என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
    • கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

    டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

    தொடர்ந்து இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு ஒட்டு கேட்பு கருவியை ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைத்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான். பா.ம.க.வில் கௌரவ தலைவராக ஜிகே.மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு யாராவது 'நான் தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

    எனது இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார் என எனக்குத் தெரியும். விசாரணை பாதிக்கப்பட கூடாது என்பதால் அதனை பற்றி தெரிவிக்கவில்லை என்றார்.

    • அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.
    • பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.

    விழுப்புரம்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி சோழமன்னர்களின் வாரிசுகளை பெருமைப்படுத்த வேண்டும்.

    * அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.

    * பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.

    * செயல்தலைவராக இருந்தும் நடைபயணத்திற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை. அதனால்

    அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும்.

    * அன்புமணி சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

    • புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.
    • தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-

    * பா.ம.க. தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது.

    * புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

    * புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

    * தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.

    * அன்புமணியின் பெயருக்கு பின்னால் என் பெயரை போட கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன் என்றார்.

    • தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.
    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?

    தி.மு.க.விற்கு எதிரான அணிகள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.விற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, தி.மு.க.வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான்.

    * நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம்.

    * தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.

    * தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்வார்களா?

    * தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?

    * எந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை தி.மு.க. எதிர்க்கிறது.

    * இந்திய நிலப்பரப்பில் 81% நிலக்கரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது.

    * போர் நடந்த இடத்தில் கூட மீள்குடியேற்றம் செய்துவிட முடியும். ஆனால் நிலத்தின் வளத்தை எடுத்து விட்டால் அது சுடுகாடாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    விழுப்புரம்:

    உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாக்டர் அன்புமணி அறிவித்திருந்தார்.

    அதன் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தனது வீட்டில் தனது இருக்கைக்கு கீழ்ப்பகுதியில் விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி எஸ்.பி தினகரனிடம் புகார் மனு அளித்திருந்தனர் .

    இந்த நிலையில் 6-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கும்போது ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது .

    அதற்கு தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் 2 நாட்களில் யார் ஒட்டு கேட்கும் கருவி வைத்தார்கள் என்று அம்பலமாகும் என தெரிவித்திருந்தார்.

    உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என கூறியிருந்தார்.

    இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீடு மற்றும் அருகே உள்ள டவர்களில் யார் யார் தொலைபேசி மூலமாக யார் யாரிடம் பேசி உள்ளனர் என விசாரணை நடத்தினார்கள்.

    அதேபோல டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று 3-வது நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தனியார் ஏஜென்சியின் முழுமையான ஆய்வறிக்கை வந்த பிறகு அந்த ஆய்வு அறிக்கையை டாக்டர் ராமதாசிடம் தனியார் ஏஜென்சி ஒப்படைப்பார்கள். அதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இது சம்பந்தமாக போலீசாரிடம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நான் உடல்நலம் சரியில்லாமல் 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கட்சி நலன் வேண்டி பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றேன்.
    • துரை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் என்று நான் கூறியபோது நீங்கள் என்ன சர்வாதிகாரியா என கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    நான் உடல்நலம் சரியில்லாமல் 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கட்சி நலன் வேண்டி பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றேன்.

    ஆனால் நீங்கள் பேசிக் கொண்டும், எழுந்தும் செல்கிறீர்கள். இந்த இயக்கத்தின் ஜீவ நாடியே தொண்டர்கள்தான். தொண்டர்கள் தான் மனித தெய்வங்கள். 31 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இன்றைக்கு இந்த கட்சி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது பொதுக்குழு உறுப்பினர்கள்.

    கட்சிக்கு அவைத்தலைவராக இருந்து அறக்கட்டளை பெயரில் முறைகேடு செய்து கட்சிக்கு துரோகம் செய்து வந்தவரிடம் தொலைபேசியில் (மல்லை சத்யா) பேசுகிறார். வெளிநாட்டில் இருந்து கொண்டு என்னை இழிவுப்படுத்தி பதிவு போடுகிறவரிடம் தொலைபேசியில் பேசுகிறார்.

    இது குறித்து கேட்டால் பேசினேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சக்தியுடன் சேர்ந்துள்ளீர்களோ. இப்போது நமது துணை பொதுச்செயலாளர் இங்கு ஒரு தீர்மானத்தை (மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க) நிறைவேற்றலாம் என்று கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.

    துரை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் என்று நான் கூறியபோது நீங்கள் என்ன சர்வாதிகாரியா என கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.

    அதன் பிறகுதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் 106 வாக்குகளில் 104 வாக்குகளை துரை வைகோ பெற்றார். இந்நிலையில் வாரிசு அரசியல் வேண்டாம் என்று சொன்ன வைகோ இன்று வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என்ற பழி சொல்லுக்கு ஆளாகியுள்ளேன். துரோகத்தை தாண்டி கட்சியை காத்து வருகிறேன். கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எனது தாயார் மாரியம்மாள் 1000 பேரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடி வெற்றி பெற்றேன். காவேரி நதிநீர் பிரச்சனைக்காக இயக்கம் தொடங்கி பாடுபட்டேன். மீத்தேன் எரிவாயு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்றேன். தற்போது பா.ஜ.க.வோடு நான் பேசி வருகிறேன்.

    எனது மகனுக்கு மந்திரி பதவியை பெற்றுத்தர போகிறேன் என்று பொய் தகவலை பரப்புகிறார்கள். தமிழகத்திற்குள் இந்துத்துவா வரக்கூடாது என கடந்த தேர்தலில் முடிவு செய்தோம். திராவிட இயக்கத்திற்கு உறுதியாக இருந்தோம். இன்றும் அதையே கூறுகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி. செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நீங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது.
    • ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    திண்டிவனம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் பா.ம.க.வினர் கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாக்டர் ராமதாசிடம் ஒட்டு கேட்பு கருவி பற்றி அவர்கள் கேட்டு வருகின்றனர். இதையடுத்து அங்குள்ள ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் பெரும்பாலான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
    • பா.ம.க. கட்சிக்கொடியை ராமதாஸ் ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ம.க. கட்சிக்கொடியை அவர் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். தலைவர் அன்புமணி விழாவை புறக்கணித்தார்.

    இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று கூறினார்.

    • நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
    • மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும்.

    திண்டிவனம்:

    சென்னையில் ஏ.கே.மூர்த்தி குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு விழுப்புரம் மாவட்டம் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பினார். அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு அது குறித்து நாளை சொல்கிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    அன்புமணி மற்றும் அவரது தாயார் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பிள்ளையை பார்ப்பது ஒன்றுமில்லை என பதிலளித்தார்.

    மோதல் போக்கு சரியாகிவிட்டதா என கேட்ட கேள்விக்கு மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும். விரைவில் நாங்கள் இருவரும் சந்திப்போம் என டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார்.

    • தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை தான் வைத்திருந்த ஏர்கன் (துப்பாக்கி) கொண்டு சுட்டார்.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விசாரணையில், தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தென்னரசு போதைக்கு அடிமையாக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தென்னரசு, தனது தாய், மனைவி சித்தப்பாவின் மகன் ஆகியோரை சுட்டது தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தென்னரசுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது.
    • தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.

    காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    ×