுகள் தேவை. 100 பதியங்களில் வேர் நன்றாக இருந்தால்தான் தரமானது. தற்போது திசு வளர்ப்பில் புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து 100 பதியங்களில் 99 பதியங்கள் வேருடன் தரமானவையாக இருக்கும் வகையில் மிளகு நாற்றுகளை உருவாக்கி உள்ளோம்.
10 முதல் 15 நாட்களில் வேர் வந்துவிடும். 30 நாட்களில் அரை அடிக்கு மேல் வளர்ந்து விடும். இந்த நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும். விளைச்சலும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார், He expressed his support by carrying TVK party flag into sea.
- அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் த.வெ.க. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.
இவர் த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார். பின்னர் ஆழ்கடலுக்குள் த.வெ.க. கொடியை அசைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
- திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார்.
சேதராப்பட்டு:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2014-ம் ஆண்டு ஏ.எப்.டி.மில் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் என்பவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி சேரலாதன் அளித்த உத்தரவில், பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்களிப்பதாக உத்தரவிட்டார்.
- பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.
அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.
அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த 3 பேர் ராஜினாமா செய்தனர்.
- இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 3 பேரை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்ட நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நியமன எம்.பி.க்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
- புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.
அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.
புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






