என் மலர்
வேலூர்
- நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன் படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு அவைத் தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர் ஆனந்த் எம்.பி., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமுலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தக் கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. தி.மு.க. திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுக்கு மேல் கடந்து விட்டது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் நூறாண்டு கண்ட கட்சி.
கம்யூனிஸ்ட் கூட கிடையாது. அண்ணா பொதுச்செயலாளர், நாவலர் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொதுச் செயலாளர் அடுத்து உங்கள் ஆதரவால் நான் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன்.
வேறு எவனாவது இருந்தால் எம்ஜிஆரிடம் முதல்ல போய் சேர்ந்திருப்பார். எம்.ஜி.ஆர். என்னை அழைத்த போது என் கட்சி தி.மு.க. என் தலைவர் கலைஞர் என்று கூறினேன்.
என் தம்பி எவ்வளவு மன வலிமை படைத்தவன் என்பது எனக்கு தெரியும் என சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். அரசியலில் சில நேரங்களில் ஏமாற்றம் வரும் சில நேரங்களில் அவமானம் வரும் சில நேரங்களில் வெறுப்பு வரும் அது பறந்து போய்விடும்.
எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எல்லாம் நினைத்து பார்த்தால் நான் கூட மிக சவுகரியத்தோடு அவரோடு இருந்திருப்பேன்.
நான் உங்களை கேட்டுக் கொள்வது ஒரு பெரும் விழாவை (தி.மு.க. பவள விழா) வரலாற்று சிறப்புமிக்க விழாவாக வரலாற்றில் பதிக்கும் அளவு நடத்திக் காட்ட வேண்டும்.
வேலூர் தி.மு.க. வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பதிவு செய்ய நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் நந்தகுமார் அந்த பெருமையை பெற வேண்டும் இன்னும் சொல்லப்போனால் நான் செய்ய வேண்டும் என்று கூட விரும்புவதில்லை .
நான் எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தால்தான் விழாவாக தெரியும்.
இல்லாவிட்டால் பொதுக்கூட்டமாக தெரியும் எனவே நம்முடைய மாவட்டத்துக்கு அவர் வைத்திருக்கிற பெயர் புகழ் எல்லாம் கொஞ்சம் மாற்று குறைய ஆரம்பித்து விடாமல் வைத்துக் கொள்ளுங்கள் .
மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.அவர் ஆட்சியை நடத்த போகிறாரா? அல்லது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடத்தப் போகிறாரா? என்பது மட்டும் தான் இப்பொழுது கேள்விக்குறி.
விரைவில் தேர்தல் வர உள்ளது. சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்
- அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- வருகிற 17-ந் தேதி நடக்கிறது
வேலூர்:
வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க பவள விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றிபெற செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் டிசம்பர் 17-ந் தேதி சேலம் மாநகரில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி திறன் பட செயலாற்றி வரும் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் அவரது அரசியல் நகர்வுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க துணை நிற்கும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- பெண்கள், குடியிருப்பு வாசிகள் அச்சம்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெரு ஓரங்களில் குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சத்துவாச்சாரி பகுதிகளில் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு இல்லாத பூங்காக்களே இல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதைவிட தெருக்களில் உள்ள மரங்களின் அடிவாரத்தில் பகல் நேரத்தில் கூட அமர்ந்தவாறு குடிக்கின்றனர்.
இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சமடை கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்டுள்ள நடைபா தைகளிலுயும் அமர்ந்து மது குடிக்கின்றனர்.
குடிமகன்களுக்கு பயந்து குடியிருப்பு வாசிகளும் அவர்களை எச்சரிக்கை செய்ய பயப்படுகின்றனர்.
இதே நிலை வேலூர் காட்பாடியில் உள்ள அனைத்து இடங்களிலும் நீடிப்பதாக கூறுகின்றனர். போலீசார் முறையான ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கலெக்டர், எம்.எல்.ஏ. விற்பனையை தொடங்கி வைத்தனர்
- 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதனையொட்டி, பள்ளிகொண்டாவில் நடைபெற்ற உழவர் சந்தையில் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர்.
மேலும், உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டைகள், எடை எந்திரங்கள் அனைத்து இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
பள்ளிகொண்டா உழவர் சந்தையில் தற்போது 16 கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன. புதிய உழவர் சந்தை மூலம் பள்ளி கொண்டா, வெட்டு வானம், பிராமணமங்கலம், கந்தனேரி, வேப்பங்கால், ஐதர்புரம், பசுமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறுவர்.
வெளிச்சந்தையை விட குறைவான விலையில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, தாசில்தார் வேண்டா, பி.டி.ஓ.க்கள் சுதாகரன், சாந்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா, செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்க டேசன், பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
- 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன
- மீன்களின் வரத்து அதிகரித்தது
வேலூர்:
வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.
இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலை யில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது. சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ 350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி 200-க்கும், கட்லா 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி 7140, வவ்வால் ரூ.450க்கும், டேம்வவ் வால் ரூ.150க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ள தாக வியாபாரிகள் தெரி வித்தனர். விலை குறை வால் அசைவப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 12 குற்ற வழக்குகள் உள்ளன
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பழனி (வயது 25). ரவுடியான இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை தாக்கி ரூ.1,000 பறித்தார்.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து பழனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தார்.
பழனி மீது வேலூர் வடக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, ரத்தினகிரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவ ேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் பழனியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
- பொதுமக்கள் நீந்தி சென்ற அவலம்
- மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திக்காடு ஊராட்சி, வெங்கலபாறை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களும் நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகில் தான் ஆற்றை கடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
மழைக்காலங்களில் ஆற்று நீரை கடந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் நஞ்சுண்டாபுரம் பஸ் நிறுத்தம் வந்து அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்கின்றனர்.
இவர்கள் நாகநதி, கணியம்பாடி மற்றும் நஞ்சுண்டாபுரம் செல்ல சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வெங்கலப்பாறை கிராம மக்கள் ஆஞ்சநேயர் கோயில் முகப்பை அருகேதான் ஆற்றில் இறங்கி தண்ணீரை கடந்து சிமரத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கணியம்பாடி, நஞ்சுண்டாபுரம், நாகநதி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகநதி ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நாகநதி ஆற்றை கடந்து சென்றனர். இதில் நஞ்சு கொண்டாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்யும் பணியாளர் செல்வம் (வயது 56) நேற்று வழக்கு போல் வேலைக்கு வந்தார்.
வேலை முடிந்து மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு செல்ல ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகே சென்றார். ஆற்றில் இறங்க முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் மழை நீர் குறையும் என அங்கேயே காத்திருந்தார். ஆற்றில் மழை வெள்ளம் குறையாததால் நேற்று இரவு 8 மணியளவில் அவர் தான் உடுத்திருந்த உடைமைகளை கழட்டி கையில் வைத்துக் கொண்டு, மார்பளவு தண்ணீரில் இறங்கி நீந்தி ஆற்றைக் கடந்து வீட்டுக்கு சென்றார்.
நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் உயிரிழந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் உயிரிழந்தபோது அவரது உறவினர்கள் ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகநதி ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நாகநதி ஆற்றைக் கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் போலீஸ் உட்கோட்டங்களில் சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. வேலூர் உட்கோட்டத்துக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நடந்தது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு முகாம், போலீஸ் உயர்அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டு நீண்டநாட்கள் தீர்வு காணப்படாமல் வழக்குகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் வரவழைத்து அவர்களிடம் பேசி சுமூக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறப்பு முகாமில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையேயும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டனர்.
வேலூர் உட்கோட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் 119 வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதேபோன்று காட்பாடி உட்கோட்டத்தில் 310 வழக்குகளில் 103 வழக்குகளும், குடியாத்தம் உட்கோட்டத்தில் 160 வழக்குகளில் 160 வழக்குகளும் என்று 3 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 589 வழக்குகள் விசாரணை எடுத்து கொள்ளப்பட்டு 343 வழக்குகள் தீர்வு காணப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 4 மணி நேரம் போராடி மீட்டனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 19), கல்லூரி மாணவன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப் பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய அஜித் குமாரின் சடலத்தை சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 மலை கிராம போக்குவரத்து துண்டிப்பு
- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் இருந்து பலாம்பட்டு மலை ஊராட்சிக்கு செல்லக்கூடிய சாலையில் தொங்குமலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் செல்லக்கூடிய ஆறு செல்கின்றது. இந்த ஆற்றை கடந்து தொங்குமலை, பாலாம்பட்டு, நெக்னி, தானிமரத்தூர், அரசமரத்தூர், தேக்குமரத்தூர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர்.
மலைகளில் இருந்து மழைநீர் சிறு ஓடைகள் மூலம் ஆறாக உருவெடுத்து அமிர்தி வழியாக சென்று நாகநதி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போது அந்த வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, தொங்குமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழையின் காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு தொங்கும் மலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது.
இதனால் நேற்று முதல் 12 கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டடுள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, கடும் அவதி அடைந்துள்ளனர். நேற்று இரவு முதல் அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
தரைப்பாலத்தின் 2 பக்கமும் தடுப்புச் சுவர்கள் இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குழந்தைகளுடன் அந்த வழியாக செல்லும் போது மிகவும் அச்சத்துடன் பாலத்தை கடக்கிறோம்.
இரவு நேரத்தில் அந்த வழியாக பயணிக்கும்போது, தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்யும் போது சுமார் 6 மாதம் காலம் தரை பாலத்தை மழைநீர் மூழ்கடித்துவிடும்.
அப்போது எங்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கும்.
தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் ஆற்றில் மழை நீர் ெசல்கிறது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
எனவே தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிப்பதோடு, தரைபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைத்து மலைவாழ் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வேலூரில் நாளை தொடக்கம்
- வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கேலோ இந்தியா பெண்கள் லீக் போட்டிகள் வேலூர் தந்தை பெரியார் பூங்காவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 5 மற்றும் 3 பேர் கொண்ட அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதிக்கு பின்னர் பிறந்த பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்கும் பெண்கள் அசல் ஆதார் அட்டை, பிறந்தநாள் சான்றிதழை கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.






