என் மலர்tooltip icon

    வேலூர்

    கிணற்றில் குதித்தபோது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் வாலிபர் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 20). நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தபோது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் 50 அடி இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.

    இதனையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், காவல் துறையினர், ஊரகவளர்ச்சி துறையினர் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    குடியாத்தம் நகராட்சி, வேலூர் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனம் என 5 வாகனங்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்தனர். ஆனாலும் தண்ணீர் குறையவில்லை. அதைத்தொடர்ந்து பாதள கொலுசு மூலம் கிணற்றில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை குடியாத்தம் வந்தனர். அதற்குள் காலை சுமார் 7.30 மணி அளவில் பாதாள கொலுசு மூலம் ஆகாஷின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு ஆகாஷ் உடல் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பழைய மீன் மற்றும் கோழி இறைச்சிகள் இருந்தது. சுமார் 10 கிலோ இறைச்சி, தரமற்ற உணவு மசாலா வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலை, காந்திரோடு பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது சுகாதாரம் இல்லாமல் இருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். மேலும் சுகாதாரமற்ற உணவு வைத்திருந்ததாக 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பழைய மீன் மற்றும் கோழி இறைச்சிகள் இருந்தது. சுமார் 10 கிலோ இறைச்சி, தரமற்ற உணவு மசாலா வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அங்கிருந்த டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    காதலுக்கு ரேவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை, சிலம்பரசன் அழைத்துவந்து, வேலாடும் தணிகை மலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சிலம்பரசன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவர் தினமும் காட்பாடியிலிருந்து ரெயிலில் அரக்கோணம் சென்று வேலை செய்து வருகின்றார். இந்தநிலையில் அரக்கோணம் பரமேஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செவிலியர் ரேவதி (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு ரேவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை, சிலம்பரசன் நேற்று முன்தினம் அழைத்துவந்து அணைக்கட்டு அடுத்த மூலை கேட் பகுதியில் உள்ள வேலாடும் தணிகை மலை முருகன் கோவிலில் வைத்து திருமணம்செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேவதியின் பெற்றோர், உறவினர்கள் சிலம்பரசன் வீட்டுக்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காதல் ஜோடிகள் அங்கிருந்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரேவதி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால் சிலம்பரசனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
    ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு சென்ற ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புடைய வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கம், வெள்ளி ஆகியவை கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையின் சென்னை கோட்ட குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்திற்கு வந்த அந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அந்த ரெயிலில் இருந்த சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 42), பிரகாஷ் (28), சுரேஷ் (35), நித்தியானந்தம் (35) ஆகியோர் வைத்திருந்த பைகளை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அதில் 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், கொலுசுகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூ.32 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. அவர்களிடம் வெள்ளி மற்றும் பணத்திற்கான போதிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதற்குள் ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    சேலத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்த ரொக்கம், வெள்ளியை எடுத்துக்கொண்டு போலீசார் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் பணம் ஆகியவை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சேலத்தை சேர்ந்த 4 பேரும் நகை பட்டறை வைத்துள்ளவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் வெள்ளி மற்றும் ரொக்கத்தை கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.1 கோடியே 38 லட்சம் என கூறப்படுகிறது.
    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சாலையை கடந்த 7 வயது சிறுவன் லாரியின் அடியில் சிக்கி உயிர்த்தப்பிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலையில் நேற்று முன்தினம் காலை 7 வயது சிறுவன் ஒருவன் சாலையின் ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு வேகமாக ஓடி வந்தான். அப்போது ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது.

    இந்த விபத்தில் சிறுவன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லாரியின் பின்பக்கத்தில் இருந்து அந்த சிறுவன் சிறு காயங்களுடன் எழுந்து வந்தான். லாரியின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டதால், லாரியின் சக்கரத்தில் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியது தெரியவந்தது.

    அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பிவைத்தனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த பதிவுகளை அந்த கடைக்காரர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் லாரியில் சிக்கிய சிறுவன் உயிர் தப்பிய காட்சி வைரலானது.
    வேலூரில் 2-டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட அரசு டாக்டர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 47) இவர் கடந்த 2004-ம் ஆண்டு அரசு டாக்டராக பணியில் சேர்ந்தார்.

    வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு கடந்த 43 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று திடீரென உடல்நிலை மோசமானதால் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் ஹேமலதா இறந்தார்.

    டாக்டர் ஹேமலதா கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டுள்ளார்.

    இருந்தாலும் அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் நோய் மிக தீவிரமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில்:- கொரோனாவுக்கு பலியான அரசு டாக்டர் ஹேமலதா கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளார். ஆனால் அவருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகளவில் இருந்தது. 40 நாட்களுக்கு மேலாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோயின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்ட பிறகும் டாக்டர் ஹேமலதா எப்படி இறந்தார்? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    அவருடைய மருத்துவ அறிக்கை, உடல் நிலை பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் சேகரித்து வருகிறோம். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரும் அவர் எப்படி இறந்தார் என்பது இந்த ஆய்வில் தெரிய வரும் என்றனர்.

    2-டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட அரசு டாக்டர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனாவுக்கு அரசு பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம், உடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 47). வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு கடந்த 43 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் ஹேமலதாவின் உடல்நிலை திடீரென மோசமானது. அதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    உயிரிழந்த டாக்டர் ஹேமலதா கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாகவும், தொற்றின் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனாவுக்கு அரசு பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம், உடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஹேமலதாவிற்கு டேவிட் சுரேஷ் என்கிற கணவரும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.
    கர்ப்பிணிகளிடையே தடுப்பூசி குறித்த அச்சம் விலகவில்லை. குறைந்த அளவிலான கர்ப்பிணிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது‌.

    அங்கு அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கண்மணி முன்னிலையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் ஒரேநாளில் மாவட்டத்தில் 12 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

    எனினும் கர்ப்பிணிகளிடையே தடுப்பூசி குறித்த அச்சம் விலகவில்லை. குறைந்த அளவிலான கர்ப்பிணிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் மற்றும் தயக்கம் காட்டுகின்றனர். ஆர்வம் உள்ள சிலருக்கு அவர்களின் குடும்பத்தினர், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறுவதால் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. எனவே கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுக்கின்றனர்.

    தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் 12 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களின் விருப்பத்தின்பேரில் தடுப்பூசி செலுத்தப்படும்.


    அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளால் வேலூர் கோட்ட தபால் நிலையங்களில் மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சி.எம்.சி. மருத்துவமனை, காந்திநகர், குருவராஜபாளையம், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, ஒடுகத்தூர், சத்துவாச்சாரி, தொரப்பாடி, ஓசூர், வடுகந்தாங்கல், விரிஞ்சிபுரம், வேலூர் கோட்டை, சைதாப்பேட்டை, தலைமை தபால் நிலையம் போன்றவற்றில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா பரவலையொட்டி இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
    கவுதம் மற்றும் சிறுமி சலவன்பேட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்கு செல்ல வேலப்பாடி பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், வேலூரை அடுத்த கம்மவான்பேட்டையை சேர்ந்த கவுதம் (வயது 30) என்பவர் சிறுமியை காதலித்ததும், சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கலையரசி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கவுதம் மற்றும் சிறுமி சலவன்பேட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்கு செல்ல வேலப்பாடி பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் கவுதமை கைது செய்தனர். சிறுமி தொரப்பாடியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    சிறுமி கடத்தலுக்கு கவுதமுக்கு உதவிய திருவண்ணாமலை மாவட்டம் கேளூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (20), கம்மவான்பேட்டையை சேர்ந்த தனுஷ் (20), மோத்தக்கல்லை சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த செந்தில்குமாரி கே.வி.குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் சரகத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அசோகன் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு தாலுகா போலீஸ்நிலையத்தில் பணியாற்றி வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த செந்தில்குமாரி கே.வி.குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.
    வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மோட்டூர் பகுதியில் வீடுகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மோட்டூர் பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டூர் பிரசாத்நகர் 3-வது தெருவில் ஒரு வீட்டின் முன்பு ஆட்டோ, மினிலாரி நின்று கொண்டிருந்தது. 2 பேர் அவற்றில் இருந்து மூட்டைகளை இறக்கி அந்த வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.

    அதைக்கண்டு சந்தேகம் அடைந்த குழுவினர் உடனடியாக ஆட்டோ, மினிலாரியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகளை கண்டதும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். குழுவினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, மினிலாரி மற்றும் வீட்டில் என்று மொத்தம் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து 2 பேரிடமும் உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த மினிலாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் ராமச்சந்திரன் (வயது 38), சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் மற்றும் டிரைவர் இம்ரான் (26) என்பதும், வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை பெற்று வீட்டில் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ஆட்டோ, மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபகிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதுகுறித்து வேலூர் உணவுப்பொருள் பாதுகாப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரன், இம்ரான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கைதான ராமச்சந்திரன் மீது ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
    ×