என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு மாதமாக நடமாடும் பரிசோதனை முகாம்கள் மற்றும் காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
புதுவையில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை 100 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசியை மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று வழங்க நடமாடும் தடுப்பூசி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குழுக்கள் மூலம் பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.
தற்போது புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தடுப்பூசியை வழங்க 2 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் மேலும் பல குழுக்கள் அமைக்கப்படும். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளிலும் நடமாடும் தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள ரெட்டியார்பாளையம் மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அது இன்று(திங்கட்கிழமை) வரை தொடரும். தொற்று அதிகமாக உள்ள கொசப்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை கண்காணிப்பு நடவடிக்கை நடைபெறும்.
இதேபோல் இன்று(திங்கட்கிழமை) தலைமை செயலகத்திலும், நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற வளாகத்திலும், வருகிற 21-ந் தேதி உழவர்சந்தை, தாவரவியல் பூங்காவிலும், 22-ந் தேதி தனியார் மாலிலும் சிறப்பு நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்றிலிருந்து புதுவை மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி திருவிழா என்கிற மிகப்பெரிய கொரோனா தடுப்பூ முகாம் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த திருவிழா நடைபெறுகிறது.
இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசியை எடுத்து வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் சுமார் 62 ஆயிரத்து 259 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். நேற்று மட்டும் 6 ஆயிரத்து 348 பேர் தடுப்பூசி எடுத்துள்ளனர்.
தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.

எனவே மக்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி இந்த தடுப்பூசியை எடுத்து கொள்ளலாம். இந்த தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
புதுவையில் கொரோனா பரவலின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயின் தாக்கத்தையும், தீவிரத்தையும் புதுவை மக்கள் நன்கு உணர்ந்திருந்த போதிலும் ஒரு சிலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றாமல் இன்னமும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.
இது கொரோனா தொற்று பரவலுக்கு வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகவும் அமைகிறது.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோயை நம்மிடமிருந்து முற்றிலுமாக அகற்ற முடிவும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மார்ச் 31-ந் தேதி மருத்துவமனையில் 294 பேரும் வீட்டு தனிமையில் 780 பேர் உள்பட ஆயிரத்து 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 17 நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்து 5640 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சிகிச்சை முடிந்து சென்றவர்களை தவிர்த்து தற்போது 721 பேர் மருத்துவமனையிலும் 3 ஆயிரத்து 369 பேர் வீட்டு தனிமை உள்பட 4090 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா அதிகரிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம் நீரழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
மற்றவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதே வேகத்தில் தொற்று பரவினால் இந்த மாதம் இறுதியில் மருத்துவமனையில் 3 ஆயிரம் பேரும், 6 ஆயிரம் பேர் வீடுகளிலும் இருக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்றார்போல் படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின் கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவக்கூடும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் நாளை முதல் அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும். எனவே, மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
தற்போது கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். எனவே, கொரோனா தொடர்பான சந்தேகங்கள், எங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச எண் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் கையிருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
ரெட்டியாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது55). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கணேசன் நீரழிவு நோயால் அவதியடைந்து வந்தார். இதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசன் சுயநினைவு இழந்து போனதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் சிவா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுவை பெரிய கடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணன் (வயது 48).
இவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு காணப்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை மேற் கொண்டு வருகிறார்.
இதே போலீஸ் நிலையத்தில் கடந்த 14-ந் தேதி 33 வயது போலீஸ்காரர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் பெரியகடை போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றின் 2-ம் அலையிலும், தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகழ்மிக்க கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் பார்க்கவும் அந்தந்த கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
ஆனால், உலக புகழ்மிக்க காரைக்கால் திருநள்ளாறில் உள்ள, சனீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நிறுத்தப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனை தரக்கூடியதாக உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா நிறுத்தப்பட்டது.
மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறுவதை போல், திருநள்ளாறிலும் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழாவையும் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்த வேண்டும். அதேபோல் அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 4,814 பேர் பரிசோதிக்கப்பட்டு 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மார்ச் 1-ந்தேதி ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 20 மடங்கு அதிகமாகியுள்ளது.
தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள வேண்டும். புதுவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் அலர்ஜி ஏற்படவில்லை. பயத்தை விட்டுவிட்டு தடுப்பூசி போடலாம். 5 நாட்களில் தடுப்பூசி திருவிழாவில் 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். சுகாதாரத்துறை மூலமாக 100 இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு மட்டுமில்லாமல் பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் அடையாள அட்டையுடன் வரலாம். தடுப்பூசியும் போதிய எண்ணிக்கையில் உள்ளது. இறப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
75 சதவீத கொரோனா இறப்புக்கு, தாமதமாக மருத்துவமனையில் சேர்வதுதான் முக்கியக் காரணம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்தில் இறந்துள்ளனர். அறிகுறி ஏற்பட்டும் பரிசோதிக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்ட பிறகு கடைசி நேரத்தில்தான் மருத்துவமனை வருகிறார்கள்.
கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பரிசோதியுங்கள். மக்கள் ஒத்துழைப்பு முக்கியம். குறிப்பாக தொடர் இருமல், சளி, ஜூரம் இருந்தால் உடன் பரிசோதியுங்கள். வாழ்க்கையும், வாழ்வு ஆதாரமும் முக்கியம். அதனால்தான் சமூக இடைவெளி, முககவசம், கைகழுவுதல் முக்கியம் என்று குறிப்பிடுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காரைக்கால் நேருநகர் விரிவாக்கம் முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அலமாரியில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் செல்வம் புகார் செய்தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், நகைகள் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தனிப்படையினர் காரைக்கால் நேரு நகரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்டவர், காரைக்கால் திருநகரைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 31) என்பதும், டாக்டர் வீட்டில் 50 பவுன் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருடிய நகைகளை அய்யப்பன், நாகப்பட்டினம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று 24 பவுன் நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






