என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருப்பையா(வயது 40). விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த அஜய் (15) என்ற சிறுவனும் நேற்று முன்தினம் இரவு உலக்குடியில் இருந்து பனைக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலை இலுப்பைக்குளத்தில் இருந்து பனைக்குடி செல்லும் சாலையில் சொக்காயி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே உவர்குளம் கிராமத்தை சேர்ந்த செந்தாமரை கண்ணன்(31) வந்த மோட்டார் சைக்கிளும், இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுரேசும், அஜய்யும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த செந்தாமரைக்கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 59). இவர் ரெயில்வே பீடர் சாலையில் லாரி செட் நடத்தி வந்தார்.
இங்கு ஏராளமான லோடு மேன்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 10.30 மணி அளவில் பால்பாண்டி தனது மகன் கருணை ஆனந்தம் (21) மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
லாரி செட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரெங்கநாதன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது அங்கு இருளில் மறைந்திருந்த 2 பேர் ஆயுதங்களுடன் வெளிபட்டனர். அவர்கள் திடீரென பால்பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் கருணை ஆனந்தம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கொலை நடந்த பகுதி முக்கியமான ரெயில்வே பீடர் ரோடு என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இரவு நேர ரெயில்களில் பயணம் செய்ய வந்தவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கொலை குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பால்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது மகன் கருணை ஆனந்தம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் பால்பாண்டி லாரி செட்டில் பணியாற்றி அவரால் நீக்கப்பட்ட 2 லோடுமேன்கள்தான் கொலையாளிகள் என தெரியவந்தது. அவர்களது பெயர் விருதுநகர் பாண்டி நகர் மணிகண்டன் (35), அல்லம்பட்டி அனுமன்நகர் சூசைமனுவேல்(41) என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-
பால்பாண்டி லாரி செட்டில் மணிகண்டன் மற்றும் சூசை மனுவேல் வேலை பார்த்தபோது மூடைகளை கொக்கி மூலம் சேதப்படுத்தி உள்ளனர். இவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதால் 2 பேரையும் பால்பாண்டி வேலையில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு அவர்கள் பல்வேறு லாரி செட்டுகளுக்கு வேலை கேட்டு சென்றனர். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பால் பாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அவர் வந்த போது வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய மணிகண்டன், சூசை மனு வேலை கைது செய்தனர். அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராஜபாளையம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 6-வது மைல் நீர்தேக்கம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் அய்யனார் கோவில் ஆற்றிற்கு வரும். பின்னர் அங்கிருந்து உந்துதல் குழாய் மூலம் 6-வது மைல் நீர்தேக்கத்திற்கு வருகிறது. இதையடுத்து சுத்திகரிப்பு மையத்திற்கு செல்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராஜபாளையம் நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீரின் சுவை மாறியுள்ளது. அதற்கு காரணம் குடிநீரில் ஆழ்துளை கிணற்றில் இருந்து உப்பு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் பராமரிப்பு பணியான கல் மற்றும் மண் மாற்றும் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பழைய மணலையும், கல்லையும் முழுவதுமாக எடுத்துவிட்டு புதிய கல் மற்றும் மணலை மாற்ற வேண்டும். அப்போது தான் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆதலால் இந்த பணியை நகராட்சி நிர்வாகம் உடனே தொடங்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆழ்துளை கிணற்றில் உப்பு தண்ணீர் கலக்காமல் வினியோகம் செய்தால் குடிநீரின் பழைய சுவை ராஜபாளையம் மக்களுக்கு கிடைக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு பாண்டியன் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாலினி.
கோவில் திருவிழாவின் போது இரவில் திருநாவுக்கரசு பாண்டியன் தனது சகோதரர் ராஜப்பனுடன் (23) மது அருந்தி உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவரை மாலினி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் திருநாவுக்கரசு பாண்டியன் மனைவி மாலினியை தாக்கி விட்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.
இதற்கிடையில் ராஜப்பன் அங்கு வந்து அண்ணியிடம் தகராறு குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அண்ணனை பார்ப்பதற்காக அறைக்கு சென்றார்.
அங்கு திருநாவுக்கரசு பாண்டியன் தூக்கில் தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் திருநாவுக்கரசு பாண்டியன் இறந்து விட்டார்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சந்தனசுந்தரராஜ் (வயது 52). அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினார். அப்போது காவி உடை அணிந்து சாமியார்போல் வந்த ஒருவர் தனக்கும் மது தருமாறு கேட்டார். ஆனால் சந்தனசுந்தரராஜ் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாமியார் கையில் வைத்திருந்த பிளேடால் தாக்கியதில் சந்தனசுந்தர ராஜூக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் கணேசன் (45) என்பதும், கரூரைச் சேர்ந்த இவர் சாமியார் உடையில் ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருவதும் தெரியவந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஏ.லெட்சுமியாபுரம் ரிசர்வ் லைன் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி வெங்கடேஷ்வரி, மகள் முத்துலட்சுமி (8), மகன் முனிபாண்டி (7).
இன்று காலை 9 மணிக்கு முருகன் குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர்கள் சிவகாசி டவுன் பகுதிக்கு செல்ல திட்டமிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் முருகன், அவரது மனைவி வெங்கடேஷ்வரி, மகள் முத்துலட்சுமி, மகன் முனிபாண்டி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ்நாத்தும் காயமடைந்தார்.
விபத்தை கண்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து சாலையில் கிடந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறுமி முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டாள்.
மற்ற 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகன் பரிதாபமாக இறந்தார். வெங்கடேஷ்வரி, முனிபாண்டி, ஹரீஷ்நாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்த ஹரீஷ்நாத் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள அக்கறைப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வீடுகளில் சோதனை நடத்தினார்.
அப்போது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் (வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் படந்தால் சந்திப்பில் சாத்தூர் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்தில் வைத்து கிராம மக்கள் உதவியுடன் காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரில் வந்தவரை பிடித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்திய கார் டிரைவர் வெள்ளையாபுரத்தை சேர்ந்த கமலகண்ணன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குலாப் புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
திடீரென மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்து. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, ராமசாமிபுரம், காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விருதுநகர் ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் வாருகால் நிறைந்து மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கி நின்றது.
இதன் காரணமாக பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். இதனால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






