என் மலர்
வேலூர்
- தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை.
- நான் சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன.
இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்தார். இதனால் நேற்று மனம் உடைந்து பரானா மருந்து குடித்தார். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து ஜாபர் குடித்துவிட்டு மகன்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட ஜாபருடைய 2-வது மகன் நபில் (வயது 13) என்பவர் அவனது சிறிய சைக்கிளில் போலீஸ் நிலையம் சென்றான். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் தெரிவித்தான்.
தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை. என்னுடைய அண்ணன் கபில் (15) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.
நான் இங்கு சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். என்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன்.
தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதால் மனவேதனை அடைந்த என்னுடைய அம்மா நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என் தந்தையை தயவுசெய்து கைது செய்து ஜெயிலில் அடையுங்கள் என கூறினான். புகாரின் பேரில் ஜாபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி பேலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்
- 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் சப் டிவிஷன்களில் சிறப்பு குறை தீர்வு முகம் இன்று நடந்தது.
வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடந்த குறைதீர்வு முகாமை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
வழக்கு சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில் அந்தந்த சப் டிவிஷனில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நீண்ட நாள் தீர்வு காணப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு சம்பந்தப்பட்ட 2 தரப்பை சேர்ந்தவர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தி காணப்படுகிறது. தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவதி
- அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணிக்காக மகிமண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் ஏற்றி வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண்ணை கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே டிரைவர் லாரியை இயக்கி உள்ளார்.
அப்போது சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கியது. இதில் 22 மின்சார கம்பங்கள் இழுத்து வரப்பட்டு உடைந்து கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இரவில் மூழ்கியது.
இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்துள்ளனர்.
மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 32). இவர் ஆயுதப் படை பிரிவில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் 42 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு ஜெயபால் வேலூரில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சதீஷ் காகிதப்பட்டறையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
காகிதப்பட்டறை ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக சதீஷ் பைக்கும், ஜெயபால் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஜெயபால் படுகாயமும், சதீஷ் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபாலை மீட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லேசான காயமடைந்த சதீஷ் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் மன உளைச்சலில் காணப்பட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்தவர் சுபான் ( வயது 19). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள லாரி உடைக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவரது தாயார் வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அதேபோல் இவருடைய அண்ணனும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுபான் தன்னுடைய தாத்தாவுடன் செதுவாலையில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் சுபான் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுபான் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தாத்தா வீட்டின் கதவை தட்டினார்.
நீண்ட நேரமாகியும், கதவு திறக்காததால் உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுபான் தூக்கில் தொங்கியவாறு துடிதுடித்துக்கொண்டு இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுபான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காளை மாடுகள் சன்டையிட்டதால் வாக்குவாதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அம்பானி நகரை சேர்ந்தவர் இணையதுல்லா. இவர் காளை மாடு ஒன்னறை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இணையதுல்லா தனது காளை மாட்டை ரங்கநாதர் நகரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.
அப்போது இணைய துல்லா காளை மாடும், பக்கத்து நிலத்தில் கட்டி வைத்திருந்த கோபு (வயது 51) என்பவரின் காளை மாடும் ஒன்றுடன் ஒன்று சன்டை யிட்டது.
இது தொடர்பாக இணையதுல்லா, கோபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கோபு, இணையதுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இணையதுல்லா பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபுவை கைது செய்தனர்.
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).
இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.
இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்
- ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது என்றார்
வேலூர்:
வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் ஜாப்ரா பேட்டை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் செயல்ப டுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திடீரென ஆய்வு செய்தார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? நன்றாக இருக்கிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சரால் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளி களில் தொடங்கப்பட்டு அதனை கிராமப்புற பள்ளி களிலும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது. மாணவர்களிடம் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு திட்டம் தொடங்கபட்ட பின்னர் தலைமை ஆசிரி யர்களும், மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது.
மாணவர்கள் வருகையும் உயர்ந்துள்ளது. உதயசூ ரியனை கைகளால் மறைக்க முடியாது. முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களிடத்திலும் மீண்டும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.
முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5-ந்தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
கலெக்டர் குமாரவேல்பாண் டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல், உயர்,நடு நிலை, தொடக்கப்பள்ளிக ளில் காலியாக உள்ள ஆசி ரியர் பணியிடங்களில் முற்றிலும் தற்காலிக நிய மிக்கப்பட உள்ளது.
காலிப்பணியிடங் களை தற்காலிகமாக நிரப்பிடும் போது பழங் குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மற்றும் பழங்குடி யினர் இல்லாதபட்சத்தில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசி ரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்விதிட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக் க்கும் முன்னுரிமை வழங்கப்ப டும்.
அல்லேரி, தொங்கு மலை, குடிகம் ஆகிய பகு திகளில் உள்ள தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தற் போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.
முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன் னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசி ரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) வரைய றுக்கப்பட்ட கல்வி தகுதி களுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்ற வர்கள்.
இடைநிலை ஆசிரி யர்கள் நியமனத்தில் பட் டியலினத்தவருக்கு முன் னுரிமையும் கடைபிடிக்க வேண்டும். பள்ளி அமைந் துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும்.
விண்ணப்பதாரர்க ளிடமிருந்து எழுத்து மூல மான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளு டன் மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும்
வேலூர்:
முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை பொது மேடையில் அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் தலைமையில் வேலூர் எஸ்.பி அலுவ லகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ லியோனி சென்னையில் பொது மேடையில் வெறுப்பு ணர்வை தூண்டும் விதமாகவும் இரு பிரிவின ருடைய மோதல் உருவாகும் விதமாகவும் பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசி உள்ளார்.
அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதேபோல் அவருடைய யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது எனவே ஐ.லியோனி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
அவருடன் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் ெதாழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலர் ராஜன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
- புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பொண்ணுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் செய்வதால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தட்டி கேட்கும் போது, டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அது குறித்து உடனடியாக டிரைவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும்.
மாணவர்கள் பஸ்சில் அதிகம் ஏறும் இடங்களான வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாகாயம், தொரப்பாடி, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சேரும்போது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
அதனை தடுக்க போலீசார் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் பேசுகையில்:-
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு கேமரா கூட தற்போது வேலை செய்யவில்லை. பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தடுக்க போலீசார் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.
ஆந்திரா மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் கிரீன் சர்கிள் வழியாக வந்து முத்து மண்டபம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.
ஆனால் அந்த பஸ்கள் செல்லியம்மன் கோவில் வழியாக எதிர் திசையில் வந்து பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.
இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.
- கும்கியாக மாற்ற ஆலோசனை
- கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததால் ஆக்ரோஷமாக காணப்பட்டது
வேலூர்:
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குடிபாலா மண்டலம், 190 ராமாபுரம் ஹரிஜன வாடா கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை ஒற்றை காட்டு யானை மிதித்துக் கொன்றது.
தகவல் அறிந்து அங்கு சென்ற ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று முன்தினம் ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.
காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள சூளைமேட்டு பகுதியில் பாலகிருஷ்ணன் (வயது 60) என்ற விவசாயின் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை தும்பிக்கையால் தாக்கி வீசியது.
இதில் ஆடுகள் மற்றும் மாடுகள் யானையை கண்டு பயத்தில் கத்தியது. சத்தம் கேட்டு வெளியே வந்த பாலகிருஷ்ணன் மனைவி வசந்தா (54) என்பவரை மிதித்து கொன்றது.
தொடர்ந்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் அந்த யானை தமிழக வனப்பகுதியில் இருந்து தப்பித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் ஏரி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியது.
இரு மாநில வனக்குழுவினர் 100 பேர், ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான ஜெயந்த், விநாயகா ஆகிய 2 யானைகள் மூலம், அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 3 மணியளவில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபெய்து வந்ததால், மாலை 4.30 மணியளவில் மற்றொரு மயக்க ஊசி செலுத்தி, கும்கியானைகள் மூலம் யானை பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சித்தூர்மாவட்டம் பலமனேர் பகுதியில் உள்ள யானைகள் முகாமிற்கு லாரி மூலம் பிடிபட்ட யானையை கொண்டு சென்றனர். பின்னர் யானை திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பதி வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானை உடல்நிலை குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தனது கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததாலே அது ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதனுடன் தற்போது மற்ற யானைகள் இருப்பதால் ஆக்ரோஷம் குறைந்து அமைதியாக காணப்படுகிறது.
இருப்பினும் அதன் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதனை கும்கி யானையாக மாற்றவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு கும்கி யானையாக மாற்ற, ஒற்றை யானைக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






