என் மலர்
புதுச்சேரி
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளாததும், அதற்கான சிகிச்சை எடுத்து கொள்ளாததுமே தொற்று பரவ காரணம் ஆகும்.
அதுமட்டுமின்றி நோய் தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம் உயிரிழப்பை தடுப்பதோடு மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை சாலை பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது74). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி அன்னக்கிளி இறந்து விட்டதால் அபிமன்னன் தனது மகன் கணேஷ் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அபிமன்னன் சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலியால் அவதியடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை மாத்திரை வாங்கி வருவதாக அபிமன்னன் தனது மகன் குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் உருவையாறு மெயின் ரோட்டில் மாட்டிறைச்சி விற்கும் கடையில் அபிமன்னன் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். நோய் கொடுமை காரணமாக அபிமன்னன் இந்த முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கெரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
புதுவையில் கடந்த 11-ந் தேதி இந்த திருவிழா தொடங்கியது. 3 நாட்களில் 33 ஆயிரத்து 904 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி முகாம் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் மேலும் 4 நாட்கள் நீடித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதுவையில் பலர் முக கவசம் அணியாமல் செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை - கடலூர் மெயின் ரோடு கிருமாம்பாக்கத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை உள்ளது.
இந்த மருத்துவமனையும், புதுச்சேரி அரசு நலவழித் துறையும் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

முக கவசத்தை சரியானபடி அணிந்தால், கொரோனா நம்மை விட்டு பயந்து ஓடும். வீட்டில் இருக்கும், போதும் வெளியில் செல்லும் போதும் மூக்கு, வாயை மூடிதான் முகவசகம் போட வேண்டும். மூக்கு-வாயை திறந்து வைத்தால், கொரோனா எளிதாக நம் உடலுக்கும் சென்று விடும்.
முதல் முதலில் பிரதமர் மோடி ஊரடங்கு அறிவித்த போது, கொரோனா நோய் பற்றி நமக்கு அவ்வளவு தெரியாது. எப்படிப்பட்ட நோய், எதுவழியாக போகும், எந்த உறுப்பபை தாக்கும், எவ்வளவு உயிருக்கு அபாயகரமானது. மருந்து என்ன, எப்படிபட்ட மருந்து இதனை கட்டுப்படுத்தும் என்பது தெரியாது.
ஊரடங்கின் போது, நாம் வீட்டில் இருந்தால், தெருவில் நடமாடும் கொரோனா நம்மை தொற்றாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் மக்கள் சிரமப்படுவார்கள் என தெரிந்து தான் ஊரடங்கு போட்பட்டது. ஏனென்றால், மக்கள் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பிறக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஒரு வருடமாக நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது, கொரோனா பற்றி நமக்கு தெரிந்து விட்டது. தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தெரிந்தும் முககவசம் அணியாமல் இருப்பது தவறு. கொரோனால் வெளியில் நீண்ட நாள் உயிர் வாழமுடியாது.
முக கவசம் அணியாதவர்கள் சமுகத்தின் எதிரிகள். ஒருவர் முக கவசம் அணியவில்லை என்றால், உடனே 46 பேருக்கும், 2 வாரங்களில் 406 பேருக்கு கொரோனா பரப்பி விட வாய்ப்புள்ளது.
மற்றவர்களுக்கு பரப்ப நமக்கு உரிமை கிடையாது. முக கவசம் போடவில்லை என்றால், சமூக கேடு, சமுக விரோதம். அதனால், புதுவையில் முக கவசம் போடாமல் நடமாட யாருக்கும் உரிமை கிடையாது.
உணவு சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முக கவசத்தை கழட்ட கூடாது. முக கவசம் போடவில்லை என்றால், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. அப்படியே கொரோனா வந்தாலும் அதிகமாக பாதிக்காது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உலகில் வேறு எதிலும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஷ்வரி, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங், சுகாதார துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார், பதிவாளர் பெருமாள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபா நன்றி கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
இதனடிப்படையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையும் கள ஆய்வு செய்தது. ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணாமலை உடையப்பன் கூறியதாவது:-
232 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பார்வையற்றோர், அதிகம், குறைவான பார்வை குறைபாடு உள்ளவர்கள், குறைபாடு இல்லாதவர்கள் என பல பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் வருவாய் ஆதாரமான வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். வீடியோ கான்பரன்சிங், வீடியோ காட்சிகளை காண முடியாதது, கொரோனா பற்றி பிரெய்லியில் பதிவுகள் இல்லாதது பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவர்’ என்ற மருந்து செலுத்தப்படுகிறது.
அந்த மருந்துக்கு புதுவையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மருந்து பெற்று வர நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் ‘யுகாதி’ பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத் சென்ற அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார். அப்போது ‘ரெம்டெசிவர்’ மருந்து 1000 டோசை கையோடு எடுத்து வந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் அந்த மருந்தை சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.
புதுவையில் முக்கிய சுற்றுலா தலமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. இங்கு புதுவை மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அங்கு படகுசவாரி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 10-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர் பயணம் செய்யும் அளவுக்கு ராட்சத படகும் இருக்கிறது. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து கடலின் அழகை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்வார்கள்.
இந்தநிலையில் புதுவையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவிழாக்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் நோணாங்குப்பம் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் படகுகுழாம் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை இ்ல்லாததால் படகுகளும் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 1-ந்தேதி முதல் அரசால் இலவசமாக செலுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் நாளை வரை புதுவை மாநிலத்தில் நடத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை கொடுத்து போட்டுக்கொள்ளலாம்.
அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியதாரர் அடையாள அட்டை ஆகிய 7 அடையாள அட்டைகளை கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி இந்த தடுப்பூசியினை எடுத்துக்கொள்ளலாம். புதுச்சேரியை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான மீன் மற்றும் காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கடைக் காரர்கள், விற்பனையாளர்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். மேலும் கடைகளில் 6 அடி இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாள குறிகளை வரைந்து வைக்கவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நலவழித்துறை சார்பில், தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி 246 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் காரைக்கால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 86 ஆக உள்ளது. காரைக்காலில் இதுவரை 9 ஆயிரத்து 66 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து ஒற்றை இலக்கத்தை அடைந்தது.
தற்போது கொரோனா 2-வது அலை வீச தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை 512 ஆக உயர்ந்தது. நேற்று தொற்று எண்ணிக்கை 418 ஆக இருந்தது. புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 50 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 418 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் புதுவையில் 255, காரைக்காலில் 109, ஏனாமில் 19, மாகியில் 35 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 450, காரைக்காலில் 56, ஏனாமில் 44, மாகியில் 15 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 183, காரைக்காலில் 22, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 209 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 44 ஆயிரத்து 973 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 565 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 41 ஆயிரத்து 477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் ஆயிரத்து 561, காரைக்காலில் 533, ஏனாமில் 56, மாகியில் 85 பேர் என 2 ஆயிரத்து 235 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரத்து 800 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 693 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் கதிர்காமம் மருத்துவமனையில் புதுவை தியாகராஜா வீதியை சேர்ந்த 58 வயது ஆண், ஜிப்மரில் மணவெளியை சேர்ந்த 64 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் கோட்டுச்சேரியை சேர்ந்த 81 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் நேற்று முதல் வருகிற 14-ந்தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.
இதற்காக அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் என 100 இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
மொத்தம் 14 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுவை மாநிலத்தில் 92 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க 80 வயதை கடந்த குயவர்பாளையம் வேதவள்ளி, வாசுகி, தனலட்சுமி ஆகியோர் பாக்குமுடையான் பேட்டை அரசு பள்ளி முகாமிற்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஆட்டோவில் வந்தனர்.
அவர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக சுகாதார ஊழியர்கள் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் படி கூறி கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இது தொடர்பான புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
80 வயது மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை சுகாதார பணியாளர்கள் பாராட்டினார்கள்.
புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 41). டாக்டர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுடன் கவுசல்யாவின் தங்கை கிரிஷ்மா வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பாலசுப்ரமணியன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 26½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை பாதுகாக்க இலவசமாக தடுப்பூசியும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடக்கத்தில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி சென்று அடைய வேண்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை கொரோனா தடுப்பூசி திருவிழா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 100 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி நடந்த முகாமில், புதுச்சேரியில் 6,212 பேரும், காரைக்காலில் 765 பேரும், மாகியில் 86 பேரும், ஏனாமில் 109 பேரும் என மொத்தம் 7,172 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தடுப்பூசி திருவிழா நாளை மறுநாள் வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






