என் மலர்
விருதுநகர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது. இதில் தி.மு.க. இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாநகராட்சி சிவகாசி.
முதன்முறையாக மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு இங்கு உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடந்துள்ளது. சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 2 நகராட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது தான் சிவகாசி மாநகராட்சி.
பட்டாசு, தீப்பெட்டி, அச்சகத்திற்கு புகழ்பெற்ற சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றிருந்தன. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வசிக்கும் திருத்தங்கல் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது.
எனவே அ.தி.மு.க. இங்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க., - அ.தி.மு.க 32 வார்டுகளில் நேரடியாக போட்டியிட்டன. முதல் முறையாக மாநகராட்சியாக சிவகாசி தேர்தலை சந்தித்ததால் இதில் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தி.மு.க., - அ.தி.மு.க இடையே கடும் பலப்பரீட்சை நடைபெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது இதனை பலரும் காண முடிந்தது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அ.தி.மு.க. 11 இடங்களிலும் 4 இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சியை தி.மு.க. வசம் சென்றுள்ளது. இந்த மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதைபோல் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் சுகுணாதேவி (வயது 52) போட்டியிட்டார். இவருடைய கணவர் நாகராஜன் (57). இவர் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தனது வார்டில் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுகுணாதேவி, தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இதனால் மனவருத்தம் அடைந்த அவருடைய கணவர் நாகராஜன், தனது வீட்டுக்கு சென்று திடீரென விஷம் குடித்தார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார், நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, காங்கிரஸ் -8, அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
ராஜபாளையம்:
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மத அரசியலை வைத்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. தந்திர அரசியல் மற்றும் பண அரசியலையும், பய அரசியலையும், பிண அரசியலையும் கலந்து பா.ஜ.க. அரசியல் நடத்தி வருகிறது.
கர்நாடக பா.ஜ.க. நடத்தி வரும் பணம் மற்றும் பிண அரசியலை தமிழக தலைமையும் நடத்தி வருகிறது. அனைத்து கட்சிகளும் இதை சவாலாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியலை முறியடிக்க வேண்டும்.
மேலூரில் உள்ளாட்சி தேர்தலின் போது ஹிஜாப் அணிந்த பெண்ணை கழற்றும்படி கூறிய பா.ஜ.க. முகவர் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.2 லட்சம் தருவதாக கூறி அதை கழற்ற செய்ய ஏற்பாடு செய்யுமாறு பா.ஜ.க. பிரமுகர் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை பா.ஜ.க. நிர்ணயம் செய்வது அழகல்ல. பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பா.ஜ.க. முகவர் சொன்னது தவறில்லை சரிதான் என்று கூறியுள்ளார். நாகரீகமான அரசியல் சூழ்நிலையில் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது அவருக்கு அழகல்ல.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும். உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை விரட்டுவது ஒன்றே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. வீழ்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நகர தலைவர் சங்கர்கணேஷ், மூத்த தலைவர் எஸ்.ஆர். பீமராஜா உள்பட பலர் இருந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைத்து எண்ணப்படட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் வ. புதுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வைத்து எண்ணப்பட்டது.
அங்கு இன்று காலை வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.இதில் முதலில் தபால் ஓட்டுக்களை என்ன அதிகாரிகள் தயாரானார்கள்.
இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி வாக்கு எண்ணும் அதிகாரிகள் மேஜைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை திறந்து வாக்குகளை மேஜையில் கூட்டுவதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர்.
அப்போது தபால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி கிடைக்கவில்லை. அது யாரிடம் இருக்கிறது என்பது தெரியவில்லை. பலரிடம் விசாரித்த போதும் அந்த பெட்டிக்கான சாவி எங்கே இருக்கிறது என தெரிய வில்லை. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டை உடைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டியின் பூட்டு உடைக்கும் பணி தொடங்கியது. அதற்கான கருவிகள் வர வழைக்கப்பட்டு பூட்டு அறுத்து எடுக்கப்பட்டது.
அதன் பிறகு தபால் வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டன. தொடர்ந்து அதனை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். பூட்டு உடைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சம்பவத்தால் கிருஷ்ணன்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை காணப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் சகஜ நிலை திரும்பியது.






