என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் நடந்து சென்ற முதியவர் கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 60), தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணியளவில் இருளாக இருந்த இடத்தில் நடந்து சென்றபோது கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார்.

    இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சங்கரை பொதுமக்கள் மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கர் நடந்து செல்லும்போது கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது மதுபோதையில் விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வதை தடுக்க தலா 15 பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    அதையடுத்து வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. பொது இடங்களில் வரையப்பட்டிருந்த கட்சி சின்னங்கள் அழிக்கப்பட்டது. மேலும் கட்சி தொடர்பான பேனர்கள் அகற்றப்பட்டன. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் படங்கள் மறைக்கப்பட்டன.

    தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், நகை, சேலை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கூடாது. அவ்வாறு எடுத்து செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 15 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தேர்தல் அலுவலர், சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஆகிய 3 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை என்று 3 பிரிவுகளாக பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் அலுவலர்கள், பறக்குபடை, நிலை கண்காணிப்பு குழுவினருக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதையடுத்து பறக்கும்படை, நிலைகண்காணிப்பு குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பண பட்டுவாடாவை தடுக்க வாகன தணிக்கையை தொடங்கினர். வேலூர் சட்டமன்ற தொகுதி பறக்கும்படையினர் நேற்று மாலை 5 மணி முதல் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே, கோட்டை சுற்றுச்சாலை, வேலப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் உள்ளதா என்று தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
    உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
    காட்பாடி:

    உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் கனகவேல், ராஜவேலு ஆகியோர் புற்றுநோய் குறித்து விளக்க உரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை உணர்ந்து பெண் போலீசார் தங்கள் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்கு புற்றுநோய், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் தொண்டை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    புற்று நோய் பாதித்தவர்கள் மனம் தளராமல் டாக்டரின் ஆலோசனை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பெண் போலீசார் பல்வேறு குடும்ப வேலைகளுக்கிடையே பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தொலைவு அல்லது ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் உறங்கவேண்டும். அதேபோல 18 முதல் 19 வயதில் கருவுறும் பெண்கள் உடல் பலவீனம் அடைவதால் பிரசவத்தின் போது உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த முகாமில் உள்ள அரசு டாக்டர்களிடம் பெண் போலீசார் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு அறிந்து தங்கள் குடும்பத்தினருக்கும், தாங்கள் பணிபுரியும் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தாய்மார்களுக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜோதிவேல், மணிவண்ணன், சித்ரா, மாதுரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
    தேர்தலுக்காக அவசர கோலத்தில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
    ஆம்பூர்:

    விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஆம்பூர் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் ரெயில்வே குகை வழிப்பாதை வழியாக நடந்து சென்று அந்த பகுதியை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 110 விதியின் கீழ் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஆம்பூர் பெத்லகேம் ரெயில்வே மேம்பால பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக உள்ள இப்பகுதியில் நடப்பதற்கே முடியாமல் உள்ளது.

    அ.தி.மு.க. அரசின் அறிவிப்புகள் அனைத்தும் கிடப்பில் தான் உள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எதிலும் உண்மையில்லை. அவை அனைத்தும் கிடப்பில் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய நேரத்தில் பல அறிவிப்புகளை சில நாட்களாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அவை அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டவை தான்.

    நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பால் மகளிருடைய வாக்கு அ.தி.மு.க.விற்கு போகாது. ஏனெனில் பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள். மகளிர் குழுக்களை கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமலேயே வைத்திருக்கின்றனர். காவல் துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில் மகளிருக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.ரகோத்தமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக அகரம்சேரி பகுதியில் கனிமொழி எம்.பி. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாய் தயாரிக்கும் தொழிலாளர்கள், பாய் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து மாதனூர் ஒன்றியம் ஜமீன் கிராமத்தில் கரும்பு விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுடைய எந்த பிரச்சினையையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகள் கேட்ட கரும்பு ஆதார விலையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை கூட ஆட்சியாளர்கள் கேட்கவில்லை. தற்போது கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட வைக்க தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து விவசாயம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தொழில் தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தென்பென்னை - பாலாறு இணைப்பு திட்டம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஏற்க மாட்டோம். தொடர்ந்து தி.மு.க. எதிர்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ஆம்பூர் தொகுதியில் பிரசாரம் முடித்த கனிமொழி ஆம்பூரில் உள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் கட்சியினருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.
    வேலூர் சரகத்தில் பணியாற்றி வந்த 55 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 55 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த லதா திமிரிக்கும், வேலூர் தாலுகாவில் பணியாற்றி வந்த கருணாகரன் சத்துவாச்சாரிக்கும், சத்துவாச்சாரி புனிதா அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் பாலசுப்பிரமணியன் தேசூருக்கும், காட்பாடி நந்தகுமார் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், லத்தேரி கோவிந்தசாமி போளூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    குடியாத்தம் தாலுகா பார்த்தசாரதி திருவண்ணாமலை டவுனுக்கும், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா உமராபாத்துக்கும், குடியாத்தம் அனைத்து மகளிர் சியாமளா கீழ்பென்னாத்தூருக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் நாகராஜன் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும், வேலூர் குற்ற ஆவண காப்பக சரஸ்வதி திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பகத்துக்கும், வேலூர் நக்சல் சிறப்பு பிரிவு ஜனார்த்தனன் கலசபாக்கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உள்பட வேலூர் சரகத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 55 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி.காமினி பிறப்பித்துள்ளார்.
    ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் இன்று தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் இன்று தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

    முன்னதாக ஆம்பூர் அடுத்த அகரம் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

    இதையடுத்து அகரம் சேரியில் இயங்கி வரும் பாய் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அகரம்சேரி முதல் குடியாத்தம் சாலையில் உள்ள பாலாற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து மாதனூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஆம்பூர் அடுத்த ஜமீனில் உள்ள கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஆம்பூர் பஸ் நிலையத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    சான்றோர் குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஆம்பூர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    கணவரை மீட்டுத்தரக்கோரி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை பாரதியார்நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 30). இவர் நேற்று காலை திடீரென வேலூர் அண்ணா சாலையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சங்கீதா போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும் காகிதப்பட்டறையை சேர்ந்த சத்யா என்ற சத்தியமூர்த்தி (35) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சத்தியமூர்த்தி, வேலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவராக உள்ளார்.. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து எனக்கு தெரியவரவே அவரின் தாயாரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை துன்புறுத்துகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில் வேலூர் மகளிர் போலீஸ் நிலைய போலீசார் மனு குறித்து விசாரித்தனர். ஆனால் அவரை அழைத்து விசாரிக்கவில்லை.

    எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே பிரச்சினை காரணமாக சங்கீதா கடந்த மாதம் மாவட்ட வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. வேலூர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    வேலூரிலிருந்து பேரணாம்பட்டு, சேலம், ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றனர்.

    இரவு 11.40 மணி அளவில் பள்ளிகொண்டா அருகே கந்தன் ஏரி பகுதியில் அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தன.

    சேலம் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திடீரென மர்மநபர்கள் சாலையின் குறுக்கே வந்து பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    அதேபோல் பேரணாம்பட்டு, ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் மீது கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள் பஸ்களை நடுவழியில் நிறுத்தினர். பயணிகள் இறங்கி கல்வீசியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருட்டில் ஓடி தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மலைகளுக்கு தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்காபுரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகரை சுற்றிலும் சிறிய அளவிலான மலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கோடைக்காலத்தில் இந்த மலைகளில் காணப்படும் செடி, கொடி, புற்கள் வெயில் வெப்பத்தினால் காய்ந்து விடும். அவற்றை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தும் சம்பவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினர் போலீசார் எடுத்தமுயற்சிகள் எதுவும் கை கொடுக்கவில்லை.

    இந்தாண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்பே கடந்த 20-ந் தேதி மாலை ரங்காபுரம் மலையில் உள்ள செடி, புற்களை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் மலைகளில் தீ வைப்பதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் ரங்காபுரம் மலையில் சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். செடி, கொடி, புற்கள் தீப்பற்றி மளமளவென்று எரிந்தது. அதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. தகவலறிந்த வேலூர் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்காபுரம் பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டை அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தில் வேலூர் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 54), சுதாகர் (41) ஆகிய 2 பேர், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற போது கையும், களவுமாக பிடித்து, மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தன், சுதாகர் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளாக போராட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அகவிலை உடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் சுண்ணாம்புக் காரத் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி காகிதப்பட்டறை பகுதியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது டாஸ்மாக்கடையின் அருகே உள்ள கடைக்கு லாரியில் இருந்து பிளாஸ்டிக் மூட்டைகள் இறக்கப்பட்டன.

    இதைக் கண்ட மாநகராட்சி அதிகாரிகள் லாரி மற்றும் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

    முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியில் இருந்து 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு ‘சீல்' வைத்தனர்.

    அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், லாரி உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடந்த 3 மாதங்களாக லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இறக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதையடுத்து வேலூர் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்கப்பட்ட கடைகளின் விவரங்கள் பெறப்பட்டன.

    அதில், வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள 3 கடைகளுக்கு அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து கமிஷனர் உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் வேலூர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள 3 கடைகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் மட்டும் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அக்கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை இன்று (வியாழக்கிழமை) செலுத்தாவிட்டால் அந்த கடைக்கு ‘சீல்' வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×