என் மலர்tooltip icon

    விருதுநகர்

    துலுக்கப்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், வச்சக்காரபட்டி, முக்கு ரோடு, ஆவுடையாபுரம், 

    மேலச்சின்னையாபுரம், வாடியூர், சங்கரலிங்காபுரம், கன்னிசேரி, முத்துலிங்காபுரம், குமாரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
    செவல்பட்டியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
    சிவகாசி:

    சிவகாசி மின்வாரிய அதிகாரி முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சுற்றுச்சூழல் மாசு தான் கொரோனா பரவ காரணமாக இருந்தது என நீதிபதி ஜோதிமணி கூறினார்.
    சிவகாசி:

    சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில் கிராமப்புற தொழில் முனைவோர் சுவச்சிதா கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். பேராசிரியை சைலஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினரை நுண்ணுயிரியல்துறை தலைவர் ரஞ்சனி அறிமுகம் செய்து வைத்தார். இதில் நீதிபதி ஜோதி மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் பல இடங்களில் சுற்றுச்சூழல் மாசு உள்ளது.

    பொதுசுகாதாரம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் தான் கொரோனா பரவல் வேகமாக இருந்தது.

    ஆனால் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முடிந்த வரை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும்.

    கடந்த காலங்களில் ஒரு சராசரி மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தான். ஆனால் தற்போது 40 வயதுக்குள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

    இதற்கு உணவு பழக்கத்தை மாற்றியது தான் காரணம். இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும்.

    வேதிப்பொருட்கள் உள்ள உணவுகளால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இந்தநிகழ்ச்சியில் சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவிபேராசிரியர் பவித்ரா நன்றி கூறினார். இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கலப்பட மருத்துவ முறையை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என இந்திய மருத்துவ சங்கமும், பல் மருத்துவர் சங்கமும் வலியுறுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை என்ற முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு என்ற பெயரில் கலப்பட மருத்துவ முறையினை உருவாக்க சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

    மேலும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ கல்வியில் பக்கவாட்டு நுழைவு நடை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த முயற்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆங்கில மருத்துவ முறையை மேற்கத்திய மருத்துவ முறை மற்றும் கிறிஸ்தவ மருத்துவ முறை என்ற தவறான நம்பிக்கை ஆட்சியாளரிடம் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமுறைகள் ்இருக்கின்றன என்று கூறிக்கொண்டே காலாவதியான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வழக்கொழிந்த மருத்துவமுறைகளை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு அதை அமல்படுத்த முயற்சிப்பது சரியல்ல.

    மேலும் ஆயுர்வேத மருத்துவ முறையில் பக்கவிளைவில்லாதது, நவீன மருத்துவம், பக்கவிளைவை உள்ளது என்றெல்லாம் கூறப்படும் நிலையில் தற்போது அதனை பின்பற்ற முயற்சிப்பது ஏன் என்று தெரியவில்லை.

    எனவே மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன அறிவியல் மருத்துவ முறைப்படி அறுவை சிகிச்சைகளை செய்ய அனுமதிக்கும் அறிவிப்பை ரத்து செய்யவும் கலப்பட மருத்துவ முறையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களை கலைக்கவும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மருத்துவக் கல்வியில் பக்கவாட்டுநுழைவு நடைமுறையை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விருதுநகர் மாவட்ட மருத்துவர் மற்றும் பல்மருத்துவர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தினை தென் மண்டல துணைத்தலைவர் டாக்டர் தனபால் தொடங்கி வைத்தார். டாக்டர் போஸ், டாக்டர் ஜவகர் லால், டாக்டர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இப்போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். முடிவில் வெங்கடசுப்ரமணியன் நன்றி கூறினார். போராட்டத்தில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    சாத்தூர் அருகே தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றிலும் மானாவாரி விவசாயம் பகுதியாகவே அதிகம் உள்ளது. இந்த பகுதியில் கம்பு, சோளம், மக்காச்சோளம், மல்லி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயறு வகைகள் முதலான மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அறுவடை செய்த விவசாய பயிர்களை உலர்த்துவதற்கு உரிய இடமின்றி விவசாயிகள் அனைவரும் சாலையில் போட்டு உலர்த்தி வருகின்றனர்.

    இதனால் போக்குவரத்திற்கு இடைறு ஏற்படுவதுடன், தூசிகள் அதிக அளவு பறப்பதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தானியங்களை உலர்த்தும் வகையில் உலர் களம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் எண்ணற்ற விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் விளையும் தானியங்களை உலர வைக்க உலர்களம் இல்லை. ஆதலால் தானியங்களை சாலைகளில் கொட்டி உலரவைக்க வேண்டிய நிலைமை உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், நாங்களும் அவதிப்பட கூட கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சோளம், கம்பு, மக்காச்சோளம், பயறு உள்ளிட்டவற்றை உலர்த்துவதற்கு உலர்த்தும் களம் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அச்சங்குளம் பட்டாசு ஆலையில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகி விட்டனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை, சிவகாசி, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் மாலா, ராஜம்மாள் ஆகிய 2 பெண்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தரரெட்டி, வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்த ரேசன் ஆகியோர் தனித்தனியாக விபத்து நடந்த பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரி சுந்தரேசன் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் 14 அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. 24 அறைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

    கட்டிட சிதறல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசு நிறுவன பெயர்களுடன் லேபிள்கள் கிடந்தன. எனவே அங்கு 4 அல்லது 5 நிறுவன பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்திருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மேலும் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதியியல் மாதிரியை சேகரித்துள்ளோம். அதனை ஆய்வு செய்த பிறகுதான் தடை செய்யப்பட்ட வேதிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என தெரியவரும். தற்போது ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
    வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் கனகவேல்ராஜன் (வயது 41). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் கணேசமூர்த்தி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் நாகராஜன் (27) என்பவர் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்துவிட்டு வெளிநாட்டில் 2 வருடம் வேலை செய்து விட்டு சிவகாசி திரும்பினார். பின்னர் மீண்டும் துபாய் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சிவகாசி திரும்பினார். இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலடிபட்டி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 70), நாராயணன் (64). இவர்கள் இருவரும் சமையல் வேலைக்காக அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கல்குறிச்சி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாஸ்கரன் மற்றும் நாராயணன் தூக்கி வீசப்பட்டனர். நாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாஸ்கரன் படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    ஊராட்சி மன்ற தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். என்.முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர்.

    இவர் நேற்று தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சில தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை பலியானோர் எண்ணிக்கை 19-ஆக இருந்தது.

    இந்நிலையில், நேற்று சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த வனராஜ் (52), மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 20- ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30-க்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு பலத்த தீக்காயம் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புஎண்ணிக்கை 16,606 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புஎண்ணிக்கை 16,606 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 114 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,612 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,351 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 30 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2,200 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை சிறுமி பறிகொடுத்துள்ளார். துக்கம் தாங்காமல் அவள் கதறியதால் ஆஸ்பத்திரியே சோகமயமாகியது.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோரும் உயிரிழந்தனர்.

    அந்த தம்பதியினர் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். தனித்தனி அறைகளில் வேலை செய்தனர்.

    முதலில் வெடி விபத்து ஏற்பட்ட அறையில்தான் செல்வி பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த பாக்கியராஜ், தனது மனைவியை பார்க்க அவர் பணியாற்றிய அறையை நோக்கி ஓடி வந்துள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த மற்றொரு பட்டாசு அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் சிக்கிய பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதற்கிடையே அவருடைய மனைவி செல்வியும் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பாக்கியராஜை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் செல்வி சிவகாசி அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரும் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த தகவல்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    பாக்கியராஜ், செல்வி தம்பதிக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கழித்துதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு நந்தினி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற்போது நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    ஒரே நாளில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி நந்தினி, துக்கம் தாங்காமல் கதறினாள். நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவளிடம் உறவினர்கள் ஆறுதலாக பேசியும் அவளை தேற்ற முடியவில்லை. சிறுமியின் கதறல் ஆஸ்பத்திரியில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. ஆஸ்பத்திரியையே சோகமயமாக்கியது.

    பிரேத பரிசோதனை முடிந்து செல்வியின் உடலை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்திலேயே சிறுமி நந்தினியும் அழைத்துச் செல்லப்பட்டாள்.
    ×