என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையத்தை முதன்மை நகராட்சியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும் என்று ராம்கோ சேர்மன் வலியறுத்தினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க கூட்ட அரங்கத்தில் ராஜபாளையம் தொழில்வர்த்தக சங்கம் மற்றும் ராஜபாளையம் பருத்தி, பஞ்சு மார்க்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. 

    ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப்  சேர்மனுமான ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை வகித்தார். பருத்தி பஞ்சு மார்க்கெட் சங்க தலைவர் கஜபதிராஜா முன்னிலை வகித்தார்.  ராஜ பாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன்,   நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா, துணை தலைவர் கல்பனா குழந்தை வேல், ஷியாம்ராஜா உள்ளிட்ட அனைத்து  நகர்மன்ற உறுப்பினர்களும் பாராட்டி  கவுரவிக்கப்பட்ட னர்.

    விழாவில் ராம்கோ குரூப்சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பேசுகையில், மாநிலத்தின் முதன்மை நகராட்சியாக ராஜபாளையம் நகராட்சியை  மாற்ற எம்.எல்.ஏ.,  நகர்மன்ற சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ராம்கோகுரூப் சேர்மனால் அனைவரும் பாராட்டுபெற்று  அவரது கையால் பரிசு வாங்குவது மிகப்பெரிய கவுரவம் ஆகும்.  இதனை மிகப்பெரிய ஊக்கமாக எடுத்துக்கொண்டு நகராட்சி  சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் தங்களுக்கு  கிடைத்திருப்பது பதவி என்று கருதாமல் பொறுப்பு என உணர்ந்து செயல்பட்டு பொது மக்களிடம் நற்பெயர்களும் பாராட்டுக்களும் வாங்க வேண்டும்.  

    வரும்  சட்டமன்ற தொடரில்  ராஜபாளையம், மண்ணின் மைந்தர் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் திருவுருவ படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறக்க வலியுறுத்த உள்ளேன் என்றார். 

    இந்த நிகழ்வில் தி.மு.க. நகர பொறுப்பாளர் (வடக்கு) மணிகண்டராஜா, சங்க நிர்வாகிகள், வியாபார பெருமக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.
    ராஜபாளையத்தில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.
    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது. 

    கியாஸ் சிலிண்டரை பிணம் போல பாடைகட்டி தூக்கியும், ஆட்டோவை கயிறுகட்டி இழுத்தும், ஒப்பாரி வைத்து, சங்குஊதி, நூதன போராட்டம் நடத்தினர்.

    நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் தலைவர் சரவணன், ஜனநாயக மாதர்சங்க தலைவி லீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தியாகிகள் தினவிழா நடந்தது.
    சிவகாசி

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தியாகிகள்தினம் அனுசரிக்கப்பட்டது. 

    தமிழியல் துறை உதவி பேராசிரியை சங்கர், “சிவகாசி தியாகிகள் தினம்“ என்ற தலைப்பில் பேசினார்.  அவர் பேசுகையில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாகிகளின் கருத்துக்களை மாணவர்கள் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும் என்றார். 

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தேவி நன்றி கூறினார். இதில் 139 மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் செய்திருந்தார்.
    சாத்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பூக்குழி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சாத்தூரில் முக்கிய வீதிகளில் 7 நாட்களாக சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடை பெற்றது.

    பக்தர்கள் 1008 பால்குடம் மற்றும் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். பங்குனி பொங்களின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த பூக்குழி திருவிழாவில் திருநங்கைகள் உள்பட சுமார் 480 பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக இருந்த பூக்குழியில் இறங்கிநேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  சில பக்தர்கள் அலகு குத்தியபடி பூக்குழி இறங்கினர்.

    பூக்குழி திருவிழாவை சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிவகாசியில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் ராம்ஆதி. இவர் திருத்தணியில் பலகார கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். 

    இவர் ஊருக்கு வரும்போதெல்லாம் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியிடம பழகி உள்ளார். அப்போது காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி சம்பவத்தன்று ராம்ஆதியுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

    பின்னர் ராம்ஆதி அருகில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. பின்னர் திருத்தணிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு ராம்ஆதிக்கு ஏற்கனவே திருமணமாகி  குழந்தைகள் இருப்பது சிறுமிக்கு தெரியவந்தது.

    இருப்பினும் ராம்ஆதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் நடவடிக்கை பிடிக்காததால் சிறுமி ஊர் திரும்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம்ஆதி சிறுமி குறித்து இணையத்தில்  அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகார் செய்தார். அவர்கள் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.  இதன் அடிப்படையில் போக்சோ, குழந்தை திருமணம் ஆகிய பிரிவுகளின் கீழ் ராம்ஆதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி 7-ந்தேதி தொடங்குகிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு  குழுமத்தால் சார்பு ஆய்வாளர் காலி பணிஇடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

    கல்வித்தகுதி  பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும்.  வயது உச்சவரம்பு 30 (வயது தளர்வு உண்டு). ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022. இது குறித்து மேலும் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இந்த  தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக 7.4.2022 முதல் நேரடி பயிற்சி நடைபெற இருக்கிறது. மேற்காணும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் https://t.me/vnrstudycircle  என்ற டெலிகிராம் மூல மாகவோ, onlineclassvnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது-, மூக்கு, -தொண்டை நல மருத்துவர், கண்பார்வை நல மருத்துவர், ஆர்த்தோ மருத்துவர் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்தனர். 

    இதில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்குதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல், ஸ்மார்ட் கார்டு பதிவு செய்தல், புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு புதிய உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு பதிவு செய்தல் போன்ற அனைத்து உதவிகளும் துறைகள் மூலம் வழங்கப்பட்டன. 

    இதில் 167 மாற்றுத்திறன் குழந்தைகளும், பெற்றோரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாவட்ட திட்ட அலுவலர்  ஜோதிமணி ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகு திருநாவுக்கரசு, மாடசாமி, மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமுத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வழிகாட்டலின்படி முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்,  ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர்.
    ராஜபாளையத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா நடந்தது.
    ராஜபாளையம்


    யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஷத்திரிய ராஜூக்கள் சமூகம் சார்பில் கொண்டாடப்பட்டது. பழையபாளையம் ராஜூக்கள் சாவடி முன்புள்ள மைதானத்தில் செண்டை மேளம் முழங்க மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏ.கே.டி. தர்மராஜா சிலைக்கு மாலை அணிவித்தனர். 

    ராஜூக்கள் இளைஞர் சங்க தலைவர் பி.வி.ரமேஷ் ராஜா தலைமையில் இளைஞர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    பின்னர் திருவனந்தபுரம் தெரு கோட்டை மைதானத்தில் உள்ள முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜா சிலைக்கு 4 கோட்டை மகாசபை தலைவர் ஜெகநாத ராஜா தலைமையில் யுகாதி விழா கமிட்டி  ராஜு, முருகேசன், பிரபாகரன், சரவணன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    பஸ் அதிபர் கே.எஸ்.ரங்கசாமி ராஜா, சுதந்திர போராட்ட தியாகி அரங்கசாமி ராஜா, ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிக திட்டம் தயாரித்தல் குறித்த கருத்தரங்கு நடந்தது.

    சிவகாசி

    சிவகாசி  காளீஸ்வரி கல்லூரியின்  தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ணிஞிமிமி-பிஹிஙி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வணிக திட்டம் தயாரித்தல்” குறித்த  கருத் தரங்கை நடத்தியது. முதல்வர் கிருஷ்ணமுர்த்தி தலைமை தாங்கினார். 

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  மேலாண்மை துறை உதவி பேராசிரியர் கே.என்.மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

    அவர்   பேசுகையில், வணிக திட்டம் ஒரு வணிக யோசனையின்படி செல்லுபடியாகும். எதிர்காலத்துக்கான  சாலை வரைபடத்தை வலுவாகவும், தெளிவாகவும் உருவாக்க முடியும். வணிக நிதியியல் மற்றும் சந்தையில் உள்ள போட்டியை பற்றிய அதிக புரிதலை அளிக்க முடியும் என்றார்.

    மேலும் அவர், வணிக திட்டத்தை தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கியதுடன், மாணவர்களின் சொந்த வணிக திட்டத்தை தயாரிப்பதற்கு  பயிற்சி அளித்து  ஊக்கப்படுத்தினார். மாணவி தனவர்ஷினி வரவேற்றார்.  மாணவி ஆர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மாணவி காயத்ரி நன்றி கூறினார். 

    இந்த கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்த 92 மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் ஏற்பாடு செய்தார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கில துறை ஆய்வு மன்றமான “மினர்வா” சார்பில் “பாப்சி சித்வாவின் புதினம் வாட்டர்&ல் பெண்மை மற்றும் அடிபணிதல் பற்றிய கருத்துக்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஆங்கில துறை தலைவர் பெமினா தலைமை தாங்கினார். 

    முனைவர் பரிதா பேகம் தலைப்பு கண்ணோட்டம் வழங்கினார்.   உதவி பேராசிரியை அழகம்மாள், “பாப்சி சித்வாவின் புதினம் வாட்டர்” புதினத்தில் சுதந் திர இந்தியாவின் முந்தைய கால பெண்களின் அடிமைப் படுத்துதல் என்ற தலைப்பில் பேசினார். 

    முன்னதாக முனைவர் நாகஜோதி வரவேற்றார். உதவி பேராசிரியை கொண்டம்மாள் நன்றி கூறினார்.
    விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் 4 பேருடன் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலிலும், பள்ளி மாணவிகள் 4 பேர் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டு இருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, முதலமைச்சர் உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

    அவர்களிடம் கடந்த 29-ந்தேதி முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குக்கு தேவையான தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாட்சி நகரில் உள்ள ஹரிஹரனின் மருந்து குடோனுக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர். அங்கு ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது ஆகியோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் படுக்கை அறைகள், நவீன குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளும் அங்கு இருந்ததாகவும், அவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் அதே வேளையில், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களான பள்ளி மாணவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதற்காக விருதுநகர் சூலக்கரை சிறுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து சிறுவர்களான 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூர்நோக்கு இல்ல காப்பாளர் மற்றும் சமூக நல குழு உறுப்பினர் முன்னிலையில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதையடுத்து மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 4 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஜ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாணவர்களுக்கு உள்ள தொடர்பு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்களா? வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் 4 பேருடன் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதனடிப்படையில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரின் நண்பர்கள் 30 பேரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

    அவர்களிடம் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.


    காதலனுடன் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றனர்.

    காதலர்களான இவர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்பு அந்த நபர்கள் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் நகைகளை பறித்துச் சென்று விட்டனர்.

    தனது கண்முன் தன்னுடைய காதலியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்த ஹரிகிருஷ்ணன் வி‌ஷம் குடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோதே, கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

    மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்களை கண்டுபிடித்து கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சாயல்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (24), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நத்தகுளம் தினேஷ்குமார் (24), அஜித்குமார் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்தனர். அவர்களில் பத்மாஸ்வரன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான அஜித்குமார் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் காதலன் ஹரிகிருஷ்ணன் வி‌ஷம் குடித்த தகவலை அறிந்த கல்லூரி மாணவியும் வி‌ஷம் குடித்தார். அவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடம், அருப்புக்கோட்டை முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட்டு மணிமேகலை வாக்குமூலம் பெற்றார்.

    அதில் ரவுடிகள் 3 பேரும் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. மாணவியின் இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் வந்தபோது, கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் என்ற வாலிபர் உயிரிழந்தார்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அரவிந்தன் (வயது 28). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றார்.

    பின்பு அங்கிருந்து தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அரவிந்தன் ஓட்டி வந்துள்ளார்.

    அவர்கள் இருவரும் கள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்பு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரவிந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களை தடுத்த துரைப்பாண்டிக்கும் வெட்டு விழுந்தது.

    இதையடுத்து அரவிந்தன் அந்த கும்பலிடம் இருந்து தப்புவதற்காக அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை விடாமல் துரத்திச்சென்று சோளக்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டியது. இதில் படுகாயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரவிந்தன் கொலை செய்யப்பட்டது குறித்து அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர் துரைப்பாண்டி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏதாவது முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    அதில் நவநீதகிருஷ்ணன் கொலைக்கு பழிக்கு பழியாகவே அரவிந்தன் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. நவநீதகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் அரவிந் தனை பழி தீர்க்க திட்ட மிட்டிருந்ததாக தெரிகிறது.

    அதன்படி நேற்று தனது நண்பருடன் வந்த அரவிந்தனை அருண் பாண்டியன், பார்த்திபன், மதன், பழனிசெல்வம் மற்றும் சிலர் கும்பலாக வந்து வெட்டிக்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கொலை மற்றும் கொலைமுயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.

    தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். 
    ×