search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம்

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.

    இதற்காக 100 இடங்களில் 8 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. இதில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் 80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    தடுப்பூசியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 40 ஆயிரத்திற்கும் அதிகமாக தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தடுப்பூசிக்காக பலர் முன்பதிவு செய்து வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். புதுச்சேரியில் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்குள் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் உள்ளன. 625 ஆக்சிஜன் படுக்கைகளும், 28 வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளும் போதுமான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் சுற்றுவது தெரிய வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் கோவிட் கேர் சென்டருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை நாள்தோறும் கண்காணிக்க 500 அங்கன்வாடி ஊழியர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி சுகாதாரத்துறை ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். காலதாமதமாக வருவதால் தான் இறப்புகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×