search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
    X
    புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

    சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது- புதுவையில் 82 சதவீதம் வாக்குப்பதிவு

    கடைசியாக தேர்தல் ஆணையம் இரவு 9.30 மணியளவில் வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், தோராயமாக 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரள சட்டசபைகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

    30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தேர்தல் களத்தில் மொத்தம் 324 வேட்பாளர்கள் நின்றாலும் பிரதான 2 கூட்டணி கட்சிகள் இடையே தான் கடும்போட்டி நிலவியது.

    கடந்த 4-ந் தேதி இரவு 7 மணியுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்தது. மாநிலம் முழுவதும் இதற்காக 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்காளர்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்ததால் பல இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கி உடல் வெப்ப பரிசோதனை செய்து கையுறைகளை தேர்தல் அலுவலர்கள் வழங்கினார்கள். அதன்பிறகே வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர். வாக்குச்சாவடி மைய நிகழ்வுகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது மகள் விஜயலட்சுமி ஆகிய இருவரும் மிஷன் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    இருசக்கர வாகனத்தில் ரங்கசாமி வந்தபோது எடுத்த படம்.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வந்து திலாசுப்பேட்டை அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை அமைதியாக விறுவிறுப்புடன் நடந்தது.

    கடைசியாக தேர்தல் ஆணையம் இரவு 9.30 மணியளவில் வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், தோராயமாக 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2-ந் தேதி வரை ஸ்டிராங் ரூமுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
    Next Story
    ×