என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28), கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி (27). இவர்களுக்கு சக்திகுமார் (5), சசிகுமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 4 நாட்களாக வெம்ப க்கோட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போதுஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    • ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் கந்தபாரதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். கதிரவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகங்காதரன்,மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், செய்தி தொடர்பாளர் கண்ணன், நகரச் செயலாளர்கள் ராமகுரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகதாஸ் (ராஜபாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் செந்தில்காளைபாண்டியன் (ராஜபாளையம்), அலங்காரம் (வத்திராயிருப்பு வடக்கு), குண்டுமணி முத்தையா (வத்திராயிருப்பு மேற்கு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
    • அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவது, குடிநீர்-சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை பணிகளை செய்வது, புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12-ந் தேதி) முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கோரிக்கைக்காக தொடர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர். அப்போது தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் பாண்டியன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம், ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், அமைச்சியாபுரம் காலனியில் நேற்று இரவு திடீரென்று இமானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை போலீஸ் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு வற்புறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • செயலாளர் செல்வராஜன் வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் இதழியல் மற்றும் பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பு, தொழில் வளர்ச்சி மையம் இணைந்து அளித்த பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் "காளீஸ்வரி லைம்ஸ் & ஹனி காம்ப் ஸ்கூப்-6'' வெளியீட்டு விழா ஆகியவை கூட்ட அரங்கில் நடந்தன.

    கல்லூரியின் செயலாளர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்தும் விளக்கினார். சிறப்பு விருந்தினராக ஆங்கில பத்திரிக்கையின் முன்னாள் துணை ஆசிரியர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசுகையில், பயிற்சியில் மாணவர்களின் பங்கு மற்றும் அவர்களின் சிறந்த படைப்புகளைப் பற்றி கூறினார். 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் என் செலின்காயத்ரி, 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் சண்முகவேல், ஆங்கிலத்துறை முன்னாள் மாணவி முத்துமாரி ஆகியோரிடம் இருந்து பின்னூட்டம் பெறப்பட்டது.

    கல்லூரியின் செயலாளர். அ.பா.செல்வராஜன் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை ஸ்வப்னா வரவேற்றார். ஆங்கிலத்துறைத் தலைவி பெமினா நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புற மாணவ- மாணவிகளின் அறிவாற்றலை பெருக்க சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதனை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் டாக்டர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி நடந்தது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் - பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறை மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு இணைந்து 3 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். முதல்வர் விஷ்ணுராம் துவக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கோவை என்த்து டெக்னாலஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் லீட் முனைவர் கே.சுப்பிரமணியன் பங்கேற்றார். அவர் பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இணையதளத்தின் பயன்பாடுகளையும் இந்த துறையில் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார் .

    மேட் லேப் மென்பொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்முறை பயிற்சிகள் அளித்த அவர், அதில் உள்ள ஆராய்ச்சிக்கான தகவல்களையும் எடுத்துரைத்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பா

    ளர்களான கார்த்திகேயன், தனம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுக்கடைகள் அடைக்கப்படும்.
    • உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகயைில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான நாளை (11-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், பார் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை செய்யக்கூடாது.

    தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி நாளை ஒரு நாள் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப்பணியாளர்கள், மதுபான கூடங்களின் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ் மோதி சூப்பர் மார்க்கெட் ஊழியர் பலியானார்.
    • ரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்காசி ரோட்டில் சென்றார்.

    அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பலியான ஆனந்தராஜிக்கு திருமணமாகி மேரி ஷகிலா என்ற மனைவி உள்ளார்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதிய ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த டிரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானித்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

    மேலும் இந்த திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்ஸி என்ற option வரும்போது DIC என தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் (89255 34036) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×