என் மலர்
செய்திகள்

செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் வாலிபர் மாயம்
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் துலுக்கானத்தம்மன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் பாரதி வீதி - கீரக்கடை சந்திப்பில் அழகு நிலையம் (சலூன்) நடத்தி வருகிறார். இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக சலூன் கடையில் இருந்து வந்தார்.
இவர் தினமும் கடையில் இருக்கும் போது செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருப்பார். இதனை அவரது தந்தை சுந்தரமூர்த்தி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை நேரத்தில் பாலாஜி செல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை சுந்தரமூர்த்தி கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.
தந்தை திட்டியதால் விரக்தி அடைந்த பாலாஜி செல்போனை கடையில் வைத்து விட்டு கடையில் இருந்து வெளியேறினார்.
மகன் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதி சுந்தரமூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது பாலாஜி வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பாலாஜி இல்லை. இதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தி தனது மகன் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாலாஜியை தேடி வருகிறார்கள்.






