என் மலர்
செய்திகள்

சாலையில் கேழ்வரகினை உலர்த்தும் பணியில் ஒரு பெண் ஈடுபட்டுள்ள காட்சி.
சாத்தூர் அருகே தானியங்களை காய வைக்க உலர்களம் வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
சாத்தூர் அருகே தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தை சுற்றிலும் மானாவாரி விவசாயம் பகுதியாகவே அதிகம் உள்ளது. இந்த பகுதியில் கம்பு, சோளம், மக்காச்சோளம், மல்லி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயறு வகைகள் முதலான மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அறுவடை செய்த விவசாய பயிர்களை உலர்த்துவதற்கு உரிய இடமின்றி விவசாயிகள் அனைவரும் சாலையில் போட்டு உலர்த்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்திற்கு இடைறு ஏற்படுவதுடன், தூசிகள் அதிக அளவு பறப்பதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தானியங்களை உலர்த்தும் வகையில் உலர் களம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் எண்ணற்ற விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் விளையும் தானியங்களை உலர வைக்க உலர்களம் இல்லை. ஆதலால் தானியங்களை சாலைகளில் கொட்டி உலரவைக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், நாங்களும் அவதிப்பட கூட கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சோளம், கம்பு, மக்காச்சோளம், பயறு உள்ளிட்டவற்றை உலர்த்துவதற்கு உலர்த்தும் களம் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






