என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முகாமில் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை அறிவுறுத்தலின் பேரில் புதுவையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து ஓட்டல் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. 16-ந்தேதி வரை முகாம் நடத்தப்படுகிறது.

    இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    நாளை (சனிக்கிழமை) வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    13-ந்தேதி பாண்லே ஊழியர்கள், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே வெளி மாநிலத்தவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கினால் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் சமர்பித்தால் உணவு மற்றும் ஓட்டல் அறை வாடகையில் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக புதுவை விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    வில்லியனூர் அருகே கணவன் கண் முன்பு மனைவியை மானபங்கம் செய்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் காலனி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் நேற்று இரவு தனது மனைவி சங்கீதாவுடன் அப்பகுதியில் தனியார் மதுக்கடை அருகே உள்ள பேக்கரியில் உணவு பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் சங்கீதாவின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவும் அவரது கணவர் வீரமுத்துவும் சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் தப்பியோடி விட்டான். மற்ற 2 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுனில்பாரதி, வினோத்குமார் என்பதும், தப்பியோடியவர் உமேஷ்குமார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடி உமேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பொறையூர் காலனியை சேர்ந்த 19 வயது பெண் நேற்று மாலை அரசூர்-பெரம்பை சாலையில் உள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் தட்டச்சு பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது குடிபோதையில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
    புதுச்சேரி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய தகராறில் வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மூலக்குளம் காரை கோவிந்தன் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் அலுவலக பணியை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மூலக்குளம் தனியார் கார் ஷோரூம் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென திரும்பியதால் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேல்முருகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைத்தடுமாறி வக்கீல் வேல்முருகன் கீழே விழுந்தார். ஆனால் எதிர் திசையில் வந்த 2 பேரும் வக்கீல் வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இந்த தாக்குதலின் போது வேல்முருகன் அணிந்திருந்த கண் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    மேலும் வக்கீல் வேல்முருகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வக்கீல் வேல்முருகன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    உப்பளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த 24 தோசை கற்களை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தேர்தல் பறக்கும் படை பொறுப்பு அதிகாரி ஜம்புலிங்கம் தலைமையிலான குழுவினர் சம்பவத்தன்று தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாவீதுபேட்டை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு தோசை கற்கள் (நான்ஸ்டிக்தாவா) விநியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது தோசை கற்களுடன் நின்றுக்கொண்டிருந்த ஓரு கும்பல் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் தோசை கற்களை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதைத் தொடர்ந்து 24 தோசை கற்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதனை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தோசை கற்களை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் தேர்தல் பறக்கும்படை அதிகாரி எழில்ராஜன் தலைமையில் உப்பளம் அம்பேத்கர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அவர் சட்ட பையில் ரூ16 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்தார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது42) என்பதும், இவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் வைத்திருந்த பணத்தை ரோட்டில் வீசி விட்டு தப்பியோடினர்.

    அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் மொத்தம் ரூ.27 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மணவெளி தொகுதி தேர்தல் அதிகாரி உமாசங்கர் தலைமையில் பறக்கும்படையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னவீராம்பட்டினம் ரோடு ஓடைவெளி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த ஓடைவெளியை சேர்ந்த ஆனந்தன்(41) என்பவரை தேர்தல் பறக்கும்படையினர் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 200 டோக்கன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ஆனந்தனை அரியாங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    புதுவையில் நாள்தோறும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 293 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 181, காரைக்காலில் 87, ஏனாமில் 10, மாகியில் 15 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது 416, காரைக்காலில் 51, ஏனாமில் 17, மாகியில் 6 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 91, காரைக்காலில் 17, ஏனாமில் 2, மாகியில் 3 பேர் என 113 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 242 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 490 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 555 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 992, காரைக்காலில் 436, ஏனாமில் 21, மாகியில் 61 பேர் என ஆயிரத்து 510 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 687 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக 200 பேருக்கு தொற்று பரவிய நிலையில்  ஒரே நாளில் 293 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நாள்தோறும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை கவர்னர் தமிழிசை தகவல்

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. புதுவையில் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தில் இல்லை.

    மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுவையில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைவினை பொருட்கள் செய்வதை கவர்னர் தமிழிசை பார்வையிட்ட காட்சி

    கவர்னர் தமிழிசை இன்று புதுவை முருங்கம்பாக்கம் கைவினை நகருக்கு சென்று அங்கு கைவினை பொருட்கள் செய்வதை பார்வையிட்டார். 

    அண்டை மாநிலமான தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு வருவதை தடுக்கும் வகையில் கொரோனா வரி விதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.

    மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டது. 2 மாதங்கள் இதே நிலை நீடித்தது. மே மாத இறுதியில் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

    ஆனால், அண்டை மாநிலமான தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு வருவதை தடுக்கும் வகையில் புதிதாக கொரோனா வரி விதிக்கப்பட்டது.

    இதனால் புதுவையிலும் தமிழகத்துக்கு இணையாக மது விற்பனை செய்யப்பட்டது. புதுவையில் மட்டும் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் இந்த வரிக்கான காலம் முடிவடைந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் உடனடியாக வரியை ரத்து செய்யவில்லை.

    அதற்கு பதிலாக மறு உத்தரவு வரும்வரை கொரோனா வரி நீடிக்கும் என கலால்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கலால்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி கூடுதலாக மதுபானங்களுக்கு வசூலிக்கப்பட்ட கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எம்.ஆர்.பி. விலையில் மதுபானங்களை விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கால் புதுவையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக கலால்துறை மூலம் அதிகளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

    மதுபானங்கள்

    ஆனால், கொரோனா வரி விதிப்பால் மதுபானங்களின் விற்பனை சரிந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தாலும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் மதுபான பிரியர்களின் வருகை குறைந்தது. இதற்கு மதுபான விலை உயர்வும் காரணமாக இருந்தது.

    புதுவையில் சில மது பானங்கள், பீர் வகைகளின் விலை இருமடங்காக இருந்தது. இந்நிலையில் தற்போது பழைய விலைக்கு மதுபானங்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இது மது பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரியில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்ளிட்ட 324 பேர் போட்டியிடுகின்றனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 10 லட்சத்து 4,507 வாக்காளர்கள் வாக்களிக்க 952 பிரதான ஓட்டுச்சாவடிகள் 604 துணை ஓட்டுச்சாவடிகள் உள்பட 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    வாக்குச்சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள், பார்வையற்றோர் வாக்கு அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    வெயிலுக்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குச்சாவடிகளில் காலையிலேயே மக்கள் குவிந்தனர். இதனால் காலை 10 மணியளவில் புதுவை முழுவதும் 17 சதவீத ஓட்டுகள் பதிவானது. தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடந்தது.

    மாநிலத்தில் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். முடிவில் மாநிலம் முழுவதும் 81.64 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி சட்டசபை

    கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் 84.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலை விட தற்போது 2.44 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 81.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    * புதுச்சேரியில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    * புதுச்சேரியில் குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஜிப்மர் மருத்துவமனையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம்.

    இதற்கான தொலைபேசி எண்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே வேளையில் மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகளுக்கு எந்தவித முன்பதிவும் தேவையில்லை.

    ஒருநாளைக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, கரையாம்புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி, பாகூர் கஸ்தூரிபாய் காந்தி பெண் மேல்நிலைப்பள்ளி ஆகிய 23 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றினர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி புதுவையில் உள்ள 23 தொகுதிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் தலா ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி திருக்கனூர்பொன்நேரு மேல்நிலைப் பள்ளி, மதகடிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி, அகரம் அரசு தொடக்கப் பள்ளி, வடமங்கலம் பகவான் ஸ்ரீ ராமகிரு‌‌ஷ்ணா உயர்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை முகமதியா திருமண நிலையம், மூலக்குளம் பெத்திசெமினார் சி.பி.எஸ்.சி. பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்திரையர்பாளையம் ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர் பள்ளி, பாக்கமுடையான்பேட்டை மாவட்ட பேரிடம் மையம் கருத்தரங்க மையம், பிருந்தாவனம் சென்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை புதுச்சேரி இன்ஸ்டிடியூட் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,

    நாவற்குளம் மேதிலால்நேரு அரசு பாலிடெக்னிக் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகம், புதுவை காந்திவீதி சூர்யா இன்டர்நே‌‌ஷனல் பள்ளி, புதுவை பெருமாள் கோவில் வீதி அரசு தொடக்கப்பள்ளி, உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீடராஜப்பர் வீதி சவரிராயலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்யா நகர் ஆதித்யா வித்யா‌‌ஷ்ரம் பள்ளி, உழந்தைகீரப்பாளையம் செவன்த்டே மேல்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம் இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி, தானாம்பாளையம் ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர், கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, கரையாம்புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி, பாகூர் கஸ்தூரிபாய் காந்தி பெண் மேல்நிலைப்பள்ளி ஆகிய 23 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றினர்.
    கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கொரோனா பாதித்த நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப் போட்டனர். இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு முககவசம், சீல்ட், கையுறை வழங்கப்பட்டது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் புதுவையில் 220, காரைக்காலில் 247, மாகியில் 25, ஏனாமில் 18 என மொத்தம் 510 பேர் வாக்களித்துள்ளனர்.

    புதுவையில் நேற்று முன்தினம் நிலவரப்படி 1,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 510 பேர் மட்டுமே வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள், கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் முழு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் தான் முழு கவச உடை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கவச உடை எதுவும் வழங்கப்படவில்லை.

    இதனால் கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
    கடைசியாக தேர்தல் ஆணையம் இரவு 9.30 மணியளவில் வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், தோராயமாக 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரள சட்டசபைகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

    30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தேர்தல் களத்தில் மொத்தம் 324 வேட்பாளர்கள் நின்றாலும் பிரதான 2 கூட்டணி கட்சிகள் இடையே தான் கடும்போட்டி நிலவியது.

    கடந்த 4-ந் தேதி இரவு 7 மணியுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்தது. மாநிலம் முழுவதும் இதற்காக 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்காளர்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்ததால் பல இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கி உடல் வெப்ப பரிசோதனை செய்து கையுறைகளை தேர்தல் அலுவலர்கள் வழங்கினார்கள். அதன்பிறகே வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர். வாக்குச்சாவடி மைய நிகழ்வுகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது மகள் விஜயலட்சுமி ஆகிய இருவரும் மிஷன் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    இருசக்கர வாகனத்தில் ரங்கசாமி வந்தபோது எடுத்த படம்.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வந்து திலாசுப்பேட்டை அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை அமைதியாக விறுவிறுப்புடன் நடந்தது.

    கடைசியாக தேர்தல் ஆணையம் இரவு 9.30 மணியளவில் வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், தோராயமாக 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2-ந் தேதி வரை ஸ்டிராங் ரூமுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
    ×