search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துவையில் பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி.
    X
    துவையில் பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி.

    புதுவையில் இரவு நேர ஊரடங்கு அமல்- பஸ்கள் கிடைக்காமல் தவித்த பயணிகள்

    ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். எனவே பஸ்நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இந்த இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    புதுவையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு வெளியூர் செல்ல பஸ்நிலையத்துக்கு வந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். எனவே பஸ்நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து பஸ் கிடைக்காத பயணிகள் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல் புதுவையில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளை திறந்து வைத்திருந்தவர்களை மூடும்படி அறிவுறுத்தினர்.

    கடற்கரையில் சுற்றி திரிந்தவர்களை வெளியேறும்படி போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

    புதுவையில் நேற்று இரவு தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இரவு நேரத்தில் சுற்றிய நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் புதுவை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர். தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.



    Next Story
    ×