search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலை வளாகத்தில் அறைகள் தரைமட்டமானது
    X
    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலை வளாகத்தில் அறைகள் தரைமட்டமானது

    பட்டாசு ஆலையில் அதிக பணியாளர்கள் வேலை செய்தது விபத்துக்கு காரணமா?- அதிகாரி ஆய்வு

    அச்சங்குளம் பட்டாசு ஆலையில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகி விட்டனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை, சிவகாசி, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் மாலா, ராஜம்மாள் ஆகிய 2 பெண்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தரரெட்டி, வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்த ரேசன் ஆகியோர் தனித்தனியாக விபத்து நடந்த பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரி சுந்தரேசன் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் 14 அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. 24 அறைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

    கட்டிட சிதறல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசு நிறுவன பெயர்களுடன் லேபிள்கள் கிடந்தன. எனவே அங்கு 4 அல்லது 5 நிறுவன பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்திருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மேலும் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதியியல் மாதிரியை சேகரித்துள்ளோம். அதனை ஆய்வு செய்த பிறகுதான் தடை செய்யப்பட்ட வேதிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என தெரியவரும். தற்போது ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
    Next Story
    ×