என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
    ராஜபாளையம்


    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அதே பகுதியில் கறிக்கோழி கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலா (வயது 45). கறிக்கடையில் கணவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கலா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து கருணாகரன் சேத்தூர் புறக்காவல்  நிலையத்தில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் பி.ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர்  கார்த்திக் (22). தனியார் நிறுவன ஊழியரான இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் சங்கர் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்  முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    அருப்புக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலியை திருடியர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பாலையம்பட்டி


    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். 

    கோவில் அர்ச்சகர் பாலமுருகன் நேற்று வழக்கமான பூஜைகளை நடத்தினார். பின்னர் இரவில் அவர் கோவில் கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டார்.  இன்று காலை பாலமுருகன் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது காம்பவுண்டு கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது.  எனவே யாரோ மர்ம மனிதர்கள் கோவிலுக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. 

    இதுகுறித்து அர்ச்சகர் பாலமுருகன் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதன்பிறகு கோவில் நிர்வாகி முத்துக்கனி சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். கோவிலின் பீரோவில் இருந்த 1Ñ கிராம் தங்கத்தாலி, வெள்ளி கண்மலர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். 

    அதன் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பதிவுத்துறை தலைவர் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை என்று புகார் எழுந்தது. 

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திர பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.

    ஆனால் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சார்பதிவாளர் சரோஜா கிரைய பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் பத்திரப்பதிவு துறை தலைவரின் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் சரோஜாவை சஸ்பெண்டு செய்து மதுரை பத்திரப்பதிவு துறை துணைத்தலைவர் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார். 

    பத்திரப்பதிவுகளை கண்காணிக்க தவறிய மாவட்ட பதிவாளர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.
    ராஜபாளையத்தில் கிணற்றில் மூதாட்டி பிணமாக மிதந்தார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம்  சிங்கராஜாகோட்டை பெரியதெருவை சேர்ந்தவர் நாராயணராஜா. இவரது மனைவி ராமம்மாள்(வயது 82).  இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராமம்மாள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். 

    நேற்று மதியஉணவு சாப்பிட்டபிறகு வீட்டில் இருந்து வெளியேசென்ற மூதாட்டி நீண்டநேரமாகியும்  வீடுதிரும்பவில்லை.  உறவினர்கள் பலஇடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றி தகவல் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ராமம்மாள் பிணமாக மிதப்பதை பேரன் பார்த்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டனர்.  அவர் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. 

    இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை மண்வெட்டியால் தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள பாவாலி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது மகன்கள் லெக்கன் (வயது 30), அழகு முனீஸ்வரன் (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்து விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்தனர்.

    நேற்று ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் இருவரும் அதே ஊரில் நடந்த விசே‌ஷத்தில் பங்கேற்க சென்று விட்டனர். இதனால் நேற்று இரவு அண்ணன்-தம்பியான அழகு முனீஸ்வரன் மற்றும்  லெக்கன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. போதையில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகு முனீஸ்வரன் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அண்ணன் லெக்கனை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்த லெக்கனை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லெக்கன் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து அவரது தாய் பாக்கியம் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு முனீஸ்வரனை கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை மண்வெட்டியால் தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சுரங்கத்தின் குழியில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இப்பூங்கா உதவி புரியும்
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.  

    இந்த சுற்றுச்சூழல் பூங்கா, நீர்நிலைப்பாதை, வறண்ட நிலத்தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல்பூங்கா, புல்வெளி மற்றும் கல்பூங்கா  என  பிரிக்கப்பட்டு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் சுரங்கத்தில் உள்ள தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா (Rockery Garden), நடைபாதை, 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் (மியாவாக்கி)   ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய மண்ணின் மரங்களான வேம்பு, புங்கம், அரசு, அத்தி, ஆலமரம். வாகை, நாவல், வில்வம், விலா, இலந்தை, மகிழம், நீர்மருது, கோனவேல், செம்மரம், மஞ்சநெத்தி, நொச்சி, ஆவாரை போன்றவைகளும், வறட்சி மற்றும் நீரில் வாழும் நாட்டு மரங்களான கருவேலம், வெல்வேலம், குடைவேல் போன்ற மரங்களையும், சுமார் 200 இனங்களைக் கொண்ட மர வகைகள், புதர் செடி, கொடி வகைகள், கள்ளி, கற்றாழை, நித்ய கல்யாணி, கற்பூரவள்ளி, தூதுவளை, கரிசிலாங்கன்னி, புல் போன்ற தாவரங்களும் இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 2.50 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் புதர்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 

    இப்பூங்காவை பார்வையிடும் மாணவர்கள் / பொதுமக்களுக்கு தாவரங்களின் தன்மைகள், நாட்டு மரங்களின் பெருமைகள், தாதுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,  பாறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும்,  சுரங்கத்தை மறுசீரமைப்பதால் பறவைகள், சிறிய விலங்குகள், வண்டினம், பூச்சிகள், தேனீக்கள், பட்டாம்பூச்சி, எறும்பு, கரையான் போன்றவை எவ்வாறு வந்தடைகின்றன என்பதையும், அதன்மூலம் சுற்றுச்சூழல் எவ்வாறு மேம்படுகிறது, இது விவசாயப் பெருமக்களுக்கு எப்படி உதவிகரமாக இருக்கிறது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள இயலும். 
     
    மேலும், மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சுரங்கத்தின் குழியில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்கள், உள்ளூர் தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரங்கள் தயாரிப்பது பற்றிய விவரங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும் இப்பூங்கா உதவி புரியும். 2023-ஆம் ஆண்டு முடிவில் 5 இலட்சம் நாட்டு மரக்கன்றுகள் 400 ஏக்கர் பரப்பளவில் நட திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், ஜி.அசோகன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, பி.வி. நிர்மலா வெங்கட்ராமராஜா, பி.வி. அபினவ் ராமசுப்பிரமணியராஜா, தலைமை செயல் அலுவலர் ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ராஜபாளையத்தில் சமையல் செய்தபோது தீ பிடித்ததால் பெயிண்டர் பலியானார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40), பெயிண்டர். 

    இவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில்  குளிக்க செல்வதற்கு முன்பு தனது உடலில் ஒட்டியிருந்த பெயிண்டை அகற்றுவதற்காக தின்னரை  தேய்த்தார். 

    பின்னர் ராமகிருஷ்ணன் அப்படியே எழுந்து சென்று கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ அவர் மேல் பற்றியது. உடலில் தின்னர் தடவி இருந்ததால் வேகமாக தீ பரவியது. அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் ராமகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக மதுரை  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மைத்துனர் சரவணக்குமார் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை. செய்து கொண்டார். மேலும் 2 பேரும் சாவு.
    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே உள்ள புலிப்பாறைபட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவரது முதல் மனைவி பிரிந்துவிட்ட நிலையில் 2வதாக வைரம் என்பவரை திருமணம் செய்தார். அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த சங்கர் விஷம் குடித்து மயங்கினார். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் ராமர் (44). கிட்னி அறுவை சிகிச்சை செய்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் காப்பாற்றிய நிலையில் 3 மாதத்துக்கு முன்பு மீண்டும் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு மனைவி கோமதியுடன் தனது சகோதரி வீட்டில் ராமர் தங்கினார். இரவில் திடீரென அவரை காணாததால் கோமதி வெளியே வந்து பார்த்தபோது ராமர் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கோமதி கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல்லை சேர்ந்த சரவணக்குமார் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கேபிள் வயர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியில் 750 அடி கேபிள் வயர் திருடுபோனது.  

    இதுகுறித்து ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேபிள் வயரை திருடிய மத்தியசேணையை சேர்ந்த ஜெயசூர்யா (25), வெள்ளைச்சாமி(22), பெருமாள்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுசென்னல்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 32). பண பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த சித்ரா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண், உரக்கடை மேலாளர் பலியானார்கள்.
    ராஜபாளையம், 

    ராஜபாளையம் அருகே உள்ள சட்டிக்கிணறு என்ற திருவேங்கடபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது65). இவர் ராஜபாளையத்தில் உள்ள வேட்டை வெங்கடேஷபெருமாள் கோவிலில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணவிழாவில் மகள் வெங்கடேஷ்வரியுடன் கலந்துவிட்டு நேற்று மதியம் மொபெட்டில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். 

    சத்திரபட்டி ரோடு சமுசிகாபுரம் ஊரணி பஸ்ஸ்டாப் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் மொபட்டில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ்வரி தலையின் பின்பகுதியில் அடிபட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  அதிராஷ்டவசமாக பெருமாள்சாமி உயிர் தப்பினார்.

    இது குறித்து பெருமாள்சாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வடக்கு தேவதானத்தை சேர்ந்த அரசுபஸ் டிரைவர் வரதராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (49). ராஜபாளையத்தில் உள்ள உரக்கடையில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அவர் வழக்கம் போல கடைக்கு செல்வதற்காக அதே ஊரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    ராஜபாளையம்-தென்காசி ரோடு ஓட்டல் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. இதில் பின்புறம் உட்கார்ந்திருந்த கோபாலகிருஷ்ணன் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.

    தகவல் கிடைத்தவுடன் தெற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்கை அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர் மாவட்டத்தில் தாய், மகளை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 36). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் கஜலட்சுமி(10). நேற்று விருதுநகரில் உள்ள தெப்பக்குளத்தில் மகாலட்சுமி  தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  

    இதுகுறித்து மகாலட்சுமியின் தாயார் ஜான்சிராணி விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளின் கணவர் பழனிவேல் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். 

    மேலும் மகளின் நடத்தையிலும் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு சமரசம் பேசினர்.  ஆனாலும் பழனிவேல் தொடர்ந்து பிரச்சினை செய்ததோடு, தனது மகள் முன்பு மனைவியிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார்.  இதனால் ஏற்பட்ட விரக்தியில் மகாலட்சுமி தனது மகளுடன் தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.  

    இதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பழனிவேலை கைது செய்தனர்.
    ×