என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி கடற்கரை சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையில் லே கபே முன்பு நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இதில் செவிலியர்கள் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். அத்துடன் முகக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூறினர். மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
    வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    வில்லியனூர்:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி முகாமின்போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவ டாக்டர் ஹேமலதா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
    அரும்பார்த்தபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மூலக்குளம்:

    புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின்ரோட்டில் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 9-ந் தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்தார்.

    அப்போது அங்கு இருந்த பக்கவாட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் ரூ.1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து செல்கிறார்கள். தடையை மீறி குளிப்பதால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்தநிலையில் வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே மணல்பரப்புடன் உள்ள கடற்கரையை சுற்றுலா தலமாக்க புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அப்போதைய கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தலின்படி சுற்றுலா துறை சார்பில் அழகிய மணல் பரப்பில், ‘பாண்டி மெரினா பீச்’ (கடற்கரை) உருவாக்கப்பட்டது.

    அப்பகுதியில் அழகிய பிரெஞ்சு கால கட்டிட கலை நயத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. அங்கு பல்வேறு விதமான உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்து கொண்டே உணவு அருந்துவதற்காக பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விளையாட்டு சாதனங்கள், குதிரை சவாரி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ‘பாண்டி மெரினா பீச்’ பகுதிக்கு ஆரம்பத்தில் சுற்றுலா பணிகள், உள்ளூர்வாசிகள் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பாண்டி மெரினா பீச்சில் இளைஞர்கள் பட்டாளம், சுற்றுலா பயணிகள் வருகை, உள்ளூர்வாசிகள் வருகை அதிகரிப்பால் அப்பகுதி களைகட்டி வருகிறது.

    இந்நிலை நீட்டிக்க வேண்டுமென்றால் புதுவை அரசும், சுற்றுலா துறையும் அப்பகுதியில் சில கெடுபிடிகளை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக பீச்சுக்கு செல்லும் வழி பாதைதிறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருகிறது. ஆங்காங்கே குடிமகன்கள் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சாலையோரம் மட்டுமின்றி மணல் பரப்பிலும் மதுபாட்டில்கள் கிடக்கிறது. சிலர் குடிபோதையில் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். குடிபோதையில் சிலர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபடுகிறார்கள்.

    அதேபோல் ‘பாண்டி மெரினா பீச்’ பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சிலர் குளிக்கிறார்கள். குறிப்பாக சிலர் குழந்தைகளுடன் மிகவும் ஆபத்தான முறையில் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கின்றனர்.

    இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாண்டி மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் வசந்தம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவலட்சுமி (வயது 25). பூமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு பூமிநாதன் மது குடிக்க சிவலட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவலட்சுமி வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் தூக்குப்போட்டு தொங்கினார். 

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிவலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் கடந்த ஒரு வாரமாக 200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாநிலங்களில் இரவில் ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் அவசியம் என தமிழக அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மீண்டும் முககவசம் அணியாதவர்களுக்கு நாடு முழுவதும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    புதுவையில் கடந்த ஒரு வாரமாக 200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் அரசின் சுகாதாரத்துறையும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஊரடங்கு இல்லாவிட்டாலும், இரவில் வழிபாட்டு தலங்கள், கடைகள், நிறுவனங்களை மூட அறிவுறுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி ஓட்டல் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் என பிரிவு வாரியாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை வேண்டுகோளும் வைத்திருந்தார்.

    இதனிடையே பிரதமர் மோடி நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழாவை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். இதன்படி புதுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி புதன் கிழமை வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது.

    அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் பரிசோதனை, தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி திருவிழாவையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுவை மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது. இங்கு இன்று காலை 8 மணிக்கு தடுப்பூசி திருவிழா தொடங்கியது. ஒரு சில இடங்களில் சற்று காலதாமதமாக தொடங்கப்பட்டது.

    விடுமுறை நாளான இன்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை. தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுகாதாரத்துறை சார்பில் பிரசாரம், துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆகியவை ஒட்டப்பட்டது.

    நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அதிகளவு மக்களை பங்கேற்க வைக்க தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்துள்ளது. இதனால் பிற்பகலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் மக்கள் வருவார்கள் என சுகாதாரத்துறை எதிர்பார்த்துள்ளது.

    முதல் நாள் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா என்று பார்த்துள்ளோம். இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் அனைத்து மத தலைவர்களுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனை கூட்டத்தில் மத தலைவர்கள் பலர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து சமைய பெரியவர்களுடனும் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆலோசனை நடத்தினோம். அவர்கள் தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    வருகிற 14-ந் தேதி வரை 93 பள்ளிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

    ரமலான், தமிழ் புத்தாண்டு, சித்திரை மாத விழாக்களையொட்டி வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம்.

    அதே வேளையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க கோரிக்கை வைத்து இரவு 8 மணி வரை என்பதை 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்காக 2 மணி நேரம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பாக பக்தியை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா என்று பார்த்துள்ளோம். இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    பிரதமர் வேண்டுகோளின்படி புதுவையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 14-ந் தேதி வரை மெகா கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்த கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

    புதுவை பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் 93 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பொறுப்பாளர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர், இணையம் உள்ளிட்ட வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    தேவையான இடங்களில் பல்நோக்கு ஊழியர்கள், சுகாதார ஊழியர்களை நியமித்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    பாண்டி மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களால் சிதறி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களுக்காக 5-க்கும் மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் இளைப்பாறுவதுடன், கடலின் அழகையும் ரசிப்பார்கள்.

    சமீபகாலமாக பாண்டி மெரினா கடற்கரை திறந்தவெளி பாராக மாறி வருகிறது. பகல் நேரத்தில் இளைஞர்கள் மதுபாட்டில்கள் வாங்கி வந்து குடில்களில் அமர்ந்து குடிக்கின்றனர். அந்த பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். சிலர் மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களால் சிதறி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் பாண்டி மெரினா கடற்கரைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    எனவே பாண்டி மெரினா கடற்கரையில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தை போலவே புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. அதன்படி இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக இந்த குறிப்பிட்ட 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது. கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 168, காரைக்காலில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 158, காரைக்காலில் 46, ஏனாமில் 10, மாகியில் 9 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 61, காரைக்காலில் 61, ஏனாமில் ஒருவர், மாகியில் 16 பேர் என 139 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 534 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் ஆயிரத்து 52, காரைக்காலில் 413, ஏனாமில் 30, மாகியில் 55 பேர் என ஆயிரத்து 550 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரத்து 84 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 687 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுவையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தலைமை செயலர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் தமிழிசை

    கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    * திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

    * அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விழாக்கள் நடத்தும்போது அடுத்த இருக்கை காலியாக இருக்கும்படி 50 சதவீத கூட்டம் மட்டுமே இருக்க வேண்டும்.

    * கடைகள், மால்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடும் இடத்தில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    * நீச்சல் குளம் போன்ற இடங்களில் பயிற்சி பெறுவோரை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிகமாக தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

    * கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். பிரதமர் கூறியதை போல வருகிற 14-ந் தேதி வரை புதுவையில் தடுப்பூசி திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    ×