என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது43). கார் டிரைவர். இவரது மனைவி சந்திரகுமாரி (35). இவர்களுக்கு பவானி (15) என்ற மகளும், தார்கேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் சந்திரகுமாரியின் அண்ணன் சந்திரசேகரின் குழந்தைக்கு மயிலத்தில் காதணிவிழா நடந்தது. இதற்காக தனசேகர், சந்திரகுமாரி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல சந்திரசேகர் நேற்று மாலை 3 மணி அளவில் லாஸ்பேட்டைக்கு வந்தார்.
அப்போது சந்திரசேகரிடம், தனசேகர், சந்திரகுமாரி ஆகியார் குழந்தைகளை அழைத்து செல்லும்படியும், தாங்கள் பின்னால் வருவதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு சந்திரசேகர் மயிலத்துக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் தனசேகரும், சந்திரகுமாரியும் வரவில்லை.
இதற்கிடையே விழா முடிந்தவுடன் சந்திரசேகர் மீண்டும் குழந்தைகளை தனசேகர் வீட்டில் விடுவதற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சந்திரசேகர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனசேகர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரின் காலுக்கு அடியில் சந்திரகுமாரி பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சந்திரகுமாரியின் கழுத்தில் சில காயங்கள் காணப்பட்டன. எனவே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனசேகர், சந்திரகுமாரியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம். அதேசமயம், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கல்லூரி மாணவி கொலையில் காதலன் தம்பி கைது செய்யப்பட்டார்.
புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தைபுதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பேட் சுடுகாட்டில் மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது.
மாணவி கொலை தொடர்பாக அவரது காதலன் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷை (19) போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருந்ததாவது:-
நான் ராஜஸ்ரீயை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். கடந்த ஒரு வாரமாக அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவர் வேறு ஒரு வாலிபருடன் பேசி வருவதாக சந்தேகம் அடைந்தேன்.
எனவே ராஜஸ்ரீயை நேரில் சந்தித்து பேச வருமாறு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். அதன்படி ராஜஸ்ரீ பொறையூர் பேட் பகுதிக்கு வந்தார். அங்கு எனது தம்பியுடன் நான் காத்து இருந்தேன்.
ராஜஸ்ரீ அங்கு வந்ததும் அவரை மோட்டார் சைக்கிளில் சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டேன்.
அப்போது அவர் கல்லூரியில் நண்பர் ஒருவருடன் பேசி வருவதாக தெரிவித்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் பீர்பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் ராஜஸ்ரீயை தாக்கினேன்.
இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் எனது தம்பி உதவியுடன் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி விட்டு வந்து விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதிஷின் தம்பியையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுவர் என்பதால் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட உள்ளார்.
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் இயங்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக பெரிய மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. பூக்களின் நேற்றைய நிலவரம் (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
மல்லிகை ஒரு கிலோ ரூ.200 (ரூ.300), முல்லை ரூ.180 (ரூ.280), கனகாம்பரம் ரூ.800 (ரூ.1400), பன்னீர் ரோஜா ரூ.160 (ரூ.220), வாடாமல்லி ரூ.80 (ரூ.200), சாமந்தி ரூ.140 (ரூ.320), கோழிக்கொண்டை ரூ.20 (ரூ.60) அரளி ரூ.60 (ரூ.210) என விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை கடுமையாக சரிந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழக பகுதியான விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் பூக்கள் வருகிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடந்த வாரம் பூக்களின் விலை அதிகரித்தது. தற்போது ஊரடங்கு காரணமாக பூக்கள் விலை அதிரடியாக சரிந்து வருகிறது என தெரிவித்தனர்.
புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி விடுமுறை நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுபான கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுபார்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அமர்ந்து மது அருந்தலாம். மொத்த, சில்லரை மதுபான கடைகளை இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் மதுவாங்க வருபவர்களும், கடைக்காரர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடையை நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், வாடிக்கையாளர்களை வரிசையாக ஒழுங்குபடுத்த தடுப்புகளை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முகக்கவசம் அணியாவிட்டால் மது கிடையாது, முகக்கவசம் அணியாமல் கடைக்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு மதுக்கடையின் முகப்பிலும் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடைகள், தொழில் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சார்பு செயலாளர் ஜெய்சங்கர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
*அனைத்து குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் வரவேண்டும்.
*சார்பு செயலாளர்கள், அதற்கு இணையானவர்கள், துறைத்தலைவர்கள், அலுவலக தலைவர்கள், இதர நிர்வாக தலைவர்கள் கண்டிப்பாக அலுவலகம் வரவேண்டும்.
*குரூப் பி மற்றும் குரூப் சி அலுவலர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வரவேண்டும்.
*50 சதவீதம் என்பது அத்தியாவசிய தேவை துறைகள், வருவாய்த்துறை மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொருந்தாது.
*அதேபோல் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் 50 சதவீதம் என்பது பொருந்தாது. அவர்கள் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும்.
*இந்த உத்தரவுகள் அனைத்தும் வருகிற 30-ந்தேதி வரையிலோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு சளி, மூச்சு திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 41 கைதிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 31 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 10 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தை கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயிர்க்கொல்லி கொரோனா பெருந் தொற்றின் 2-வது அலையால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு வரலாறு காணாத வகையில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுவையிலும் 19 நாட்களில் 25 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவைஅரசும், கவர்னரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஒரு வார காலம் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு அதற்கு முன்பு மக்களின் வறுமையை போக்க ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் மற்றும் 30 கிலோ அரிசியும் வழங்க வேண்டும்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த செலுத்தும் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்படும் சந்தேகங்களை போக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
திருக்கனூர்:
புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தை புதுக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக தனது தாயிடம் கூறி சென்றார்.
கல்லூரி முடிந்து மதியம் 3 மணியளவில் ராஜஸ்ரீ போன் மூலம் தனது தாயிடம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் ராஜஸ்ரீ வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வில்லியனூர் அடுத்துள்ள பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் மாணவி ராஜஸ்ரீ பிணம் இருந்தது. உடலை போலீசார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-
ராஜஸ்ரீ மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் போது பொறையூர் காலனியை சேர்ந்த பிரதீஷ் (18) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ராஜஸ்ரீயை பிரதீஷ் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே ராஜஸ்ரீ வேறு ஒரு வாலிபரை காதலித்து வருவதாக ஏற்கனவே காதலித்து வந்த பிரதீசுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து சந்தேகத்தை தீர்க்க அந்த வாலிபர் நேற்று ராஜஸ்ரீயை போனில் தொடர்பு கொண்டு அழைத்தார்.
இதனை ஏற்று ராஜஸ்ரீ நேற்று மாலை பொறையூர் காலனிக்கு சென்றுள்ளார். ராஜஸ்ரீயை பிரதீஷ் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது ராஜஸ்ரீயிடம் என்னை கைவிட்டு விட்டு வேறு ஒரு வாலிபரை காதலிக்கிறாயா? என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீஷ் அங்கு கிடந்த சவுக்கு கட்டையால் ராஜஸ்ரீயை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பிரதீசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வாலிபருடன் அவரது நண்பர்களும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதீசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது ஜிப்மரில் கெரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், ஜிப்மரில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக கிடைக்கவில்லை. இந்த மருந்தை வெளியில் வாங்கி வரும்படி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
வெளிச்சந்தையிலும் இந்த மருந்து கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜிப்மரில் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருவதால் தமிழக மற்றும் புதுவை அரசுகள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை திருமண மண்டப உரிமையாளர் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன், பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலெக்டர் பூர்வா கார்க்கிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்.
அதேசமயம் திருமண மண்டபங்களை ஏற்கனவே முன் பதிவு செய்தவர்கள் 50 சதவீத நபர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கி றோம். ஏனெனில் திருமண மண்டபங்கள் 3, 4 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து அழைப்பிதழ் அச்சடித்து, உணவு தயாரிப்பவர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் ஆயிரம் பேருக்கு குறைவின்றி உணவு தயாரிக்க சொல்லிவிட்டு அவ்வளவு விருந்தினர்களையும் பங்கேற்க அழைப்பும் விடுத்துள்ளனர். இதுபோன்ற நிலையில் அரசு திடீரென திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
இது திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் குடும்பத்தினருக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள திருமணங்களுக்கு மட்டுமாவது 50 சதவீத நபர்களுடன் திருமண நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






