என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் தமிழிசையிடம் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • வேலை வாய்ப்பு மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர் நல சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நிர்வாகிகள் சதீஷ் சந்துரு, செந்தில் வேல் ஆகியோர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டிற்கு என்று தனியாக விளையாட்டுத்துறை அமைப்பது, விளையாட்டு வீரர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பது, சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு வளர்ச்சி ஆணையம் என்பதை தடை செய்ய வேண்டும்.

    புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டுப் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    பல வருடங்களாக கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் விளையாட்டு கவுன்சிலில் முறைகேடு செய்தது மற்றும் எம்.எஸ்.பி. சான்றிதழ் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் மேற்படிப்பு ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், கோரிமேடு போலீஸ் விளையாட்டரங்கம், லாஸ்பேட் ஹெலி பேடு மைதானம் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

    அனைத்து தொகுதிகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தியும், விளையாட்டு வீரர்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை, ஓய்வூதியம், இலவச இன்சூரன்ஸ், இலவச பஸ் பாஸ், இலவச விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை நேரடியாக வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை இது குறித்து பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

    • அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
    • குறுகிய சாலையின் காரணமாக ஒரு வாகனம் எதிரே வந்தால் மறு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ளது மண்ணாடிப்பட்டு கிராமம் புதுச்சேரி பகுதியான செல்லிப்பட்டு, சோரப்பட்டு மற்றும் பி.எஸ். பாளையம் பகுதிகளில் இருந்து தமிழகப் பகுதியான விழுப்புரம் செல்வதற்கு திருக்கனூர் கடைவீதி வழியாகவும் செல்லலாம்.

    அதே நேரத்தில் மண்ணாடிப்பட்டில் இருந்து மதுரப்பாக்கம் வழியாகவும் விழுப்புரம் செல்லலாம் .

    மண்ணாடிப்பட்டு - மதுரப்பாக்கம் இடையேயான சாலை வழியினை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலமாக சுமார் 5 கிலோமீட்டர் அளவிற்கு மிச்சமாவதுடன் பயண நேரமும் குறைகிறது.இந்த சாலை சிலரின் ஆக்கிரமிப்பின் காரணமாக குறுகிவிட்டது.

    இந்த சாலையின் வழியாக ஏராளமான கண்டெய்னர் லாரிகள், பள்ளி வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவை செல்கின்றன.

    குறுகிய சாலையின் காரணமாக ஒரு வாகனம் எதிரே வந்தால் மறு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதனால் வாகனங்கள் அடிக்கடி தலை குப்புற கவிழ்ந்து விழுவதும், விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

    இது குறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக கவனித்து சாலையினை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மண்ணாடிப்பட்டு சமூக ஆர்வலர் ரமேஷ் கூறியதாவது:-

    மண்ணாடிப்பட்டு - மதுரப்பாக்கம் இடையேயான சாலை திருவண்ணாமலை பாதை என கூறப்படுகிறது. புதுச்சேரி பகுதியான மண்ணாடிப்பட்டு வரை 33 அடி அகலமான சாலை காணப்படுகிறது.

    அதிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் அளவில் உள்ள தமிழக சாலை ஆக்கிரமிப்பின் காரணமாக சுருங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி இந்த சாலையினை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி தமிழகப் பகுதி இடையே புதிய சாலை வசதி ஏற்படுவதுடன் இப்பகுதி மக்களுடைய வாழ்வா தாரமும் உயர்வடையும்.

    இரு மாநில அரசுகளும் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளியில் தூய்மை இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பள்ளியின் 9,10 மற்றும் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணி கொம்பாக்கம் திருவள்ளுவர் நகர், அரவிந்தர் வீதி, ஒட்டம்பாளயைம் சாலை, வில்லியனூர் முதன்மைச் சாலை வழியாக பள்ளியைச் சென்றடைந்தது அப்பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் மாணவ-மாணவர்களுக்கு தூய்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு , சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தூய்மை விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார். 

    • சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
    • ரோட்டரி கிளப் சென்னையின் (வடக்கு) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை (வடக்கு) ரோட்டரி கிளப் சார்பில் ஆசான் விருது வழங்கும் விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலை வர் முரளிதரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை தவளக்குப்பம், நேஷனல் உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகி டாக்டர் கிரண்குமாரின் சிறப்பான கல்வி சேவையை பாராட்டி ஆசான் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    விழாவில் ரோட்டரி கிளப் சென்னையின் (வடக்கு) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
    • அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

    டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

    மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத் திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    அதோடு டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.

    டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.

    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 5ஆக உயர்ந்துள்ளது.

    இதனால், கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதன் எதிரொலியால், கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாஹேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    மேலும், புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாஹேயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வையாபுரி மணிகண்டன் அறிக்கை
    • பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    சமீப நாட்களாக சில மணி நேரங்கள் பெய்த மழையினால் திறந்த வெளிகளில், காலி மனைகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது.

    இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், பெண்களை இந்த காய்ச்சல் அதிகளவு தாக்குகிறது. புதுவை சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் 2 அப்பாவி பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியு ள்ளனர். இதற்கு சுகாதார த்துறையும், அரசும்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டெங்கு பாதித்து பலியான பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இனியும் காலம் கடத்தாமல் போர்க்கால அடிப்படையில் மாநிலத்தில் எங்கும் மழைநீர் தேங்கா தவாறு உரிய நடவடி க்கைகளை மேற்கொள்ள அரசு எந்திரம் முடுக்கிவிட வேண்டும். முத்தியால்பேட்டை உட்பட அனைத்து தொகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

    பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டு பலியான பெண்கள் வசித்த பகுதிகள் மட்டுமின்றி, காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • வில்லியனூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர்- பத்துக்கண்ணு செல்லும் சாலையில் உள்ள மூர்த்தி நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி யின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு எதிரே தனியார் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் அங்கு மதுபான கடை திறக்க மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்து இறக்கினர்.

    மதுக்கடை இன்னும் ஓரிருநாளில் திறக்கப்படும் என தெரிய வரவே மூர்த்தி நகர் பொதுமக்கள் மற்றும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள ரெயில்வே பாதை அருகே நடந்த மறியல் போராட்டத்தால் வில்லியனூரில் இருந்து பத்துக்கண்ணு செல்லும் வாகனங்களும் அதுபோல் பத்துகண்ணிலிருந்து வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் 2 மணிநேரம் வெளி நடப்பு போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கையை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து 2 மணி நேர வெளி நடப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு சார்பில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை அரசு ஆணைப்படி பணி கட்டமைப்பு நியமன விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஊதியக்குழு சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும்.

    என்.எச்.எம். ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கை வலியுறுத்தி புதுவையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் 2 மணிநேரம் வெளி நடப்பு போராட்டம் நடத்தினர்.

    புதுவை அரசு பொது மருத்துவமனை, காசநோய் மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கண்டன உரையாற்றினார். சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பின் சங்க பொறுப்பாளர்கள் பாக்கியவதி, சாந்தி, சாகிராபானு, முருகையன், வேல்முருகன், லட்சுமி, இளங்கோ, விஜயமுருகன், தனசேகரன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    தேசிய சுகாதார இயக்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் நந்தகுமார், முருகானந்தம், தனலட்சுமி உட்பட அனைத்து பிரிவு தொழில்நுட்ப, அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    மத்திய கூட்டமைப்பு செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார். செவிலியர், மருந்தாளுனர், கிராமப்புற செவிலியர், வார்டு அட்டெண்டர், சானிடரி உதவியாளர், கண் பரிசோதனை ஊழியர் உட்பட அனைத்து பிரிவு பணியாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 2 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.

    வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் மற்றும் ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து 2 மணி நேர வெளி நடப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வந்த வெளிப்புற நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    • சபாநாயகரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
    • கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவல கத்துக்கு தினந்தோறும் சிலர் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போல வெளியில் காட்டிக்கொள்கின்றனர்.

    அதன்மூலம் கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    எனவே இத்தகைய நபர்களை இனம்கண்டு அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க க்கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் புரோ க்கர்கள் இருப்பதாகவும், கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாகவும் ஏற்கனவே முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை
    • கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதை இளைஞர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. 10 ஆண்டாக படித்த தகுதியான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.

    புதுவையில் பலர் ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தர அரசு நடவடிக்கை எடுக்காமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவது இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை கெடுக்கும்.

    என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு இதனை தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கி வருகிறது. ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • போக்குவரத்து விதி மீறியதாக குறிப்பிட்ட தொகையை அபராதம் எனக்கூறி கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர்.
    • தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரருடன் சேர்ந்து வெளி நாட்டுக்காரரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவல்துறையில் பணிபுரியும் போலீசார், ஊர்க்காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். அப்போது பணம் இல்லாதவர்களிடம் கூகுள் பே செயலி மூலம் அபராதம் வசூலிக்கின்றனர். இந்த பணத்தை காவல்துறையின் கணக்கிற்கு அவர்கள் கொண்டுசெல்வது கிடையாது.

    தங்கள் உறவினர்கள், நண்பர்களின் எண்ணில் கூகுள்பே செலுத்தும்படி கூறி பணத்தை அபகரித்து வருகின்றனர். இவ்வாறு பணத்தை சுருட்டிய சிலர் மீது துறைரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் இதுபோல் மோசடி நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே சிலர் அவ்வழியே வந்த வெளிநாட்டுக்காரர் வாகனத்தை மடக்கி போலீஸ் எனக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது அவரிடம் போக்குவரத்து விதி மீறியதாக குறிப்பிட்ட தொகையை அபராதம் எனக்கூறி கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர்.

    மறுநாள் அவர் தெரிந்தவர்கள் மூலம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.

    அவர் பணம் அனுப்பி செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த நபர் கருவடிக்குப்பத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரருடன் சேர்ந்து வெளி நாட்டுக்காரரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார், ஊர்க்காவல் படை வீரர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×