search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுவையில் வேகமாக பரவுகிறது- கொரோனாவுக்கு 3 பேர் பலி

    புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 44 ஆயிரத்து 973 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து ஒற்றை இலக்கத்தை அடைந்தது.

    தற்போது கொரோனா 2-வது அலை வீச தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை 512 ஆக உயர்ந்தது. நேற்று தொற்று எண்ணிக்கை 418 ஆக இருந்தது. புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 50 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 418 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் புதுவையில் 255, காரைக்காலில் 109, ஏனாமில் 19, மாகியில் 35 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 450, காரைக்காலில் 56, ஏனாமில் 44, மாகியில் 15 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 183, காரைக்காலில் 22, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 209 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 44 ஆயிரத்து 973 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 565 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 41 ஆயிரத்து 477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் ஆயிரத்து 561, காரைக்காலில் 533, ஏனாமில் 56, மாகியில் 85 பேர் என 2 ஆயிரத்து 235 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரத்து 800 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 693 பேர் பலியாகியிருந்தனர்.

    இந்நிலையில் கதிர்காமம் மருத்துவமனையில் புதுவை தியாகராஜா வீதியை சேர்ந்த 58 வயது ஆண், ஜிப்மரில் மணவெளியை சேர்ந்த 64 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் கோட்டுச்சேரியை சேர்ந்த 81 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×