என் மலர்
தமிழ்நாடு

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்- மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
ராஜபாளையம்:
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மத அரசியலை வைத்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. தந்திர அரசியல் மற்றும் பண அரசியலையும், பய அரசியலையும், பிண அரசியலையும் கலந்து பா.ஜ.க. அரசியல் நடத்தி வருகிறது.
கர்நாடக பா.ஜ.க. நடத்தி வரும் பணம் மற்றும் பிண அரசியலை தமிழக தலைமையும் நடத்தி வருகிறது. அனைத்து கட்சிகளும் இதை சவாலாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியலை முறியடிக்க வேண்டும்.
மேலூரில் உள்ளாட்சி தேர்தலின் போது ஹிஜாப் அணிந்த பெண்ணை கழற்றும்படி கூறிய பா.ஜ.க. முகவர் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.2 லட்சம் தருவதாக கூறி அதை கழற்ற செய்ய ஏற்பாடு செய்யுமாறு பா.ஜ.க. பிரமுகர் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை பா.ஜ.க. நிர்ணயம் செய்வது அழகல்ல. பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பா.ஜ.க. முகவர் சொன்னது தவறில்லை சரிதான் என்று கூறியுள்ளார். நாகரீகமான அரசியல் சூழ்நிலையில் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது அவருக்கு அழகல்ல.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும். உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை விரட்டுவது ஒன்றே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. வீழ்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நகர தலைவர் சங்கர்கணேஷ், மூத்த தலைவர் எஸ்.ஆர். பீமராஜா உள்பட பலர் இருந்தனர்.