என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை கூர்நோக்கு இல்லம்
    X
    மதுரை கூர்நோக்கு இல்லம்

    விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கு- பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் 4 பேருடன் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலிலும், பள்ளி மாணவிகள் 4 பேர் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டு இருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, முதலமைச்சர் உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

    அவர்களிடம் கடந்த 29-ந்தேதி முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குக்கு தேவையான தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாட்சி நகரில் உள்ள ஹரிஹரனின் மருந்து குடோனுக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர். அங்கு ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது ஆகியோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் படுக்கை அறைகள், நவீன குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளும் அங்கு இருந்ததாகவும், அவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் அதே வேளையில், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களான பள்ளி மாணவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதற்காக விருதுநகர் சூலக்கரை சிறுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து சிறுவர்களான 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூர்நோக்கு இல்ல காப்பாளர் மற்றும் சமூக நல குழு உறுப்பினர் முன்னிலையில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதையடுத்து மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 4 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஜ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாணவர்களுக்கு உள்ள தொடர்பு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்களா? வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வரும் 4 பேருடன் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதனடிப்படையில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரின் நண்பர்கள் 30 பேரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

    அவர்களிடம் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.


    Next Story
    ×