என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு தட்சணாமூர்த்தி நகரில் பள்ளி வாசல் உள்ளது. நேற்று மாலை இந்த பள்ளி வாசலில் அதேபகுதியை சேர்ந்த சாகுல்அமீது (வயது56) மற்றும் ஜமாத்தார்கள் அரசு விதிகளை பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்த பிரான்சிஸ் (26) மற்றும் அணைக்கரை வீதியை சேர்ந்த அருண்குமார் (38) ஆகியோர் பள்ளி வாசலில் அத்துமீறி நுழைந்து மது குடிப்பதற்காக பாட்டிலில் தண்ணீர் பிடித்தனர். இதனை சாகுல்அமீது மற்றும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ், அருண்குமார் ஆகியோர் சாகுல்அமீதையும் மற்ற 2 பேரையும் தாக்கினார் கள். மேலும் பள்ளி வாசலை இடித்து விடுவோம் என்றும் ஒவ்வொருவரின் தலையை வெட்டி வீசிவிடுவோம் என்று மிரட்டினர்.
அதோடு பள்ளி வாசல் எதிரே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு சேதப் படுத்திவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து சாகுல்அமீது கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரான்சிஸ், அருண்குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
நாள் தோறும் 700-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று 899 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் கதிர் காமம், ஜிப்மர், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
தொற்று பரவலை தடுக்க முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கு கடந்த 20-ந் தேதி முதல் அமலானது. ஆனாலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை 55 மணி நேர தொடர் முழு ஊரடங்கு தொடங்கியது.
இதனால் நேற்று புதுவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மருந்தகம், பால், மளிகை, காய்கறி, ஓட்டல், டீக்கடைகள், மற்றும் மார்க்கெட்டுகள் திறந்து இருந்தது.
வணிக, வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்காக புதுவையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் புதுவையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தியேட்டர்கள், மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.
ஒரு சில தெருக்களில் மட்டும் சிறிய கடைகள் திறந்து இருந்தது. தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டதால் தமிழக அரசு பஸ்கள் இன்று புதுவைக்கு வரவில்லை. தனியார் பஸ்களும் இன்று இயங்கவில்லை.
புதுவை அரசு சார்பில் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும் என புதுவை போக்குவரத்து துறை ஆணையர் அறிவித்து இருந்தார். அதன்படி ஒரு சில புதுவை சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் பயணிகள் கூட்டம் இல்லை.
புதுவையில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் 90 சதவீத மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுவை- தமிழக எல்லைகளான கனகசெட்டிக்குளம், கோரிமேடு, மதகடிப்பட்டு, திருக்கனூர், கன்னியக்கோவில் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
வெளியூர்களில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
புதுவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வார நாட்களில் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 2 நாள் ஊரடங்கை தொடர்ந்து நாளை முதல் ½ நாள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாளை மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அனைத்து கடைகளும் புதுவையில் அடைக்கப்பட்டு பகல் நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்தவர் பிலீப் (வயது40). இவரது அக்காள் விக்டோரியா (48).
பிலீப் வீட்டின் முதல் மாடியிலும் அவரது அக்காள் விக்டோரியா தாய்-தந்தையுடன் வீட்டின் தரைதளத்தில் வசித்து வந்தார். விக்டோரியா திருமணம் செய்து கொள்ளாமல் வயதான தனது பெற்றோரை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விக்டோரியாவின் தந்தையும், பிப்ரவரி மாதம் தாயும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். பெற்றோர் அடுத்தடுத்து இறந்து போனதால் விக்டோரியா சோகத்துடன் இருந்து வந்தார். அவருக்கு பிலீப் ஆறுதல் கூறி வந்தார். எனினும் விக்டோரியா தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை.
எனவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உறவினர்களிடம் அடிக்கடி கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வரை விக்டோரியா தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாததால் மாடியில் வசித்த அவரது சகோதரர் பிலீப் சந்தேகமடைந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தனது அக்காள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ஓட்டலில் தங்கியிருந்த சென்னை தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது55). இவர் ஆர்த்தோபடிக் மருத்துவத்துக்கு தேவையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்னர்.
ஜெகநாதன் தொழில் சம்பந்தமாக புதுவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகநாதன் புதுவை அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து மருந்து பொருட்கள் விற்பது தொடர்பாக விற்பனை பிரதிநிதிகளுடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் ஓட்டலில் தங்கியிருந்த ஜெகநாதன் நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெகநாதன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் சத்யபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
எனவே பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தக் கூடாது. எந்த நோக்கத்திற்காகவும் மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்த கூடாது என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ அனைத்து மேல் நிலைப்பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக தேர்வுத்துறை இயக்குனரின் அறிவுறுத்தலின்படி மே 5-ந்தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த தமிழக கல்வி வாரியத்தின் கீழ பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு தமிழக கல்வி வாரிய இயக்குனரால் தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்.
பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.
பிளஸ்-2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிக்கு வர அறிவுறுத்தக் கூடாது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வரும் நிலையில் பள்ளிகளில் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்த கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக்கூடாது.
இவற்றை மிகவும் கண்டிப்பபாக கடை பிடிக்க வேண்டும். இது தொடர்பான விதி மீறல் மற்றும் புகார்கள் தீவிரமாக பார்க்கப்படும். விதி மீறல்களுக்கு குறிப்பிட்ட பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஆனால் ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. புதுவை நகரின் பிரதான சாலைகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் இரவு 11 மணி வரை திறந்தே இருந்தன. அதேபோல் நகரில் நள்ளிரவு வரை வாகனங்கள் வழக்கம்போல் வலம் வந்தன. பொதுமக்களும் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். போலீசாரின் கெடுபிடி குறைந்ததால் இந்த ஊரடங்கு பிசுபிசுத்தது. இதனால் அரசு அறிவித்த ஊரடங்கு கேள்விக்குறியானது.
இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்தனர். மேலும் மதுபிரியர்களும் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை மக்கள் உணர்ந்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாம் தப்பிக்க அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் துலுக்கானத்தம்மன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் பாரதி வீதி - கீரக்கடை சந்திப்பில் அழகு நிலையம் (சலூன்) நடத்தி வருகிறார். இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக சலூன் கடையில் இருந்து வந்தார்.
இவர் தினமும் கடையில் இருக்கும் போது செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருப்பார். இதனை அவரது தந்தை சுந்தரமூர்த்தி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை நேரத்தில் பாலாஜி செல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை சுந்தரமூர்த்தி கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.
தந்தை திட்டியதால் விரக்தி அடைந்த பாலாஜி செல்போனை கடையில் வைத்து விட்டு கடையில் இருந்து வெளியேறினார்.
மகன் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதி சுந்தரமூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது பாலாஜி வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பாலாஜி இல்லை. இதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தி தனது மகன் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாலாஜியை தேடி வருகிறார்கள்.
ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.
* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (23-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.
பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.
விடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.
விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.
விடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
அத்துடன் உணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.
அதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்த கைதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில் சுழற்சி முறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடங்கியுள்ளன. மக்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலர் ஏற்கனவே தாங்கள் செய்து வந்த தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடையே பணப்புழக்கமும் குறைந்துள்ளது.
கொரோனாவினால் புதுவையில் தையல் தொழில் செய்வோர், இசைக் கலைஞர்கள் என பலரும் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர். இதற்கான மாற்று வழி என்ன என்பது குறித்து யோசித்த இளைஞர்கள் சிலர் புதுவை கிராமப்புறம் மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து நுங்கு வாங்கி வந்து ரெட்டியார்பாளையம் சாலையோரம் குவித்து விற்பனை செய்கின்றனர். தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பலரும் குளுமை தரும் நுங்கு போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைப்பதால் அதைக்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.






