search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை படத்தில் காணலாம்.
    X
    வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை படத்தில் காணலாம்.

    வேலூரில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    வேலூர் சுண்ணாம்புக் காரத் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி காகிதப்பட்டறை பகுதியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது டாஸ்மாக்கடையின் அருகே உள்ள கடைக்கு லாரியில் இருந்து பிளாஸ்டிக் மூட்டைகள் இறக்கப்பட்டன.

    இதைக் கண்ட மாநகராட்சி அதிகாரிகள் லாரி மற்றும் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

    முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியில் இருந்து 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு ‘சீல்' வைத்தனர்.

    அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், லாரி உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடந்த 3 மாதங்களாக லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இறக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதையடுத்து வேலூர் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்கப்பட்ட கடைகளின் விவரங்கள் பெறப்பட்டன.

    அதில், வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள 3 கடைகளுக்கு அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து கமிஷனர் உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் வேலூர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள 3 கடைகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் மட்டும் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அக்கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை இன்று (வியாழக்கிழமை) செலுத்தாவிட்டால் அந்த கடைக்கு ‘சீல்' வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×