என் மலர்
புதுச்சேரி
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தார். பின்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மண்ணுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தந்தவர் பாரதிதாசன். அவரின் பாடலையே என் செல்போன் அழைப்பு பாடலாக வைத்துள்ளேன்.
கொரோனாவில் இருந்து புதுவை மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வார இறுதியில் அதிக சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர். இதனால் தொற்று பரவுவதை தடுக்க வார இறுதி நாட்களில் முழு அடைப்பு அறிவித்துள்ளோம்.
புதுவை மக்களை பாதுகாக்கவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பணியில் தனியார் ஆம்புலன்ஸ் சேவையையும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிட் கேர் சென்டர்கள் தொடங்கி உள்ளோம்.
புதுவையில் ஆக்சிஜன் வசதியுடன் தேவையான படுக்கைகள் உள்ளது. பாண்லேவில் குறைந்த விலையில் முக கவசம், கிருமிநாசினி இன்று முதல் வினியோகம் செய்யப்படும். கொரோனா கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளதால் வார இறுதி கதவடைப்பு தொடங்குகிறோம்.
இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு இல்லை. சூழலை பொறுத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவையின் தேவைக்கேற்ப செயல்படுகிறோம். ஜிப்மர், தனியார் மருத்துக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு இல்லை என தகவல் கிடைத்தது.
சுகாதாரத்துறை செயலரை அழைத்து ஜிப்மர், தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடர்பு கொள்ள சொல்லியுள்ளேன். தேவையான மருந்துகள் புதுவை அரசிடம் உள்ளது. மருந்து தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மக்களுக்கு அரிசி வினியோகம் குறித்து விரைவில் முடிவெடுப்போம். மக்களின் பாதுகாப்புக்கு ஏற்ப அடுத்தகட்ட முடிவெடுப்போம்.
புதுவையில் வார நாட்களில் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான தகவல் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இந்த இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதுவையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு வெளியூர் செல்ல பஸ்நிலையத்துக்கு வந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். எனவே பஸ்நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பஸ் கிடைக்காத பயணிகள் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதேபோல் புதுவையில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளை திறந்து வைத்திருந்தவர்களை மூடும்படி அறிவுறுத்தினர்.
கடற்கரையில் சுற்றி திரிந்தவர்களை வெளியேறும்படி போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
புதுவையில் நேற்று இரவு தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் சுற்றிய நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோல் புதுவை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர். தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.
இதற்காக 100 இடங்களில் 8 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. இதில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் 80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 40 ஆயிரத்திற்கும் அதிகமாக தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தடுப்பூசிக்காக பலர் முன்பதிவு செய்து வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். புதுச்சேரியில் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்குள் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் உள்ளன. 625 ஆக்சிஜன் படுக்கைகளும், 28 வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளும் போதுமான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் சுற்றுவது தெரிய வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் கோவிட் கேர் சென்டருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை நாள்தோறும் கண்காணிக்க 500 அங்கன்வாடி ஊழியர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி சுகாதாரத்துறை ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். காலதாமதமாக வருவதால் தான் இறப்புகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.
கல்லூரி முடிந்து மதியம் 3 மணியளவில் போன் மூலம் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வில்லியனூர் அடுத்துள்ள பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ராஜஸ்ரீ பிணம் இருந்தது. உடலை போலீசார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பொறையூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது.
அவருடன் மேலும் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாணவி ராஜஸ்ரீயை அடித்து கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்றது தெரிய வந்தது.
மாணவியை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? காதல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் காரணமாக என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து மது பாட்டில்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இதனால் மது விலை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் மது விலை குறைந்துள்ளது. இதனால் அண்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மது வாங்கி செல்கிறார்கள்.
தற்போது புதுவையில் கொரோனாவின் 2-வது தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உரிமம் பெற்ற மது விற்பனையாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்களும், விற்பனையாளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சானிடைசர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க வேண்டும். அனைத்து உரிமதாரர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதனை கடை பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டசபை (தனி) தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சேதராப்பட்டு அரவிந்தர் என்ஜினீயரிங் கல்லூரி 2-வது தளத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் 3 ஷிப்ட் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6:30 மணியளவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.
இதை அறிந்த வானூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் தலைமையில் தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அனுமதி இன்றி எதற்காக 4 பேரை உள்ளே அனுமதித்தீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றுவதற்கும், கூடுதல் ஓட்டுகளை பதிவு செய்வதற்கும் இது வழிவகுக்கும்.
ஏதோ முறைகேடு நடந்து இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என சராமரியாக கேள்விகள் எழுப்பி போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அஜய் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அன்று தேர்தல் துறைக்கு பி.எஸ்.என்.எல்., மூலமாக உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இணைய இணைப்பு அமைக்க ஆய்வு செய்ய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதேபோன்று ஓட்டு எண்ணும் மையத்தில் அவர்களது ஏஜென்ட்டுகளும் அதே தகவலை தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் வி.சி.க- தி.மு.க., நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புதுவை மாநிலத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதிக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. 2-வது அலை வேகமாக பரவி வருவதே இதற்கு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 3 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 565 பேருக்கு தொற்று உறுதியானது. 336 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 48 ஆயிரத்து 336 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 843 பேர் ஆஸ்பத்திரியிலும், 3 ஆயிரத்து 849 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 4 ஆயிரத்து 692 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 42 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 31 பேரும், முன்கள பணியாளர்கள் 30 பேரும், பொதுமக்கள் 1,404 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 16-ந்தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 82 பேர் தடுப்பூசி போட்டிருந்தனர். 17-ந்தேதி 7 ஆயிரத்து 432 பேரும், 18-ந்தேதி 4 ஆயிரத்து 978 பேரும் தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சமீப காலமாக வெளிவரும் வதந்தி காரணமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 209 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமீபத்திய நாட்களில் தீவிர கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரையால் எந்தவித முன் அறிவிப்புமின்றி நேராக ஜிப்மர் கொரோனா தொற்று மருத்துவ பிரிவுக்கு வருகின்றனர். குறிப்பாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது படுக்கைகள் இல்லாதபோது தேவையற்ற காலதாமதத்திற்கும் நோயாளியின் உடல்நிலையை மேலும் மோசமாக பாதிப்பதற்கும் காரணமாகிறது.
ஆகையால் நோயாளியின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும், குறிப்பிடத்தக்க கூடுதல் நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன்கூட்டியே தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவேண்டும். தேவைப்படும் வசதிகளுடன் கூடிய படுக்கை உள்ளதா? என்பதை ஜிப்மர் உறுதிபடுத்திய பின்னரே நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நலவழித்துறை வலியுறுத்தியுள்ளது. இதை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மும்பையில் இருந்து காரைக்கால் வரை லோக்மானிய திலக் என்ற விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த ஆண்டு இந்த ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தற்போது அதை சிறப்பு ரெயிலாக இயக்க, ரெயில்வே நிர்வாகம் முன்வந்தது. அதன்படி மும்பையில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட இந்த ரெயில், நேற்று முன்தினம் இரவு காரைக்கால் வந்தடைந்தது.
மும்பை பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து வந்த 16 பயணிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவின் பேரில், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில், நோய்தடுப்பு அதிகாரி சேகர் மற்றும் சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நலவழித்துறைசார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.







