search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த 24 தோசை கல் பறிமுதல்

    உப்பளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த 24 தோசை கற்களை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தேர்தல் பறக்கும் படை பொறுப்பு அதிகாரி ஜம்புலிங்கம் தலைமையிலான குழுவினர் சம்பவத்தன்று தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாவீதுபேட்டை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு தோசை கற்கள் (நான்ஸ்டிக்தாவா) விநியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது தோசை கற்களுடன் நின்றுக்கொண்டிருந்த ஓரு கும்பல் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் தோசை கற்களை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதைத் தொடர்ந்து 24 தோசை கற்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதனை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தோசை கற்களை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் தேர்தல் பறக்கும்படை அதிகாரி எழில்ராஜன் தலைமையில் உப்பளம் அம்பேத்கர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அவர் சட்ட பையில் ரூ16 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்தார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது42) என்பதும், இவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் வைத்திருந்த பணத்தை ரோட்டில் வீசி விட்டு தப்பியோடினர்.

    அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் மொத்தம் ரூ.27 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மணவெளி தொகுதி தேர்தல் அதிகாரி உமாசங்கர் தலைமையில் பறக்கும்படையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னவீராம்பட்டினம் ரோடு ஓடைவெளி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த ஓடைவெளியை சேர்ந்த ஆனந்தன்(41) என்பவரை தேர்தல் பறக்கும்படையினர் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 200 டோக்கன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ஆனந்தனை அரியாங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×