என் மலர்
புதுச்சேரி

புதுவை அரசு ஆஸ்பத்திரி முன்பு சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
சுகாதாரத்துறை ஊழியர்கள் 2 மணிநேர வெளிநடப்பு போராட்டம்
- ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் 2 மணிநேரம் வெளி நடப்பு போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கையை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து 2 மணி நேர வெளி நடப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு சார்பில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
5 ஆண்டுக்கு ஒரு முறை அரசு ஆணைப்படி பணி கட்டமைப்பு நியமன விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஊதியக்குழு சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும்.
என்.எச்.எம். ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கை வலியுறுத்தி புதுவையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் 2 மணிநேரம் வெளி நடப்பு போராட்டம் நடத்தினர்.
புதுவை அரசு பொது மருத்துவமனை, காசநோய் மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மத்திய கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கண்டன உரையாற்றினார். சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பின் சங்க பொறுப்பாளர்கள் பாக்கியவதி, சாந்தி, சாகிராபானு, முருகையன், வேல்முருகன், லட்சுமி, இளங்கோ, விஜயமுருகன், தனசேகரன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.
தேசிய சுகாதார இயக்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் நந்தகுமார், முருகானந்தம், தனலட்சுமி உட்பட அனைத்து பிரிவு தொழில்நுட்ப, அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய கூட்டமைப்பு செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார். செவிலியர், மருந்தாளுனர், கிராமப்புற செவிலியர், வார்டு அட்டெண்டர், சானிடரி உதவியாளர், கண் பரிசோதனை ஊழியர் உட்பட அனைத்து பிரிவு பணியாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 2 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.
வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் மற்றும் ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து 2 மணி நேர வெளி நடப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
இதனால் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வந்த வெளிப்புற நோயாளிகள் அவதி அடைந்தனர்.






