search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    ஜிப்மருக்கு முன்னறிவிப்பின்றி வரவேண்டாம்- இயக்குனர் வேண்டுகோள்

    கூடுதல் நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன்கூட்டியே தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவேண்டும் என்று ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    ஜிப்மர் இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர மற்றும் அதிதீவிர கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்தகைய நோயாளிகளுக்கு இடமளிக்க ஜிப்மர் அனைத்து முயற்சியை மேற்கொள்கிறது. அதேநேரத்தில் கொரோனா அல்லாத மற்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் முடிந்தவரை பராமரிக்க முயற்சிக்கிறது.

    கொரோனா வைரஸ்

    சமீபத்திய நாட்களில் தீவிர கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரையால் எந்தவித முன் அறிவிப்புமின்றி நேராக ஜிப்மர் கொரோனா தொற்று மருத்துவ பிரிவுக்கு வருகின்றனர். குறிப்பாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது படுக்கைகள் இல்லாதபோது தேவையற்ற காலதாமதத்திற்கும் நோயாளியின் உடல்நிலையை மேலும் மோசமாக பாதிப்பதற்கும் காரணமாகிறது.

    ஆகையால் நோயாளியின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும், குறிப்பிடத்தக்க கூடுதல் நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன்கூட்டியே தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவேண்டும். தேவைப்படும் வசதிகளுடன் கூடிய படுக்கை உள்ளதா? என்பதை ஜிப்மர் உறுதிபடுத்திய பின்னரே நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றம் செய்யவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×